Mr Bean ஆக நடித்ததால் மன அழுத்தம் முதல் Cancel Culture சர்ச்சை வரை: அட்கின்சன் பகிர்வுகள் | Mister Bean actor Rowan Atkinson and Cancel Culture issue | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Mister-Bean-actor-Rowan-Atkinson-and-Cancel-Culture-issue

‘மிஸ்டர் பீன்’ ஆக நடித்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் முதல் அதிகரித்து வரும் Cancel Culture குறித்த தனது பார்வையையும் விரிவாகப் பகிர்ந்திருக்கிறார் நடிகர் ரோவன் அட்கின்சன்.

உலகையே ரசிக்க சிரிக்கவைத்த, சிரிக்கவைத்துக் கொண்டிருக்கும் ‘மிஸ்டர் பீன்’ நடிகர் ரோவன் அட்கின்சனுக்கு இன்று பிறந்தநாள். 66 வயதாகும் ரோவன் அட்கின்சன் பிரிட்டிஷ் மாகாணத்தில பிறந்தவர். விவசாயியான எரிக் அட்கின்சன், எல்லா மே-க்கு கடைசி மகனாக பிறந்தவர். தனது எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பை நியூகேஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முடித்த ரோவன், கதை ஆசிரியர் ரிச்சர்டு கர்டிஸை சந்தித்தபோது தனக்குள் இருந்த நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவந்தார்.

image

அங்கிருந்து அவருடைய திரைப்பயணம் ஆரம்பமானது. முதலில் 1979-ஆம் ஆண்டு பிபிசி ரேடியோவில் ரிச்சர்டு கர்டிஸ் மற்றும் அட்கின்சன் எழுதிய காமெடி நிகழ்ச்சி ஒலிபரப்பானது. கல்லூரி படிப்பு முடிந்தபிறகு டிவி நிகழ்ச்சிகளில் தோன்றிய அட்கின்சனுக்கு மைக்கல்லாக அமைந்தது 1983ஆம் ஆண்டு வெளிவந்த ‘தி ப்ளாக் ஆடர்’. அதன் அடுத்தடுத்த பகுதிகளுக்குப் பிறகு 1990ஆம் ஆண்டு புதுவருட அரைமணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக தாமெஸ் டிவியில் மிஸ்டர் பீன் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இது பலரின் பாராட்டைப் பெறவே அடுத்தடுத்த பகுதிகளாக 1995 வரை ஒலிபரப்பாகி உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இந்த டிவி நிகழ்ச்சிகள் தவிர, Dead on Time (1983), Pleasure at Her Majesty’s (1976), Never Say Never Again (1983), The Tall Guy (1989) போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

image

மிகப்பெரிய கார் பிரியரான அட்கின்சன் மெக்லாரென் எஃப் 1 GTR, ஆடி A8, மெர்சடெஸ் பென்ஸ் 500E, பென்ட்லி மல்சன்னே போன்ற கார்கள் தவிர, ஹோண்டா, ஆஸ்டான், BMW, ஃபோர்டு போன்ற பிராண்டுகளில் பல கார்களை வைத்திருக்கிறார்.

தற்போது மிஸ்டர் பீன் அனிமேஷன் தொடரை எடுத்துவருவதுபற்றி கூறுகையில், ’’அந்தக் கதாபத்திரத்தில் நடித்ததை நான் விரும்பவில்லை. ஏனென்றால் வளர்ந்த ஒரு நபர் குழந்தைபோல நடந்துகொள்வது என்பது அனைவருக்கும் நகைச்சுவையாக தோன்றக்கூடிய ஒன்று. ஆனால் அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக்க அதிக சிரத்தை எடுக்கவேண்டி இருந்தது. அதுமட்டுமில்லாமல், அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பின் மூலம் முழுமையாக்குவதற்கு கடும் சிரத்தை எடுத்துக் கொண்டதால் நான் அதிக மன அழுத்தத்துக்கு ஆளானேன். எனவே அதில் நடிப்பதைவிட குரல் மட்டும் கொடுப்பது என்பது இப்போது எனக்கு எளிதாக இருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார். அதேசமயம் ப்ளாக்ஆடர் தொடரில் நடித்தது தனக்கு அதுபோல் சிரமத்தை தரவில்லை என்கிறார் அட்கின்சன்.image

சமீபத்தில் நம் மிஸ்டர் பீன், ரேடியோ டைம்ஸ்க்கு கொடுத்த நேர்க்காணலில் ஒருவரின் பேச்சு சுதந்திரம் சுருக்கப்படுவதைப் பற்றியும் ‘cancel culture’ பற்றியும் பேசியது அவரை சர்ச்சைக்குள்ளாக்கி இருக்கிறது.

அந்த நேர்காணலில், “நாம் பார்க்க விரும்புவதை ஏதோ ஒரு அல்காரிதம் தீர்மானிக்கிறது என்பதுதான் நமக்கு இணையம் – சமூக ஊடகங்களில் இருக்கும் பெரும் சிக்கல். இது சமூகத்தின்மீதான பார்வையைக் குறுக்கிவிடுகிறது. இதுதான் எங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எங்களுக்கு எதிராகவோ உங்களை மாற்றுவதற்கு வித்திடுகிறது.

நீங்கள் உண்மையிலேயே எங்கள் செயல்பாடுகளுக்கும் கருத்துகளுக்கும் எதிரானவராக இருந்தால், எங்களை நீங்கள் சமூகத்தைவிட்டு ஒதுக்கிவைப்பதில் அர்த்தம் உள்ளது. சமூக ஊடகங்களில் வைக்கக் கூடிய ஒரு கருத்து என்பது பரந்த சமூகத்தில் முன்வைக்கப்படுவதாகும். ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் ஒரு ‘கட்டப் பஞ்சாயத்து கும்பல்’ சுற்றிக் கொண்டிருக்கிறது. அந்தக் கும்பலிடம் யார் சிக்கினாலும் சின்னாபின்னமாவது உறுதி. அந்த கும்பலுக்கு இலக்காகும் அனைவருமே அஞ்சி நடுங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுதான் எதிர்காலம் குறித்த பயத்தை எனக்குள் உருவாக்குகிறது” என்று பேசியிருந்தார்.

image

அட்கின்சனின் இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் மக்களுக்கு இருக்கும் கருத்துச் சுந்ததிரத்தில் ஒரு பிளவை ஏற்படுத்திவிட்டதாக பலரும் தெரிவித்துவருகின்றனர். சிலர் அவர் கூறுவதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சிலர் இது சமூக ஊடகங்களில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பழைமையான கருத்து என்றும் தெரிவித்துவருகின்றனர்.

‘Cancel Culture’ என்றால் என்ன என்று பலருக்கும் தெரியாது. Ostracism என்று சொல்லக்கூடிய க்ரீஸ் வார்த்தையின் புது மொழியாக்கம்தான் Cancel Culture. ஒருவரை இழிவுப்படுத்தி புறக்கணிப்பதைக் குறிப்பிட இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, நட்சத்திர அந்தஸ்த்தில் உள்ள ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுவதாலோ, அல்லது ஒரு கருத்தை வெளிப்படுத்துவதாலோ சமூகத்தால் இழிவுபடுத்தப்படும் விதமாக புறக்கணிக்கப்படுவதையே Cancel Culture என்கிறோம். இது பொது வெளியில் புறக்கணிக்கப்படலாம் அல்லது சமூக ஊடகங்களில் புறக்கணிக்கப்படலாம்.

image

2010 இடையில் ’ப்ளாக் ட்விட்டர்’வாசிகளால் உருவாக்கப்பட்ட வார்த்தைதான் Cancel Culture. குறிப்பாக அப்போது நடந்த பாகுபாடு மற்றும் இனவாதத்திற்கு எதிராக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டதால் பிரபலமானது. 2019ஆம் ஆண்டு, இது சமூகத்தில் ஒருவரின் நடத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. பிறகு 2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்திற்கு நீதிகிடைக்கக்கோரி இந்த வார்த்தைப் பயன்படுத்தப்பட்டது குறிப்படத்தக்கது.

சமீபத்தில் மூன்றாம் பாலினத்தவரை பற்றி ‘ஹாரி பாட்டர்’ எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் வெளியிட்ட கருத்தால் அவர் சமூகத்தைவிட்டு புறக்கணிக்கப்பட்டதுபோன்ற சூழலுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *