PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? – நேர்காணலில் முதல்வர் விளக்கம் | Edappadi Palaniswami exclusive interview with puthiya thalaimurai | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்கிவிட்டனர். இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இச்சூழலில், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் ‘தலைவர்களுடன் ஒரு நாள்’ நிகழ்ச்சிக்காக, நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பிரசாரக் களத்தில் கலந்துரையாடினார். அதன் ஒரு பகுதி இங்கே…
கொங்கு மண்டலத்தில் அதிமுகவிற்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது?
“எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலம் தொடங்கி, அம்மா ஆட்சிக்காலம் வரைக்கும் கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டை. அது இந்தத் தேர்தலிலும் தொடரும். கோவை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளை நிறைவேற்றி இருக்கிறோம். ஆகவே, கொங்கு மண்டலம் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக திகழும்.“
குடும்பத்துடன் உங்களால் நேரம் செலவிட முடிகிறதா?
“குடும்பத்துடன் நேரம் செலவிடும் வயதை கடந்துவிட்டோம். இளவயதில் என்றால் குடும்பத்துடன் நேரம் செலவிடலாம். குடும்பத்தை பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் பொது வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட முடியாது. இருப்பினும் மாதத்திற்கு இரண்டு முறை ஊருக்கு சென்று குடும்பத்தினர், ஊர் மக்களை சந்தித்துவிடுவேன்.“
நாற்பதாண்டு கால அரசியல் வாழ்க்கையில் இந்த நான்காண்டுகள் மிகவும் முக்கியமானது இல்லையா? எப்படி பார்க்கிறீர்கள் இந்த மாற்றத்தை?
“ஆரம்பக் காலத்திலிருந்து கட்சிக்காக கடுமையாக உழைத்தவன் நான். அப்படி உழைத்ததால்தான் இந்த உயர்வு கிடைத்திருக்கிறது. உழைப்பு உயர்வை கொடுக்கும் என்பது என் நம்பிக்கை. ஒரு எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக இருந்த காலத்தில் எப்படி இருந்தேனோ அப்படியேதான் இப்போதும் உள்ளேன். கட்சிக்காரர்களின் குடும்ப விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகள், ஊர் கோயில் விழாக்களில் தவறாது கலந்து கொள்கிறேன்.“
சசிகலாவிற்கு கட்சியில் 100 சதவீதம் இடமில்லை என்று டெல்லியில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி கூற வேண்டிய அவசிய என்ன?
“அதிமுகவை இணைப்போம் என்று டிடிவி தினகரன் பல்வேறு இடங்களில் தவறான செய்தியை கூறிவந்தார். அதனால்தான் அதை சொல்ல வேண்டியதிருந்தது. அம்மா மறைவுக்குப் பிறகுதான் டிடிவி தினகரன் கட்சிக்கு வருகிறார். அதற்குமுன் அவர் கட்சியிலிருந்து அம்மாவால் நீக்கப்பட்டிருந்தவர்.”
முந்தையப் பகுதி > ”களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்”- முதல்வர் பழனிசாமி நேர்காணல்