விவசாயிகளின் போராட்ட வியூகங்கள்: மோடி அரசு திணற 5 காரணங்கள்! | Strategies behind farmers protest and why Modi govt stutters | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கும், மோடி அரசுக்கும் இடையே ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், டெல்லியின் தொடர்ச்சியான முற்றுகைக்கு எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. விவசாய தலைவர்களைக் கையாள்வது அரசுக்கு கடினமாக இருப்பதற்கு, விவசாய தலைவர்களின் உறுதி, கோரிக்கைகளில் சமரசம் செய்ய மறுப்பது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.
நீண்டகால போராட்டத்துக்கு தயார்!
போராட்டம் என்று முடிவெடுத்தபோதே விவசாயிகள் பல மாதங்கள் டெல்லியின் எல்லையில் தங்க தயாராக வந்துவிட்டனர். இதற்கான உணவு பொருட்கள் என தேவையான அனைத்தையும் அவர்கள் ஏற்கெனவே எடுத்துக்கொண்டுதான் போராட்டக் களத்துக்கு வந்தனர். ரேஷன், பாத்திரங்கள், சமையல் எரிபொருள், மரம், எரிவாயு சிலிண்டர்கள் ஏன் பைக்குகளைகூட அவர்கள் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு கொண்டுவந்துவிட்டனர். வண்டிகளை சாலையோரங்களில் நிறுத்தி, அதை தங்கள் வீடாக மாற்றி, அதிலேயே தங்கிக் கொள்கின்றனர். தாங்கள் பயணித்து வந்த டிராக்டரிலேயே அவர்கள் இரவுப் பொழுதை கழித்து வருகின்றனர். குளிர்காலம் என்பதால் டிராக்டர்களை முற்றிலும் பிளாஸ்டிக் தாள்களால் மூடி பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
“விவசாயிகள் வெறுமனே டெல்லிக்குச் சென்று தங்கள் உணவை சமைத்து, வாகனங்களில் வாழத் தொடங்கியதில் ஆச்சர்யமில்லை. இது அவர்கள் வாழ்நாள் முழுவதும் செய்த ஒன்று” என்று காலன் பகுதியைச் சேர்ந்த விவசாயி குர்தர்ஷன் சிங் என்பவர் கூறியிருக்கிறார். அவர் கூறியதுபோல, பஞ்சாப் விவசாயிகளுக்கு டிராக்டர் போன்ற வாகனங்களை வீடு போல் மாற்றியமைப்பது ஒன்று புதியது கிடையாது. அது அவர்களுக்கு இந்தப் போராட்டத்திலும் கைகொடுக்க, அதன்மூலம் போராட்டக் களத்தை வலுவாக்கி வருகின்றனர்.
அரசியலற்ற மேடை!
இதைவிட விவசாயிகள் செய்துள்ள முக்கிய விஷயம், அவர்களின் போராட்ட யுக்திதான். டெல்லியில் சிங்கு பார்டரில் சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு டிராக்டர்கள் போன்ற வாகனங்கள் வரிசைகட்டி நிற்க, மையப்பகுதி ஒரு தற்காலிக மேடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாள் முழுவதும் விவசாயிகள் உரையாற்றும் வகையில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில், அரசாங்கத்துடனான சந்திப்புகளின் முடிவு மற்றும் எதிர்கால நடவடிக்கை குறித்த அனைத்து முக்கியமான அறிவிப்புகளும் செய்யப்படுகின்றன.
அதேநேரத்தில், விவசாயத் தலைவர்கள் தவிர, ஆர்வலர்கள், பாடகர்கள், நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கடந்த சில நாட்களில் இந்த மேடையில் பேசிவருகின்றனர். ஆனால், மேடையில் அரசியல் தலைவர்கள் யாரும் ஏறாத வண்ணம் கவனிக்க, பேசுபவர்கள் அரசியல் விஷயங்களை புறக்கணிக்கும் வகையில், இதற்கென, 30 தன்னார்வலர்களை நியமித்துள்ளனர் போராட்ட ஒருங்கிணைப்பாளார்கள். இவர்கள் யாரும் மேடையில் அரசியல் பேசிவிடாதபடி கண்காணித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள டகவுண்டா விவசாய தலைவர், குர்மீத் சிங், “எந்த அரசியல்வாதியும் பேச அனுமதிக்கப்படுவதில்லை. எந்த காலிஸ்தான் கருத்தியலாளரும் மேடையில் இருந்து பேச மாட்டார்கள். ஓரங்கட்டக்கூடிய இயக்கத்தை சேர்ந்த எவரும் வரவேற்கப்படுவதில்லை” எனக் கூறியிருக்கிறார்.
ஒற்றைத் தலைமை கிடையாது!
விவசாய பூமியான பஞ்சாப்பில் எண்ணற்ற விவசாய சங்கங்கள் இருக்கின்றன. இந்த அமைப்புகள் மிகவும் பிரிவினையாக இருந்தாலும், இந்தப் போராட்டத்திற்கு அவர்கள் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் காட்டியுள்ளனர். விவசாய சட்டம் தொடர்பான தகவல் வெளியானபோது ஜூன் மாதத்தில் 10 உழவர் சங்கங்களுடன் அதை எதிர்த்து போராட்டம் தொடங்கியது. செப்டம்பர் மாதத்திற்குள் 31 அமைப்புகள் இணைந்தன. அப்போதிருந்து, இந்த விவசாய கூட்டமைப்பு கூட்டங்களை நடத்துவதற்கும் முடிவுகளை எடுப்பதற்கும் ஒரு ஜனநாயக வழியைப் பின்பற்றுகிறது. ஒவ்வொரு கூட்டத்திற்கும் இந்த 31 தொழிற்சங்கங்களில் ஒன்றின் தலைவர் தலைமை தாங்குகிறார்.
பின்னர் முடிவுகளைப் பற்றி அந்தந்த தலைவர்களே தினமும் பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கிறார். எந்தவொரு சங்கத் தலைவரும் தாங்கள் ஒரு சிறிய சங்கத்திற்கு தலைமை தாங்குகிறோம் என்பதை போன்று ஒரு பெரிய சங்கத்தின் தலைவராக இருப்பதைப் போலவே அவர்கள் உணர வேண்டும் எஎன்பதற்காக இப்படி ஒரு ஏற்பாடு செய்துளார்கள். ஒரு முடிவை எடுக்கும் அதிகாரம் எந்தவொரு தலைவருக்கும் இல்லை என்பதை இந்த யுக்தி உறுதி செய்கிறது. “இது ஒற்றுமையை உடைப்பதை கடினமாக்குகிறது, ஏனெனில் இந்த வகையான தலைமைத்துவத்தில் அனைவருக்கும் முக்கியத்துவம் கிடைக்கும்” என்பதே விவசாயிகளின் பதிலாக இருக்கிறது.
இது விவசாயிகளின் ‘சத்தியாகிரகம்’!
விவசாயிகளுடன் மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோது ஒரு முக்கிய காட்சியை நாம் கண்டோம். அது பேச்சுவார்த்தையின் போது விவசாயிகளுக்கு அரசு அதிகாரிகள் உணவு ஏற்பாடு செய்தனர். ஆனால் அதனை வாங்க மறுத்த விவசாயிகள், தாங்கள் கொண்டுவந்த உணவை தரையில் உட்கார்ந்து சாப்பிட்டனர். முதல் நாள் பேச்சுவார்த்தையில் இப்படி என்றால், இரண்டாம் நாளில் போராட்ட களத்தில் சமைக்கப்பட்ட உணவு, ஒரு மினி வேனில் பேச்சுவார்த்தை நடத்தும் விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்டது.
“இது ஒரு சத்தியாகிரகம். அவர்களின் தேநீர் மற்றும் காபி சாப்பிடுவதற்காக இங்கு இருக்கிறோம் என்ற செய்தியை அனுப்ப அரசாங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று நாங்கள் முடிவு செய்தோம். இது எங்கள் வாழ்வாதாரத்தின் விஷயம், நமது பிழைப்பு மற்றும் நமது நடத்தை அதை பிரதிபலிக்க வேண்டும். இதற்காக தான் அரசின் விருந்தோம்பலை புறக்கணித்தோம்” எனப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட விவசாயி ஒருவர் பேசியுள்ளார்.
தீர்க்கமான அழுத்தம் உருவாக்குதல்!
சனிக்கிழமை ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை நிறுத்தத்தப்பட்டதுக்கு காரணம், விவசாயிகள் தங்கள் கோரிக்கையில் ஒற்றைக் காலில் நின்றதுதான். சர்ச்சைக்குரிய மூன்று விவசாய சட்டங்களையும் நீக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. பேச்சுவார்த்தையின்போது சட்டத்தை நீக்க முடியுமா, முடியாதா என்ற ஒற்றை கேள்வியை விவசாயிகள் திரும்ப திரும்ப கேள்விகேட்டு வருகின்றனர். அரசு தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்ப்பதே ஒரே வழி என்கிற தீர்க்கமான முடிவுடன், ஒருவித அழுத்தத்தை அரசு மீது உருவாக்கி வருகின்றனர் விவசாயிகள். இதன்மூலம், விவசாய சட்டத்தை அரசு ரத்து செய்யும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். அதனால் தான் ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
எனினும், அடுத்து நடைபெறும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
தகவல் உறுதுணை: theprint.in