ரீவைண்ட் 2020: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் ஈர்த்த 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்! | List of Indian Cricket Players who Rocked in their game at the International Arena in 2020 a Rewind | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


List-of-Indian-Cricket-Players-who-Rocked-in-their-game-at-the-International-Arena-in-2020-a-Rewind

2020ஆம் ஆண்டு அனைத்து துறைகளையும் முடக்கி போட்டுவிட்டது கொரோனா. அதற்கு, விளையாட்டு துறை மட்டும் விதிவிலக்கல்ல. குறிப்பாக மக்கள்தொகையில் உலகின் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தலைமுறை தலைமுறையாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இப்போது மொபைல் என பல தளங்களிலும் கிரிக்கெட் விளையாட்டை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகிறாரார்கள். 

image

அந்த வகையில் இந்த 2020 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக  சர்வதேச அளவிலும், உள்ளூர் அளவிலும் கலக்கிய வீரர்கள் குறித்த ஒரு பார்வை இதோ…

image

தங்கராசு நடராஜன்: சில ஆண்டுகளுக்கு முன்னரே ஐபிஎல் தொடரில் விளையாட ஏலம் எடுக்கப்பட்டிருந்தாலும், அணியில் ஆடும் லெவனில் இடம்பிடிப்பதே நடராஜனுக்கு சவாலான காரியமாக இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடர் தொடங்கும்போது ஹைதராபாத் அணியில் விளையாட வேண்டும் என்பதே நடராஜனின் எண்ணமாக இருந்தது. அது நடந்தது. 16 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். யார்க்கர் பந்துகளில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களை திணறச் செய்தார் இந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர். அதன் பலனாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அணியில் இடம்பிடித்தார். அதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் அஷ்வினின் யூடியூப் சேனலில் ‘இந்தியா ஆடணும் அண்ணா’ என நடராஜன் சொல்லி இருந்தார். இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் அவர் களம் இறங்கியதை உலகமே கொண்டாடியது. தொடர்ந்து டி20 போட்டியிலும் மாஸ் காட்டினார். இப்போது டெஸ்ட் போட்டியில் விளையாடவும் ஆயத்தமாகி வருகிறார் இந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர். 

image

தேவ்தத் படிக்கல்: ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியின் தொடக்க வீரராக விளையாடி பட்டையை கிளப்பியவர் 20 வயதான தேவ்தத் படிக்கல். பெங்களூர் அணிக்கு கிறிஸ் கெயில் இல்லாத குறையை நிரப்பியவர். அவரது பொறுமையான நேர்த்தியான ஆட்டம் பெங்களூர் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்தது. முதல் ஐபிஎல் சீசன் என்பது அல்லாமல் அவரது ஆட்டத்திறன் அபாரமாக இருந்தது. 15 போட்டிகளில் விளையாடியுள்ள தேவ்தத் 473 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். இவர் சிக்ஸர்களை காட்டிலும் நேர்த்தியான கிளாசிக் பவுண்டரிகளை அடிப்பதில் வல்லவராக இருந்துள்ளார். முதல் சீசனிலே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கலுக்கு வளர்ந்து வரும் வீரர் விருது அளிக்கப்பட்டுள்ளது. இவரை இந்தியாவின் எதிர்கால தொடக்க வீரர் எனவும் இப்போதே சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். 

image

சூரியகுமார் யாதவ்: 30 வயது மும்பை மைந்தரான சூரியகுமார் யாதவ் உள்ளூர் கிரிக்கெட், ஐபிஎல் என தொடர்ந்து அசத்தி வருபவர். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் சூரியகுமார் இடம்பெறாமல் போனதை பலரும் விமர்சித்திருந்தனர். மிடில் ஆர்டரில் நேர்த்தியாக விளையாடுவதுதான் சூரியகுமாரின் பாணி. முதல் தர கிரிக்கெட்டில் 5326 ரன்களை குவித்துள்ளார் சூரியகுமார். இந்தியாவுக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவை இருந்தும் சூரியகுமாரை அந்த இடத்தில் விளையாட தேர்வு செய்யாதது புரியாத புதிராக உள்ளது.  மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2018 தொடங்கி 2020 வரை 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

image

வருண் சக்கரவர்த்தி: ஐபிஎல் தொடரில் முத்திரைப் பதித்த மற்றொரு தமிழக வீரர்தான் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. கொல்கத்தா அணிக்காக 13 ஆட்டங்களில் விளையாடியவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தோனிக்கே சவால் கொடுக்கும் வகையில் அவரது பந்து வீச்சு இருந்தது. டெல்லி அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பந்துவீச்சுத் திறனில் முத்திரைப் பதித்திருந்தார் வருண். அதன் பலனாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணியில் இடம்பிடித்தார். இருந்தும் காயம் காரணமாக விலகினார். 

image

முகமது சிராஜ்: ஆட்டோ தொழிலாளியின் மகனான முகமது சிராஜ் இப்போது இந்தியாவின் வேகப்புயல்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 2020 சீசனில் 9 ஆட்டங்களில் விளையாடிய அவர் 11 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அதோடு ஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் இரண்டு ஓவர்கள் மெய்டன் வீசியதும் அவர்தான். இந்த சாதனைகள் எல்லாம் சிராஜை இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்ய வைத்தது. அதன்படியே ஆஸ்திரேலியாவுக்கு சென்ற அவர் தனது  தந்தையின் இழப்பையும் தாங்கிக் கொண்டு, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார். இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது முதல் ஆட்டத்திலேயே கலக்கி இருந்தார் சிராஜ். 

இஷான் கிஷன், ராகுல் திவாட்டியா, பிரியம் கார்க், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவி பிஷோனி, அப்துல் ஸமாத் மாதிரியான வீரர்களும் இந்த ஆண்டு கிரிக்கெட்டில் தங்களது ஆட்டத்தின் மூலம் முத்திரை பதித்தனர். Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *