வாஜ்பாய் காலத்தைவிட அதிகம்… பட்ஜெட் 2021-ல் ‘தனியார்மயமாக்கல்’ தீவிரம் எத்தகையது? | privatisation and Budget 2021, Explained | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். எதிர்பார்த்தது போலவே இந்த பட்ஜெட்டில் தனியார் முதலீடுகள் குறித்து பேசப்பட்டது. எனினும், தனியார் முதலீட்டுக்கு அனுமதிக்கும் அதேநேரத்தில், நான்கு முக்கியத் துறைகளில் அரசு குறைந்தபட்ச இருப்பைக் காக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
முக்கிய துறை: குறைந்த அளவிலான பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் இருக்கும்; மற்றவை தனியார் மயமாக்கப்படும் அல்லது மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் இணைக்கப்படும் அல்லது மூடப்படும்.
முக்கிய பிரிவுகளின் கீழ் வரும் துறைகள்: அணுசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை, போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு,
மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இதர கனிமவளங்கள் துறை, வங்கித்துறை, காப்பீடு மறறும் நிதி சேவைகள் துறை ஆகிய துறைகளில் குறைந்தபட்ச இருப்பை அரசு வைத்துக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற துறைகள் அனைத்தும் தனியார்மயமாக்கப்படும். “ஆத்மநிர்பர் தொகுப்பின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட இந்தக் கொள்கைக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. குறைந்தபட்ச எண்ணிக்கையிலான நிறுவனங்கள் தக்கவைக்கப்படும், மீதமுள்ளவை தனியார்மயமாக்கப்படும். மற்ற துறைகளில், அனைத்து நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்படும்” என்று நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிட்டார்.
எந்தெந்த நிறுவனங்கள்?
2021-22 ஆம் ஆண்டில் தனியார்மயமாக்கப்படும் நிறுவனங்களில் பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட், ஏர் இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் மற்றும் பவன் ஹான்ஸ் ஆகியவை அடங்கும். இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை பங்கு விற்பனையின் பல்வேறு ஆரம்ப கட்டங்களில் உள்ளன.
அதன்படி, “பல விமான நிலையங்களின் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்படும். எல்.ஐ.சி. பங்குகளை விற்க திட்டம்; 2 பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும். பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடியும்.
பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 49% இருந்து 74% ஆக உயர்த்தப்படுகிறது. துறைமுகங்களில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி. இந்த நோக்கத்திற்காக தொடர்புடைய சட்டங்களுக்கான திருத்தங்கள் தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் பொருளாதார தொகுப்பின் ஒரு பகுதியாக, முக்கியமற்ற துறைகளில் இருந்து வெளியேறுவதற்கும், முக்கியமான துறைகளில் அதன் இருப்பை அதிகபட்சம் நான்கு நிறுவனங்களுக்குக் குறைப்பதற்கும் அரசாங்கம் தனது நோக்கத்தை அறிவித்தது.
கடந்த ஆண்டு ஒரு அமைச்சரவைக் குறிப்பில், முக்கியத் துறைகள் என வகைப்படுத்தக் கூடிய 18 துறைகளின் பட்டியலை அரசாங்கம் முன்மொழிந்தது. மின்சாரம், வங்கி, காப்பீடு, எஃகு, நிலக்கரி, உரம், பெட்ரோலியம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற துறைகள் இதில் அடங்கும். கடந்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற திட்டம் இப்போது முக்கியத் துறைகளின் எண்ணிக்கையை 18-ல் இருந்து 4 ஆக குறைக்க முன்மொழியப்பட்டது.
வாஜ்பாய் காலத்துக்கு பிறகு முதல் பெரிய தனியார்மயமாக்கல்!
அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தில் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவால், முன்வைக்கப்பட்ட 1998 பட்ஜெட்டில், முக்கியமற்ற நிறுவனங்களில் மத்திய அரசின் பங்குகளை 50 சதவீதத்திற்கும் குறைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வி.எஸ்.என்.எல், பால்கோ, இந்துஸ்தான் துத்தநாகம், மாருதி சுசுகி மற்றும் சி.எம்.சி லிமிடெட் போன்ற நிறுவனங்கள் சில முக்கிய துறைகளில் விற்பனை பரிவர்த்தனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
அதன்பிறகு மோடி அரசில்தான் தனியார்மயமாக்கல் தீவிரமயமாக்கப்பட்டு வருகிறது. அதிலும் இந்த முறை அதிகத்துறைகளில் தனியார் மயமாக்கல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– மலையரசு