வறுமையால் வளையல் விற்பனை செய்த மாற்றுத்திறனாளி – ஐ.ஏ.எஸ் அதிகாரியான உத்வேக கதை..! | How A Specially-abled Bangle Seller Became An IAS Officer | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
சிறுவயதில் குடும்ப வறுமை காரணமாக வளையல் விற்பனை செய்த மாற்றுத்திறனாளியான ரமேஷ் கோலாப், ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி சாதித்துள்ளது அனைவருக்கும் உற்சாக டானிக்காக உள்ளது.
விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் இந்த உலகத்தில் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்பதற்கு ரமேஷ் கோலாப்பை விட பெரிய உதாரணம் யாரும் இருக்க முடியாது. வளையல் விற்பனையாளராக வாழ்க்கையை தொடங்கிய 2012 பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரமேஷ், இப்போது ஜார்க்கண்டில் எரிசக்தி துறையில் இணை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ராமு என்றும் அழைக்கப்படும் ரமேஷ் வாழ்க்கையில் நிறைய ஏற்ற தாழ்வுகளை எதிர்கொண்டார், ஆனால் அவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியவில்லை. ரமேஷ் கோலாப்பின் தந்தை கோரக் கோலாப் மிதிவண்டி பழுதுபார்க்கும் கடையை நடத்தி வந்தார், அது அவரது குடும்ப வருமானத்துக்கு போதுமானதாக இருந்தது, ஆனால், தொடர்ந்து குடிப்பதால் அவரது உடல்நிலை மேசமானதால், ராமு பள்ளி படிக்கும்போதே தந்தையை இழந்தார்.
அதன்பின்னர் குடும்ப வறுமை காரணமாக ரமேஷின் தாய் விமல் கோலாப் அருகிலுள்ள கிராமங்களில் வளையல்களை விற்கத் தொடங்கினார். ரமேஷின் இடது கால் போலியோவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவரும் அவரது சகோதரரும் தங்கள் தாயுடன் சேர்ந்து வளையல் விற்க தொடங்கினார்கள், தாயுடன் சேர்ந்து வீதிகளில் எல்லாம் ரமேஷும் அவரது சகோதரரும் “பாங்டே கியா பேங்டே (வளையல்களை வாங்குங்கள்!)” என்று சத்தமாகக் கத்துவார்கள், இப்படித்தான் ரமேஷின் சிறுவயது நாட்கள் நகர்ந்தன.
மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பார்ஷி தாலுகாவில், மகாகான் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், அங்கு ஒரே ஒரு தொடக்கப்பள்ளி மட்டுமே இருந்தது, அதனால் ரமேஷ் தனது மாமாவுடன் பார்ஷிக்கு மேல்படிப்புக்காக தங்கச் சென்றார். பள்ளி நாட்களில் நன்றாக படித்தாலும், ரமேஷ் கல்வியில் டிப்ளோமா மட்டுமே படித்தார், ஏனெனில் அப்போது அவர்களால் அதான் முடிந்தது. ஆனால் அவரின் முயற்சி அதோடு நிற்கவில்லை, தொடர்ந்து திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் படித்து, 2009 இல் ஆசிரியரானார்.
தனது கல்லூரி காலங்களில் பார்வையிட்ட ஒரு தாசில்தாரிடமிருந்து உத்வேகம் பெற்ற ரமேஷ், அதுபோல அரசு அதிகாரிகளில் ஒருவராக இருக்க விரும்பினார். ஆசிரியர் பணியில் இருந்தபோது, அவரின் தாயார் சுய உதவிக்குழுவில் இருந்து கொஞ்சம் கடன் வாங்கி கொடுத்த பின்னர், ரமேஷ் தனது வேலையை விட்டுவிட்டு, புனே சென்று ஆறு மாதங்கள் யு.பி.எஸ்.சி பயிற்சி எடுத்து 2012 ஆம் ஆட்சிப்பணிகள் தேர்வில் வெற்றிபெற்றார்.