ராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம் | Congress waiting for Rahul Gandhi: Leaders continue to be confused by criticism | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Congress-waiting-for-Rahul-Gandhi--Leaders-continue-to-be-confused-by-criticism

பீகார் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற இடைத்தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியின் தோல்விகளால் துவண்டுள்ள தலைவர்களின் தொடர் விமர்சனங்கள் கட்சியில் குழப்பத்தை உருவாக்கிவருகிறது.

image

உடல் நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி டெல்லியிலிருந்து சமீபத்தில் கோவாவுக்கு இடம்பெயர்ந்துள்ள நிலையில், மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இடையே குழப்பம் உச்சமடைந்துள்ளதை தொடர்ந்து உட்கட்சிப் பூசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குலாம் நபி ஆசாத் மற்றும் கபில் சிபல் போன்ற தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் சல்மான் குர்ஷித் போன்ற தலைவர்களின் பதில் கருத்துக்கள் அனைத்தும், காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தலைவராக ராகுல் காந்தியே விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வரும் இச்சூழலில் தொடர்ந்து உட்கட்சிப் பூசலை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே சோனியா காந்தி தலைவராக இருந்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புதிய தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல்காந்தி பதவி விலகியபோது மீண்டும் சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்றார்.

தற்போது சோனியா காந்தி இடைக்கால தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்றும் ராகுல் காந்தியே தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் ஒரு சாரார் வலியுறுத்தி வரும் நிலையில் இதுகுறித்து தெளிவான கருத்துக்கள் எதுவும் கட்சித் தலைமையிடம் இருந்து வரவில்லை.  மீண்டும் ஒருமுறை ராகுல்காந்தி தலைமையில் செயல்பட்டால் காங்கிரஸ் தொடர்ந்து சறுக்கல் பாதையிலிருந்து மீள்வதற்கான வழி இல்லாமல் போய்விடும் என ஒருசாரார் அச்சப்படுகிறார்கள்.

image

ஆகவே புதிய தலைவராக காந்தி குடும்பத்தை சேராத ஒருவரை கொண்டு வரவேண்டும் என இவர்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு சாரார் ராகுல் காந்தி இல்லாவிட்டால் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தியை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த மாநிலத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்திருப்பதை தொடர்ந்து, எப்படி முன்பு பொதுத் தேர்தல் தோல்வி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு கவிழும் அபாயம் போன்ற சூழ்நிலைகளில் பல்வேறு தலைவர்களின் கருத்துக்கள் கட்சிக்குள் நிலவும் குழப்பத்தை பிரதிபலித்ததோ அதேபோல மீண்டும் ஒருமுறை நடைபெறுகிறதோ என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குழப்பத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.

ராகுல் காந்தி இதுவரை தானே மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க தயார் என்று வெளிப்படையாக தெரிவிக்க வில்லை என்பதாலும் அதே சமயத்தில் சோனியா காந்தி மீண்டும் ராகுல் தலைவராக வரவேண்டும் என்று வெளிப்படையாக தெரிவிக்காததாலும் தற்போது குழப்பம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஒருவேளை ராகுல் காந்தி தொடர்ந்து மறுப்பு தெரிவித்தால் தங்களுக்கு தலைமை வாய்ப்பு கிட்டும் என ஒருசில தலைவர்கள் கனவு கண்டு வரும் நிலையில், குலாம் நபி ஆசாத் மற்றும் கபில்சிபல் போன்ற தலைவர்கள் கட்சி வெற்றிப் பாதைக்கு திரும்பா விட்டால் எதிர்காலமே இல்லை என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆகவேதான் கட்சி அமைப்பு வலுவடைய வேண்டும் என்றும் கட்சி பொறுப்பாளர்கள் களப்பணி ஆற்றாமல் சொகுசு வாழ்க்கை வாழ்வது தவறை என்றும் குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார். கட்சியை சரியான பாதைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கபில் சிபல் வலியுறுத்தியுள்ள நிலையில், ப.சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்களும் கட்சி வலுவடைந்து வெற்றிகளை பெற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளதன் மூலம் செயல்பாட்டில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முக்கியமான காரணம் வலுவாக கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தலைமை இல்லாததுதான் என பல காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோர் 24 மணி நேரமும் தங்களுடைய முழு கவனத்தை கட்சியை சீரமைக்கும் பணிகளில் ஈடுபடவேண்டும் எனவும் அப்படி முழுமூச்சாக செயல்பட்டால் மட்டுமே பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான போட்டியை கொடுக்க முடியும் என பல காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள்.

நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தலைமையில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து தேர்தல்களுக்கு திட்டமிடல் மற்றும் பிரச்சார வியூகங்கள் உள்ளிட்ட முடிவுகளை முன்கூட்டியே எடுத்து அதற்கேற்ற வகையில் கட்டுக்கோப்பாக வேட்பாளர்களையும் தேர்வு செய்கிறது என்றும் இதனால் தான் அந்த கட்சிக்கு தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி கிடைக்கிறது என்றும் பல காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள். தற்போதைய கரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அதற்கு முன்பாக பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக மக்களிடையே அதிருப்தி இருந்தாலும் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி தேர்தல்களில் வெற்றி பெற இதுவே காரணம் என காங்கிரஸ் கட்சியில் கருத்து நிலவுகிறது.

image

அதே போலவே காங்கிரஸ் கட்சியும் புதிய கூட்டணிகளை அமைப்பது மற்றும் கட்சித் தலைவர்கள் இடையே உள்ள வேறுபாடுகளை களைவது  போன்ற விஷயங்களில் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் ராஜஸ்தானில் சச்சின் பைலட் அதிருப்தி போன்ற விஷயங்களை முளையிலேயே கிள்ளி எறியும் அளவுக்கு துல்லியமாக மற்றும் விரைவாக கட்சி தலைமை செயல்பட வேண்டும் என அவர்கள் கருதுகிறார்கள். ராகுல் காந்தி மீண்டும் தலைவராவதற்கு கட்சிக்குள் ஆதரவு இருந்தாலும் அவருடைய செயல்பாடுகள் மாற வேண்டும் என்றும் கட்சியை அவர் கட்டுப்பாட்டில் முழுவதுமாக அவர் இயக்க வேண்டும் எனவும் கட்சிக்குள் கருத்து நிலவுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராகுல்காந்தி புதிய கட்சித்தலைவர் முறையாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் ஜனநாயக முறைப்படி பின்பற்றப்பட வேண்டும் எனவும் எனவும் கருதுகிறார். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எப்போதும்போல உட்கட்சி தேர்தல்களை நடத்த முடியுமா என்று பல்வேறு கேள்விகள் இருந்து வரும் நிலையில் மீண்டும் ராகுல் காந்தி எப்போது தலைவராக வருவார் என அந்த கட்சி தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். காந்தி குடும்பத்தில் அல்லாத ஒருவரை தலைவராக நியமித்தால் உட்கட்சி பூசல் பெருகும் என பலமான கருத்து நிலவுவதால்,  தாமதம் ஏற்பட்டாலும் ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வருவார் என்றும் அப்போது காங்கிரஸ் கட்சியில் நிலவிவரும் குழப்பங்கள் முடிவுக்கு வரும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

– கணபதி, புதியதலைமுறை டெல்லி செய்தியாளர்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *