லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம் | Lockdown Made India’s Billionaires 35% Richer, Lakhs Lost Jobs: Oxfam | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
ஆக்ஸ்பாம் அமைப்பின் அறிக்கையின்படி, 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் பொதுமுடக்கத்தின்போது நாட்டில் பில்லியனர்களின் செல்வம் 35 சதவிகிதம் அதிகரித்தது. அதே நேரத்தில் 84 சதவீத குடும்பங்கள் பல்வேறு வகையான வருமான இழப்புகளை சந்தித்தன. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1.7 லட்சம் பேர் வேலை இழந்தனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவின் பெரும் செல்வந்தர்களுக்கும், கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும் இடையில் இருக்கும் வருமான ஏற்றத்தாழ்வுகளை மோசமாக்கியுள்ளது. தற்போது மக்களில் பெரும்பாலானோர் நீண்ட காலமாக வேலையில்லாமல் இருக்கிறார்கள் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளை பூர்த்திசெய்ய முடியாமல் போராடுகிறார்கள் என்று இலாப நோக்கமற்ற அமைப்பான ஆக்ஸ்பாம், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில், 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் பொது முடக்கத்தின்போது நாட்டின் பில்லியனர்களின் செல்வம் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 84 சதவீத குடும்பங்கள் பல்வேறு வகையான வருமான இழப்புகளை சந்தித்தன. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1.7 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று அறிக்கை கூறியுள்ளது.
2020 மார்ச் மாதத்திலிருந்து பொது முடக்கத்தின்போது இந்தியாவின் டாப் 100 பில்லியனர்களுக்கான வருமான அதிகரிப்பு, 138 மில்லியன் ஏழ்மையான மக்கள் ஒவ்வொருவருக்கும் 94,045 ரூபாய் காசோலையை வழங்க போதுமானது என்றும் அது கூறியுள்ளது.
இந்தியாவின் முதல் 11 பில்லியனர்களுக்கு “தொற்றுநோய்களின்போது உயர்ந்த வருமான அதிகரிப்புக்கு ஒரு சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்பட்டால்” அரசுக்கு பல மடங்கு வருமானம் கிடைக்கும். இது மக்களுக்கு தரமான மருந்துகளை மலிவு விலையில் கிடைப்பதை 140 மடங்கு அதிகரிக்கும் என்று இந்த அறிக்கை தெரிவித்தது
“உலகளவில், கோடீஸ்வரர்களின் செல்வம் மார்ச் 18 முதல் டிசம்பர் 31, 2020 வரை 3.9 டிரில்லியன் டாலர் அதிகரித்துள்ளது . அதே நேரத்தில் வறுமையில் வாடும் மொத்த மக்களின் எண்ணிக்கை 200 மில்லியனிலிருந்து 500 மில்லியன் வரை அதிகரித்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் 10 பணக்கார கோடீஸ்வரர்களில் செல்வத்தின் அதிகரிப்பு – பூமியில் உள்ள எவரும் வைரஸ் காரணமாக வறுமையில் விழுவதைத் தடுக்கவும், உலகில் உள்ள அனைவருக்கும் ஒரு கோவிட் -19 தடுப்பூசிக்கு பணம் செலுத்தவும் போதுமானது” என கூறியது.
இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய இந்திய அரசுக்கு ஆக்ஸ்பாம் அளித்த பரிந்துரைகளில், குறைந்தபட்ச ஊதியங்களை திருத்தி, முறையான இடைவெளியில் ஊதியத்தை உயர்த்த பரிந்துரைத்துள்ளது.
50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு இரண்டு சதவீத கூடுதல் கட்டணம் விதிக்கவும், தொற்றுநோய்களின்போது அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு தற்காலிக வரியை அறிமுகப்படுத்தவும் இது அரசாங்கத்தை கோரியது. “ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இந்திய அரசு குறிப்பிட்ட மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது . குடிமக்களின் குரல்கள் மிகவும் சமமான மற்றும் நியாயமான எதிர்காலத்தை நாடுகின்றன” என்று அறிக்கை கூறியுள்ளது.