PT Web Explainer: திஷா ரவி கைது – ‘தேசத் துரோகம்’ அளவுக்கு ‘டூல்கிட்’ பயங்கரமானதா?! | Disha Ravi arrest and Toolkit Case Explained | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Disha-Ravi-arrest-and-Toolkit-Case-Explained

எது தேசத் துரோகம்? எது கருத்துரிமை? – இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடவும், இதுகுறித்து பொதுத் தளத்தில் தீவிரமாக விவாதிக்கவும் வித்திட்டிருக்கிறது, சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவி மீதான கைது நடவடிக்கை. இந்த விவாதத்தை சரியாக முன்னெடுப்பதற்கு, திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு காரணமான ‘டூல்கிட்’ உள்ளிட்டவை குறித்த தெளிவு அவசியமாகிறது.

பெங்களூருவைச் சேர்ந்த 22 வயதான சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவி கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்டார். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஸ்வீடனைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் சமூக வலைதளத்தில் பகிர்ந்த ‘டூல்கிட்’ தான், அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவதற்கு முதன்மையாகச் சொல்லப்படும் காரணம்.

image

இந்த நடவடிக்கை தொடர்பாக எந்த விதிமீறலும் இல்லை என்று டெல்லி போலீஸ் கமிஷனர் ஸ்ரீவத்ஷவா தெரிவித்துள்ளார். திஷா ரவி மட்டுமல்லாமல், வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மற்றும் ஆர்வலர் சாந்தனு ஆகியோருக்கு எதிராக ஜாமீன் வழங்கப்படாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உண்மையில், ‘டூல்கிட்’ என்ன அவ்வளவு ஆபத்தானதா? அதைப் பரப்புவது பெரிய குற்றமா? இதற்கு முன்னர் யார் யார் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? – சற்றே விரிவாகப் பார்ப்போம்.

டூல்கிட் என்றால் என்ன?

முதலில் ‘டூல்கிட்’ (Toolkit) குறித்து அறிந்து கொள்வது அவசியம். ஒரு குறிப்பிட்ட செயல் திட்டத்திற்காக அல்லது அதை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் ஐடியாக்கள் கொண்டுள்ள ஆவணத்தைதான் ஆங்கிலத்தில் ‘டூல்கிட்’ என்று அழைக்கிறார்கள். கிரெட்டா முன்னெடுப்பது மட்டுமல்ல, எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும், அதை நடத்தும்போதும் அதில் பங்கேற்பவர்கள் செய்யவேண்டிவை குறித்து ‘டூல்கிட்’ உருவாக்கப்படும். பின்னர் அது மற்றவர்களுக்கும் பகிரப்படுவது வழக்கம். இந்த ‘டூல்கிட்’டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான கட்டுரைகள் மற்றும் அதன் லிங்குகள் உள்ளிட்டவை அடங்கும். இது அமைதியான போராட்டத்துக்கான செயல்வடிவம்தான்.

எளிமையாகச் சொல்வதானால், ஒரு ‘டூல்கிட்’ என்பது ஏதாவது ஒன்றைச் செய்வதற்கான செயல் திட்டமாகும். ‘டூல்கிட்’ கையில் விரும்பிய இலக்கை அடைய பின்பற்றக்கூடிய தகவமைப்புத் தொகுப்பை வழங்குகிறது. காலின்ஸ் அகராதியின் கூற்றுப்படி, ஒரு ‘டூல் கிட்’ என்பது ‘ஒரு குறிப்பிட்ட பணி அல்லது வேலையைச் செய்வதற்குத் தேவையான திறன்கள், அறிவு அல்லது பிற விஷயங்களின் தொகுப்பு’. ‘டூல்கிட்’ என்பது கருத்து வேறுபாட்டின் சின்னம் அல்லது விரும்பத்தகாத அபாயகரமான விஷயம் அல்ல.

image

சொல்லப்போனால் அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள்கூட இந்த ‘டூல்கிட்’டை பயன்படுத்தியுள்ளன. உதாரணமாக இந்திய அரசாங்கத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் ‘டூல்கிட்’ பதிவேற்றம் செய்யபட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் வலைதளத்திலும் அதிகாரப்பூர்வமாக ‘டூல்கிட்’ பதிவேற்றபட்டுள்ளது.

டெல்லி போலீஸ் எஃப்.ஐ.ஆர் சொல்வது என்ன?

இந்திய அரசு இந்த ‘டூல்கிட்’டை தேசத்துக்கு எதிராக மக்களை ஒருங்கிணைக்கும் போராட்டமாகவே கருதுகிறது. மக்களைத் தூண்டிவிடும் அபாயகரமான செயலாக பார்ப்பதால் இங்கே ‘டூல்கிட்’ பெரிய குற்றச்செயலாக முன்னிறுத்தப்படுகிறது.

டெல்லி காவல்துறையினர் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்), ‘திஷா ரவி இந்த ‘டூல்கிட்’டை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார். இவர் இருந்த குழு உருவாக்கிய ‘டூல்கிட்’டைதான் கிரெட்டா தன்பெர்க் பகிர்ந்துள்ளார். கிரெட்டா பகிர்ந்தும் நிஷாவும் தனது பக்கத்தில் ‘டூல்கிட்’டை பகிர்ந்துள்ளார். திஷா ரவி, வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மற்றும் பொறியியலாளர் சாந்தனு ஆகியோர் இந்தியாவின் மதிப்பை கெடுக்கும் வகையில் விவசாயிகளின் கிளர்ச்சி தொடர்பான ‘டூல்கிட்’டை உருவாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திஷா ரவி ‘டெலிகிராம்’ மூலம் கிரெட்டா தன்பெர்க்கிற்கு ‘டூல்கிட்’ அனுப்பியதாகவும், ‘அதில் செயல்பட அவரை வற்புறுத்தினார்’ என்றும் போலீசார் கூறியிருக்கின்றனர். எனினும், அந்த டேட்டாக்கள் நீக்கப்பட்டுள்ளன. திஷாவின் டெலிகிராம் கணக்கு, ‘டூல்கிட்’ தொடர்பான பல இணைப்புகள் அகற்றப்பட்டதைக் காட்டுகிறது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

திஷா ‘டூல்கிட்’டை பரப்புவதற்காக உருவாக்கிய ஒரு வாட்ஸ்அப் குழுவையும் நீக்கியுள்ளார், இது கூகுள் டாக்குமெண்ட்டில் உள்ள ஹைப்பர்லிங்குகளுடன் கூடிய டைனமிக் ஆவணமாகும். அவற்றில் நிறைய ‘காலிஸ்தானி சார்பு’ ஆவணங்கள் உள்ளன என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் பற்றிய தகவல்களைப் பரப்பும் ‘டூல்கிட்’ அல்லது கூகுள் ஆவணம் பற்றி எஃப்.ஐ.ஆர்-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘இந்தியாவுக்கு எதிராக பொருளாதார, சமூக, கலாசார மற்றும் பிராந்திய யுத்தத்தை நடத்துவதற்கான ஒரு பெரிய சதித்திட்டத்தின் விரிவான திட்டத்தையும் இது கொண்டுள்ளது’ என்றும் கூறப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளான ‘பொயட்டிக் ஜஸ்டிஸ் ஃபவுண்டேஷன்’ உள்ளிட்ட இரண்டு அமைப்புகளுடன் இணைந்து இந்திய அரசுக்கு எதிரான வெறுப்புணர்வைப் பரப்பும் வகையில் திஷா ரவி செயல்பட்டார் என்றும் எஃப்.ஐ.ஆர்-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

image

விவசாயிகளின் எதிர்ப்பைச் சுற்றி ஒழுங்கமைக்கப் பயன்படுத்தப்படும் கூகுள் ஆவணத்தின் பல பகுதிகள் எஃப்.ஐ.ஆரில் மேற்கோள் காட்டப்பட்டாலும், ‘டூல்கிட்’டை வைத்து ‘இந்தியா மீது கலாசார போர் தொடுக்க’ முயன்றது என்ற கூற்றை உறுதிப்படுத்த எந்தவொரு பகுதியையும் குறிப்பாக மேற்கோள் காட்டவில்லை. அதேபோல், கூகுள் ஆவணத்தில் திஷா ரவி செய்த திருத்தங்களையும் குறிப்பிடவில்லை.

திஷா மீது இந்திய தண்டனை சட்டத்தின் 124ஏ (தேசத் துரோகம்), 153ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டலை விரும்புதல்) மற்றும் 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குடியரசு தின வன்முறை சம்பவங்களுக்கு ‘டூல்கிட்’ மிகப்பெரிய காரணமாக இருந்துள்ளதாகவும், ஜனவரி 26-க்கு முன்னதாக ட்விட்டரில் ஹேஷ்டேக் மூலம் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’ நடத்தும் திட்டமும் இந்த ‘டூல்கிட்’-டில் இருப்பதாக காவல்துறை கூறியுள்ளது.

சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பது ஏன்?

இந்தியாவில் இது முதன்முறையில்லை. இதுபோல பலரும் சிறிய குற்றச்சாட்டுகளுக்காக தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 379-ன் கீழ் ஹைதராபாத்தில் தொலைபேசியை திருடிய வழக்கில் பேக்கரி தொழிலாளி அன்வர் அலி கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது, அவர் மீது ஆபத்தான செயல்களைத் தடுக்கும் சட்டம், 1986 (பி.டி சட்டம்) கீழ் வழக்குப் பதிவு செய்யபட்டது. ஒரு சிறிய குற்றத்திற்காக விசாரணையே இல்லாமல் ஒரு வருடம் அவர் சிறையில் வைக்கப்பட்டார்.

2019-ஆம் ஆண்டில் தெலுங்கானாவின் பி.டி சட்டம் போன்ற நாடு முழுவதும் ஒன்பது தடுப்புச் சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,06,612 இந்தியர்களில் இவரும் ஒருவர். கடந்த 2019-ம் ஆண்டு குஜராத்தில் 2,601 பேரையும், தமிழகத்தில் 1,883 பேரையும், ஜம்மு-காஷ்மீரில் 600 பேரையும் அரசு கைது செய்தது. இவர்களில் 489 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டம், 1980-இன் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் சட்டம் – ஒழுங்கு பாதிப்பு காரணமாக கைது செய்யப்பட்டனர் என்று தரவுகளை முன்வைக்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.

image

இதன்மூலம் தனிமனித சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக விவாதங்கள் கிளம்பியுள்ளன. ‘கிரைம் இன் இந்தியா’ அறிக்கையில், இந்தியாவில் கைது செய்யப்படும் 99.5% பேர் முழுமையான கல்வியறிவு பெறாதவர்கள் மற்றும் பின்தங்கிய சமூகத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஊடகத்தில் எதிர்மறையான விமர்சனங்களை மட்டுமே எதிர்கொள்கிறார்கள். இந்த சட்டங்கள் காவல்துறையின் அதிகாரங்களை பெருக்கும். யாரை வேண்டுமானாலும் மூன்று மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்க போலீஸ் கமிஷனர்களுக்கு மாஜிஸ்திரேட் அதிகாரங்கள் வழங்கலாம்.

இதுபோன்ற காரணங்களுக்காக தேசப் பாதுகாப்பு சட்டங்கள் எதிர்க்கப்படுகின்றன. உரிய விசாரணைகள் எதுவும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் தேசத்துக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்டு, அவர்களை கைது செய்யும் தேச பாதுகாப்பு சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, சமூக செயற்பாட்டாளர்களையும், சமூக வலைதளங்களில் கருத்துரிமையை முடக்கவுமே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

– மலையரசுSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *