விபத்தில் உயிரிழந்த தந்தை: வறுமையிலும் 4 பெண் பிள்ளைகளை பாசம் கொட்டி வளர்த்த விவசாயி! | Farmer dies in accident | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Farmer-dies-in-accident

 தஞ்சை மாவட்டத்தில் மின்சார கம்பி பேருந்தில் உரசியதால் நேரிட்ட விபத்து, 4 பெண் பிள்ளைகளின் தந்தையின் உயிரை அபகரித்துள்ளது. ஆசை ஆசையாய் பிள்ளைகளுக்கு பொங்கல் சீர் கொண்டு சென்றபோது விபத்தில் சிக்கியிருக்கிறார் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர்.

பாசக்காரத் தந்தையின் சீர் இல்லாமல் இனிக்காது பொங்கல். நான்கு பெண் பிள்ளைகளுக்குத் தந்தை. ஆஸ்பெட்டாஸ் கூரை போட்ட சிறிய வீட்டில் வசிக்கும் ஏழை விவசாயி. மனசெல்லாம் பிள்ளைகளின் நினைவுடன் பொங்கல் சீர் கொண்டு சென்ற அந்த தந்தை இப்போது உயிரோடு இல்லை.

அரியலூர் மாவட்டம் விழுப்பணங்குறிச்சியைச் சேர்ந்த 68 வயதான நடராஜன் தான் அவர். மனைவி நீலாம்பாள். இந்த தம்பதிக்கு தனசுகொடி, தனலட்சுமி, சின்னப்பொண்ணு, வேம்பு என 4 மகள்கள். வறுமை சூழ்ந்த நிலையிலும் 4 பிள்ளைகளையும் பாசத்தைக் கொட்டி வளர்த்து, மணம் முடித்துக் கொடுத்துள்ளார் நடராஜன்.

image

ஊரை ஒட்டி உள்ள 50 சென்ட் நிலத்தில் குருவிக்கூட்டைப் போன்ற ஆஸ்பெட்டாஸ் வீட்டைக் கட்டிக் கொண்ட நடராஜன், மீதமுள்ள இடத்தில் நெல் பயிரிடுவதி வழக்கமாக கொண்டிருந்தார். இதில் கிடைக்கும் நெல்லை 4 பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்துள்ளார் இந்த ஏழை விவசாயி. வயல் வேலை போக மற்ற நாள்களில் விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார் நடராஜன்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்றதும், தந்தைமார்களுக்கு நிலை கொள்ளாது. மகள்களைப் பார்க்க வேண்டும், தான் விளைவித்த புத்தரிசியுடன் பொங்கல் பொருள்களையும் சீராகக் கொடுக்க வேண்டும் என்று வண்டி கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவார்கள். தந்தை தருவது ஒரு படி அரிசியாக இருந்தாலும், பொங்கி வழியும் பாசத்தால் ஆயிரம் மூட்டை அரிசியாகக் கொண்டாடுவார்கள் தமிழக பெண் பிள்ளைகள். பொங்கல் சீரைக் கொடுக்கும் போது தந்தைக்கும் வாங்கும்போது மகளுக்கும் மகிழ்ச்சியில் கண்கள் துளிர்க்கும். தமிழ்நாட்டில் காலம் காலமாக இருந்து வரும் மரபு இது.

image

அப்படி ஒரு தருணத்தை எதிர்நோக்கித்தான், 4 பிள்ளைகளுக்கும் பொங்கல் சீர் கொடுக்க புறப்பட்டுள்ளார் விழுப்பணங்குறிச்சி நடராஜன். தஞ்சை மாவட்டம் வரகூரில் மூத்த மகள் தனுசுகொடிக்கு சீர் கொடுத்துவிட்டு, 2 வது மகளான தனலட்சுமிக்கான பொங்கல் சீருடன் திருச்சி மாவட்டம் டால்மியாபுரத்து செல்ல பேருந்தில் ஏறியுள்ளார் அந்த ஏழை தந்தை.

அடுத்தடுத்து பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளையும் பார்த்து மகிழ்வதற்காகப் புறப்பட்ட நடராஜனின் பயணத்தை இறுதிப்பயணமாக்கி விட்டது அந்த விபத்து. வரகூர் அருகிலேயே மின்கம்பி பேருந்தில் உரசியதில் உயிரிழந்த நால்வரில் விழுப்பணங்குறிச்சி நடராஜனும் ஒருவர்.

பொங்கல் சீருடன் வரும் தந்தைக்காகக் காத்திருந்த 3 மகள்களுக்கு அவரது மரணச் செய்திதான் கிடைத்துள்ளது. பொங்கல் சீர் வாங்கிய மூத்த மகளுக்கும், நடராஜனின் மனைவிக்கும் இந்த தகவல் பேரிடியாக அமைந்தது. விரிவான செய்தி வீடியோ வடிவில்…Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *