விளம்பரங்களை நிறுத்திய முன்னணி நிறுவனங்கள்: ஃபேஸ்புக்கிற்கு 54ஆயிரம் கோடி நஷ்டம்!! | Mark Zuckerberg loses $7 billion as companies boycott Facebook ads | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
உலகின் முன்னனி சமூக வலைதளமான ஃபேஸ்புக் சமீப நாட்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அமெரிக்காவில் காவலர் ஒருவர் முட்டியால் கழுத்தை நசுக்கியதில் மூச்சுவிட முடியாமல் உயிரிழந்தார் ஜார்ஜ் பிளாய்ட். இவரின் மரணத்திற்கு நீதி வேண்டி அமெரிக்காவில் போராட்டம் வெடித்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார்.
போராட்டம் என்ற பெயரில் கறுப்பின மக்கள் கடைகளைச் சூறையாடினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் எனத் தெரிவித்து இருந்தார். இந்தப் பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தங்கள் நிறுவன விதிமுறைக்கு எதிரானது எனக்கூறி ட்விட்டர் நீக்கியது. ஆனால் ஃபேஸ்புக் நீக்கம் செய்யவில்லை. இதனால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது விளக்கம் அளித்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், சில மேம்பட்ட ஆலோசனைக் கூறுபவர்களையும் நாங்கள் மதிக்கிறோம். அனைவரையும் ஆலோசனைகளையும் நாங்கள் மதிக்கிறோம். உள்ளடக்கம் தொடர்பான கொள்கைகளை மேம்படுத்த எங்கள் குழுவினருடன் ஆலோசித்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.
ஆனால் அதனைத் தொடர்ந்தும் ஃபேஸ்புக்கில் இனவெறியை, வன்முறையைத் தூண்டும் பதிவுகளும், சில விளம்பரங்களும் வருவதாக கூறப்படுகிறது. இதனைக் குறிப்பிட்டு யுனிலீவர், கோகோ கோலா போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஃபேஸ்புக் விளம்பரத்தை குறைத்துள்ளன. இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.
இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 54ஆயிரம் கோடி ரூபாய்க்கான விளம்பரத்தை ஃபேஸ்புக் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கடுமையான சரிவால், உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் இருந்த மார்க் தற்போது 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மார்க், இனவெறி வன்முறையைத் தூண்டும் பதிவுகளுக்கு ஃபேஸ்புக் இடமளிக்காது. யாராக இருந்தாலும் வரம்புக்குள் தான் பதிவிட முடியு. இது அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும். எனத் தெரிவித்துள்ளார்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆடு, தலைகீழாக சென்று மீட்கும் இளைஞர்: வைரலாகும் பழைய வீடியோ