வீட்டிலேயே எப்படி உரம் தயாரிக்கலாம்? – மாடித்தோட்டம் ஆர்வலர்களுக்கு எளிய வழிகாட்டுதல் | How to make organic compost at home easily | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


How-to-make-organic-compost-at-home-easily

சமீப காலங்களாக அடிக்கடி இயற்கை, ஆர்கானிக் முறைக்கு மாறுவது குறித்து பேசி வருகிறோம். அதன் விளைவாக தற்போது பலரும் தங்கள் வீடுகளிலேயே மாடித்தோட்டம் அமைத்து தங்களுக்கு தேவையான, தங்களால் முடிந்த காய்கறிகள் மற்றும் பழங்களை தாங்களே விளைவித்துக் கொள்கின்றனர். வீட்டிலேயே செடி வளர்க்க பழகிய பலருக்கும், இயற்கையான முறையில் உரம் தயாரிப்பது எப்படி என்று தெரிவதில்லை. வீட்டிலேயே உரம் தயாரித்தல் என்பது மிகவும் சிரமமான வேலை என்றும் பலர் நினைக்கின்றனர். ஆனால் சமையலுக்குப் பிறகு நாம் தூக்கியெறிகிற அழுகிய காய்கறிகள், பழங்களையே நாம் முறையாக பயன்படுத்தினால் சிறந்த உரமாக பயன்படுத்தலாம்.

அடிப்படையான ஹாட் (Hot) மற்றும் கோல்டு (Cold) என்ற இரண்டு முறைகளில் வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம். கோல்டு முறை என்பது பழங்கள், காய்கறிகள், காய்கறி தோல்கள், வடிகட்டிய காஃபித்தூள், முட்டை ஓடு போன்றவற்றை ஒரு தொட்டி அல்லது குழியில் கொட்டி, அதை அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு அவை அனைத்தும் சிதைந்து உரமாக உருவாகும். ஆனால் இதற்கு ஒருவருடம் காத்திருக்கவேண்டும் என்பதை கருத்தில்கொள்ள வேண்டும்.

image

ஹாட் முறையில் உரம் தயாரிக்க நைட்ரஜன், கார்பன், நல்ல காற்று மற்றும் தண்ணீர் அவசியம். இவை அனைத்தும் சேர்ந்து நுண்ணியிரிகளுக்கு உணவாக அமைகிறது. அவை உரம் உருவாகும் நேரத்தை துரிதப்படுத்துகிறது. அதாவது மூன்றே மாதங்களில் நமது தோட்டத்திற்கு பயன்படுத்த உரம் தயாராகிவிடுகிறது.

அதேபோல், பெரிய பெரிய ஆர்கானிக் உர நிறுவனங்கள்கூட பயன்படுத்தும் மற்றொருமுறை, வெர்மிகம்போஸ்ட். அதாவது மண்புழுக்களை பயன்படுத்தி உரம் தயாரித்தல். மண்புழுக்கள் உணவுத்துகள்களை சாப்பிட்டு வெளியேற்றும் கழிவுகளில் நைட்ரஜன் அதிக அளவில் இருக்கிறது. இதற்காக எல்லாப் புழுக்களையும் பயன்படுத்திவிட முடியாது. சிவப்பு புழுக்க என்று அழைக்கப்படுகிற மண்புழுக்களே இந்த செயல்முறைக்கு சிறந்தவை.

image

எவற்றையெல்லாம் உரமாக்கலாம்?

காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், வடிகட்டிய காஃபித்தூள், முட்டை ஓடு, கீரைகள், உலர்ந்த இலைகள், மரத்தூள் மற்றும் மரச் சக்கைகள், துண்டாக்கிய செய்தித்தாள்கள், ஸ்ட்ரா போன்றவற்றை சிதைவுறச் செய்து உரமாகப் பயன்படுத்தலாம். எலுமிச்சைத் தோல், வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை உரத்துடன் கலப்பதற்கு முன்பு சற்று சிந்திக்கவேண்டும். காரணம் அவை உரம் மட்க காரணமான மண்புழுக்களை அழித்துவிடும் என்று நம்பப்படுகிறது.

எவற்றையெல்லாம் உரமாகப் பயன்படுத்தக்கூடாது?

மாமிசம் கலந்தவை, எண்ணெய், கொழுப்பு, பிசுபிசுப்பானவை, நோயுற்ற தாவரங்கள், பதப்படுத்தப்பட்ட மரத்துகள்கள், நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளின் கழிவுகள், பால் பொருட்கள் போன்றவற்றை உரங்களில் பயன்படுத்தக்கூடாது. இவை தோட்டத்தை நாசப்படுத்துவதுடன், இதிலிருந்து எழும்பும் ஒருவித கெட்ட வாடையானது விலங்குகள் மற்றும் பூச்சிகளை கவர்ந்திழுக்கும்.

உரம் தயாரிக்கும் எளியமுறை:

image

3 அடி ஆழமுள்ள குழியை நிரப்புவதற்குத் தேவையான பச்சை மற்றும் ப்ரவுன் நிற கழிவுகளை சேர்த்து ஒன்றாக்குங்கள். அதாவது ஈரப்பதமுள்ள மற்றும் உலர்ந்த பொருட்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்துவிடுங்கள். நல்ல சத்தான உரம் கிடைக்க மூன்று பங்கு ப்ரவுன் கழிவுகளுடன், ஒரு பங்கு பச்சைநிற கழிவுகளை சேர்ப்பதே சிறந்தது.

image

இந்த உரமானது அதிக ஈரமாகவும் இருக்கக்கூடாது. அதேசமயம் மிகவும் வறட்சியாகவும் இருக்கக்கூடாது. எனவே தினமும் இதன்மீது சிறிது தண்ணீர் தெளித்து சற்று ஈரப்பதத்துடனேயே வைத்திருக்கவேண்டும். அதிக தண்ணீர் சேர்த்துவிட்டால் உரத்திலுள்ள நுண்ணுயிரிகள் அழிந்துவிடும். இதனால் உரமாவதற்கு பதிலாக கலவையானது அழுகிப்போய்விடும்.

image

கலவையின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்க வாரத்திற்கு ஒருமுறை அதைக் கிளறிவிடவேண்டும். வெப்பநிலை அதிகமாக இருக்கும் சமயத்தில் கலவையை கிளறிவிடுவது நல்லது.

image

உங்கள் கலவை முற்றிலும் உலர்ந்து, ப்ரவுன் நிறமாக மாறிவிட்டால் தோட்டத்திற்கு கொண்டுசெல்லும் நேரம் வந்துவிட்டது. உங்களுடைய பூத்தொட்டிகளில் 4 முதல் 6 இஞ்ச் அளவிற்கு இந்த உரத்தைப் போட்டுவைத்தால் செடிகள் செழித்து வளருவதைப் பார்க்கலாம்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *