2015 உடன் ஒப்பிட்டால் நிவர் பாதிப்பு எத்தகையது? – சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம் | 23 cm rain in 36 hours in Chennai Corporation Commissioner Prakash | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
2015 ஆம் ஆண்டு கனமழையின்போது, சென்னை மாநாகராட்சிக்கு 1000-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. இம்முறை இதுவரை 56 புகார்கள்தான் வந்துள்ளன” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு கனமழையின்போது, சென்னை மாநாகராட்சிக்கு 1000-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. இம்முறை இதுவரை 56 புகார்கள்தான் வந்துள்ளன” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறும்போது, “வழக்கமாக வடகிழக்கு பருவமழையின்போது நமக்கு 80 செ.மீ மழை கிடைக்கும். இந்த மழையானது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் மழையிலிருந்து கிடைக்கும். நிவர் புயலின் தாக்கத்தால் நமக்கு இப்போதே 55 செ.மீ மழையானது கிடைத்துள்ளது.
சென்னையில் கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ மழையானது பதிவாகியுள்ளது. சென்னையை ஒட்டியப் பகுதிகளில் நகரத்தைவிட அதிகளவு கனமழை பெய்துள்ளது. குறிப்பாக தாம்பரத்தில் 30 செ.மீ-க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.
இம்முறை மழை அதிகமே தவிர, பாதிப்புகள் குறைவு. குறிப்பாக, 2015 ஆம் ஆண்டு கனமழையின்போது, சென்னை மாநாகராட்சிக்கு 1000-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. இம்முறை இதுவரை 56 புகார்கள்தான் வந்துள்ளன.
நில அமைப்பின் காரணமாகவே வேளச்சேரியில் மழைநீர் தேங்கியது. அது இரண்டு மணி நேரத்தில் வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளிலும் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுவிட்டன.
புயல், கனமழையின் காரணமாக கொரோனா சோதனையில் எந்தப் பாதிப்பும் இல்லை. சென்னையில் கொரோனா சோதனைகள் அதே அளவில் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டது என்பதற்காக சோதனைகள் குறைக்கப்படவில்லை” என்றார்.
செம்பரம்பாக்கம் உபரி நீர் திறப்பு, கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இம்முறை பெரும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டதும் கவனிக்கத்தக்கது.