10 ஆண்டுகளில் இதுவே முதல்முறை: இந்தியாவிடம் அரிசி இறக்குமதி செய்யும் வியட்நாம்! | Vietnam buys Indian rice for first time in decades | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
உலகின் மூன்றாவது பெரிய அரிசி ஏற்றுமதி நாடான வியட்நாம், முதன்முறையாக இந்தியாவிடம் இருந்து அரிசி வாங்க துவங்கியுள்ளது.
சர்வதேச அளவில் அரிசி உற்பத்தியில் பல ஆண்டுகளாக இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் நாடுகள் அரிசியை அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றன.
இந்நிலையில், உலகின் மூன்றாவது மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடான வியட்நாம், சுமார் 10 வருடங்களுக்குப் பின் இந்தியாவிடம் இருந்து அரிசி வாங்க துவங்கியுள்ளது. வியட்நாம் நாட்டில் தற்போது அரிசி உற்பத்தி குறைந்துள்ள நிலையில், இதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, இதனால் சாமானிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக இந்தியாவிடமிருந்து அரிசி கொள்முதல் செய்யும் முடிவை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வியட்நாம் மட்டுமல்லாது, அரிசி ஏற்றுமதியில் மற்றொரு முக்கிய நாடான தாய்லாந்தும்கூட, இந்தியாவிடமிருந்து அரிசி வாங்கும் முடிவை மேற்கொண்டுள்ளது.
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் இந்தியா வர்த்தகர்களுக்குச் சுமார் 70,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்யும் ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த 70,000 டன் அரிசியை ஒரு டன்னுக்குச் சராசரியாக சுமார் 310 டாலர் என்ற விலையில் விற்பனை செய்ய உள்ளது. முதல் முறையாக வியட்நாம் நாட்டிற்கு அரிசியைப் பெரிய அளவில் ஏற்றுமதி செய்ய உள்ளோம் என அரிசி ஏற்றுமதி அமைப்பின் தலைவர் கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.
தற்போது இந்தியாவில் இருந்து வாங்கப்படும் அரிசி விலை 381 முதல் 387 டாலராக இருக்கும் நிலையில், வியட்நாம் நாட்டில் அரிசி விலை குறைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
ஆசியச் சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள அரிசி பற்றாக்குறையின் மூலம் 2020ல் மட்டும் இந்தியா சுமார் 14 மில்லியன் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் அளவு 2021-ம் ஆண்டிலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.