“40 கி.மீ தூரம்தான் பிரச்னையே!” – சென்னையில் வீடுகளை அகற்றியும் மக்கள் நகராததன் பின்னணி | Chennais Aboriginal Eviction Anti Settlement An Analysis | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Chennais-Aboriginal-Eviction-Anti-Settlement-An-Analysis

சென்னை தீவுத்திடல் அருகே சத்யவாணி முத்து நகரில் வசிக்கும் மக்கள் வீடுகள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், அந்த மக்கள் வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே திறந்த வெளியில் தஞ்சமடைந்துள்ளனர். சென்னைக்கு மிக அருகாமையில் குடியிருப்பை அமைத்து தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்மிகு சென்னை திட்டத்தின் கீழ் கடந்த 9-ஆம் தேதி சத்தியவாணி முத்து நகர் குடிசைப் பகுதியில் உள்ள வீடுகள் இடிக்கப்பட்டன. இதனால் அங்கு வசித்து வந்த மக்களை பெரும்பாக்கத்தில் உள்ள அரசு குடிசை மாற்று குடியிருப்புக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்த குடியிருப்பு வாசிகள், கடந்த புதன்கிழமையன்று கூவம் நதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். 

image

பெரும்பாக்கத்தில் வீடுகள் ஒதுக்குவதால், தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் வியாசர்பாடி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வீடுகளை ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால், சத்தியவாணி முத்துநகரை விட்டுச் செல்லாமல், அங்கேயே திறந்த வெளியில் மக்கள் தங்கி வருகின்றனர். உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக ‘நியூஸ் 360’-ல் நடந்த அலசல் இங்கே: 

சென்னை சத்யவாணி முத்து நகர் குடிசைப்பகுதி தீவுத்திடலுக்கு பின்புறம் கூவம் நதிக்கரையோரம் அமைந்துள்ளது. கூவம் சீர்மிகு திட்டத்தின் கீழ் கரையோரம் உள்ள வீடுகளை அப்புறப்படுத்தி கூவம் ஆற்றை விரிவாக்கும் திட்டம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து சத்யவாணி முத்து நகரில் 2016 வீடுகளை அகற்றி அங்குள்ள மக்களை பெரும்பாக்கத்தில் உள்ள குடிசைமாற்று வாரியத்தில் குடியமர்த்த திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் தேர்வு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 345 வீடுகளைச் சேர்ந்த மக்கள் பெரும்பாக்கத்திற்குச் செல்லவில்லை.

இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் 350 வீடுகளை இடிக்க முற்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முப்பதுக்கும் மேற்பட்ட மக்கள் கூவம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கூவம் கரையோர மக்களுக்கு, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் அம்பேத்கர் இயக்கத்தினர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் அளித்தனர். போராட்டத்தை கட்டுப்படுத்தவும் பாதுகாப்புக்காகவும் காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி துணை ஆணையர் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்கு உரிய உதவித்தொகை மற்றும் குடிபெயர்வுத் தொகை வழங்கப்படும் என உறுதியளித்தனர்.

image

இருப்பினும் அப்பகுதி வாசிகள் அதே பகுதியில் வேலைக்குச் செல்லும் நிலையில், குடிபெயர்வு அதிகபட்சம் 10 கிலோ மீட்டருக்கும் இருந்தால் தங்களுக்கு பிரச்னை இல்லை என்றும், ஆனால் பெரும்பாக்கம் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் அங்கு சென்றால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் கூறினர். எனவே அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என அதிகாரிகள் சமாதானம் செய்ததை அடுத்து போராட்டக்காரர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

ஆற்றங்கரை ஓரங்களில் இருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்கும்போது அங்கு கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் என்னென்ன?

ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்த வேண்டுமென்றால், அவர்களுக்கு முன்கூட்டியே குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே நோட்டீஸ் வழங்க வேண்டுமென்பது விதி. இந்த விதியின்படி அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காதபடி வசிப்பதற்கு ஒரு மாற்று இடத்தை ஏற்படுத்தித்தர வேண்டும். அதேபோல, இங்கே இருந்து காலிசெய்து உடமைகளை கொண்டு செல்ல வாகன வசதி செய்து தர வேண்டும்.

அங்கு வசிக்கும் மக்களுக்கு அடுத்த ஆறு மாதத்திற்கு உதவித் தொகை வழங்க வேண்டும். மேலும் அவர்கள் மாற்று இடங்களுக்குச் சென்றாலும் அவர்களது பிள்ளைகள் படிப்பதற்கான பள்ளி கல்லூரிகளை அப்பகுதயில் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அடையாறு நதி புணரமைப்புத் திட்டத்தில் உள்ளது.

கேள்வி: ஆற்றங்கரையோர மக்கள் இடமாற்றத்திற்கு உட்படும் போது பல சிக்கல்களை சந்திக்கிறார்கள். இந்த மக்களுக்கு இடப்பெயர்வு மூலமாக என்னென்ன சிக்கல் வரும் என்ன காரணத்திற்காக இந்த மாதிரியான போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்?

இசையரசு (தன்னார்வலர்): “45 ஆண்டுகால பிரச்னை இது. 45 வருடமாக இந்த நகரத்தில் வாழ்ந்தோம். எங்க பிள்ளைகளை படிக்க வைத்தோம். நல்ல துணிமணி போட்டோம். அன்றாடம் வேலை கிடைத்தது சாப்பிட்டோம். இப்ப இந்த நகரத்தை தாண்டி 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரும்பாக்கத்திற்கு மாற்றினால் அந்த 40 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து எப்படி நகரத்திற்குள் வந்து செல்வோம் என்பதுதான் கேள்வியே. அன்றாடம் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதுதான் பிரச்னை. இங்கு வசித்த மக்களை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாற்றிய பிறகு அரசு கொடுக்கின்ற கட்டிடத்தில் அவர்கள் தூங்கி எழுந்து இருப்பது 5 மணி நேரம்தான். பெரும்பாக்கத்தில் இருந்து நகருக்கும் வந்து செல்ல மூணும் மூணும் ஆறுமணி நேரமாகும். மீதியுள்ள நேரத்தில் உழைத்து எப்ப தூங்கி எழ முடியும்.

image

என்ன மாதிரியான வாழ்க்கை அது. அவங்களும் இந்த நாட்டோட குடிமக்கள்தானே. ஆக்கிரமிப்பாளர்கள் என்று வைத்துக் கொண்டாலும் அவர்களை அகற்றுவதற்காக அறிவிப்பைகூட இந்த அரசாங்கம் கொடுக்கவில்லை. கடந்த 2019ல் அங்கிருந்த வீடுகளை இடித்தார்கள் அதன்பிறகு அங்கு வசித்த மக்களுக்காக அரசு என்ன முடிவெடுத்தது.

அரசும் அதிகாரிகளும் என்ன சொல்றாங்க விருப்பப்படுபவர்கள் இருக்கலாம். விருப்பம் இல்லாதவர்கள் போகலாம் என்றால் இது என்ன. அங்கு வசிக்கும் மக்களை பிரித்தாலும் சூழ்ச்சி இது. நீர்நிலையோரம் இருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சென்னை நகருக்குள் 1971 குடிசைமாற்று வாரிய சட்டத்தின்படி 8 கிலோ மீட்டருக்குள் மாற்று இடம் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றார்கள்.

இந்த அரசாங்கம் பெரும்பாக்கத்திற்கு இடம் பெயர்ந்த மக்களுக்காக எத்தனை கோடி ரூபாய் நிதி ஒதுக்கி என்னென்ன நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறது. அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம், குடிநீர் என என்னென்ன செய்திருக்கிறார்கள் என அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடட்டும். அப்புறம் இந்த மக்கள் பெரும்பாக்கம் போவதை பற்றி பேசலாம்.”

கேள்வி: நாங்கள் இங்கிருந்து போவதற்கு தயாராக இருக்கிறோம். எங்களை பெரும்பாக்கத்திற்கு இடம் மாற்றினால் அங்குள்ள சூழலை எந்த அளவிற்கு மேம்படுத்தி இருக்கிறீர்கள். அதையெல்லாம் செய்யாமல் வெறும் இடமாற்றத்தை மட்டுமே மையமாக வைத்து செயல்படுவதால்தான் மக்களின் எதிர்ப்பு வருகிறதா?

சசிரேக (அதிமுக): இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், குடிசைப் பகுதிகளை சென்னையில் இருந்து அகற்றுவது. புயல் மழை காலங்களில் நாம் என்ன சொல்கிறோம் மழைநீர் வடியவில்லை. ஒருநாள் மழைக்கே சென்னை தத்தளிக்கிறதா போன்ற கேள்விகள் எழுப்பப்படுகிறது. 2015 வெள்ள பாதிப்பிற்குப் பிறகு இந்த முறை எந்த தத்தளிப்பும் இன்றி சிறப்பாக மழை நீரை வெளியேற்றினோம்.

மிகப்பெரிய முன்னேற்றத்தையும் கட்டமைப்பையும் உருவாக்கி இருக்கிறது இந்த அரசு. முதல்வர் மிகச் சிறப்பாக இந்தப் புயலை கையாண்டார் என்பதுதான் இன்றைக்கு இருக்கிற நிலவரம். அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளாக இருந்தாலும் சரி சைதாப்பேட்டை ஆற்றங்கரையோர பகுதிகள், வியாசர்பாடி பகுதிகள் மற்றும் சத்யவாணி முத்து நகர் இவை எல்லாமே ஆக்கிரமிப்பு பகுதி என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.

மழைநீர் ஏன் தேங்குகிறது. அரைமணி நேரம் மழை பெய்தால் கூட மழைநீர் தேங்குகிறது என்று பார்த்தால் முக்கியமாக ஆற்றுப்படுகைகள் குறுகிவிட்டது. அவற்றின் கரை பலமில்லாமல் இருப்பது. மற்றும் ஆக்கிரமிப்புகள் தான் முக்கிய காரணமாக விளங்குகிறது. அதனால் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சரிசெய்ய வேண்டும். ஆற்றின் கரைகளை அகலப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் சாமானியர் பெரும் முதலாளிகள் என்ற வார்த்தைக்கே இடமில்லை. சத்யவாணி முத்து நகரை பொருத்தவரை 2019 டிசம்பர் வரை நேரம் கொடுத்திருந்தோம். அங்கு வசித்த 2092 குடும்பங்களில் 1842 குடும்பங்கள் பெரும்பாக்கத்திற்கு போய்விட்டார்கள்.

ஆனால், மீதமுள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் என்ன காரணம் சொன்னார்கள் என்றால் எங்கள் குழந்தைகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கிறார்கள் அவர்களின் படிப்பு முடிந்த பிறகு செல்கிறோம் என்று சொன்னார்கள். அரசும் அதற்கு ஒப்புக்கொண்டது. இந்த விசயத்தில் மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் சத்யவாணி முத்து நகர் பகுதியில் அரசியல்வாதிகளின் தூண்டுதல் அதிகமாக இருக்கிறது. அரசின் மீது பொத்தம் பொதுவான குற்றச்சாட்டுகளை வைக்கும் எதிர்க்கட்சிகள் அங்கு வசிக்கும் மக்களை தூண்டிவிடுகின்றன. பெரும்பாக்கத்திற்கு செல்ல தயாராக இருந்த மக்களை மாற்றுக்கட்சி தலைவர்கள் சினிமா நடிகர்கள் மற்றும் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் போய் பார்த்து அப்ப போங்க இப்ப போங்க என்று மக்களை தூண்டிவிடுகிறார்கள்.”Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *