மேற்கு வங்க தேர்தலுக்காக கங்குலிக்கு ‘அழுத்தம்’ தருகிறதா பாஜக? – ஒரு பார்வை | Explainer: Sourav Ganguly ’under pressure’ to join politics in West Bengal | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Explainer--Sourav-Ganguly----under-pressure----to-join-politics-in-West-Bengal

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி கடந்த சனிக்கிழமை நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையும் அளித்தனர். கங்குலி உடல்நலம் குன்றியத்தில் இருந்தே அவரைச் சுற்றி ஓர் அரசியல் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அவரது உடல் நலம் குன்றுவதற்குக் காரணமே அரசியல் தலைவர்கள்தான் என்ற குற்றச்சாட்டும் ஒருபுறம் எழுந்துள்ளது.

மருத்துவமனையில் நேற்று கங்குலியை சந்தித்துவிட்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அஷோக் பட்டாச்சார்யா இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். “கங்குலிக்கு அரசியலில் பெரிய அனுபவம் கிடையாது. அதனால், அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களே இந்த உடல்நலக் குறைவிற்கு காரணம். மருத்துவமனையில் அவரை சந்தித்தபோது ‘அரசியல் வேண்டாம்’ என்றேன். அவரும் அமைதியாக அதை கேட்டுக்கொண்டார்” என பாஜகவை குறிவைத்துப் பேசினார்.

அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் கங்குலியை தங்கள் கட்சி சார்பில் களமிறக்க பாஜக முயன்று வருவதாக பல மாதங்களாக பேச்சுக்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. கங்குலியை அரசியலில் இறக்கி, மேற்கு வங்க தேர்தல் களத்தை மம்தா Vs கங்குலி என மாற்ற பாஜக திட்டமிட்டு வருவதாகவும், அதற்காக கங்குலிக்கு பாஜக அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. அதற்கேற்ப சமீபத்தில் சில சம்பவங்களும் நடந்தன.

image

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்பு பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்தவர் நீக்கப்பட்ட பிறகு, அமித் ஷா மற்றும் அவரது அமைச்சரவை சகா அனுராக் தாக்கூர் ஆகியோரின் ஆதரவோடு 2019 அக்டோபரில் சவுரவ் கங்குலி பி.சி.சி.ஐ தலைவரானார். கங்குலியுடன், மேலும் இரண்டு நபர்கள் முக்கிய பதவிகளுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த இருவர், பிசிசிஐ செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ பொருளாளராக அனுராக் தாக்கரின் சகோதரர் அருண் துமல்.

இந்தச் சம்பவம் நடந்தபோதே கங்குலி பாஜகவில் சேர இருக்கிறார் என்ற விவாதம் எழுந்தது. ஆனால், அப்போது அமித் ஷா, “பாஜக கங்குலியை இழுக்க முயற்சிக்கவில்லை. ஆனால், அவர் பாஜகவில் சேர்ந்தால் நல்லது” என்று மட்டும் விளக்கம் கொடுத்தார். ஆனால் கங்குலியோ, “பிசிசிஐ தலைவராக அமித் ஷாவுடன் எந்த பண்டமாற்றும் செய்யப்படவில்லை. அனுராக் தாக்கூர் பிசிசிஐ தலைவரானபோது, நாங்கள் அவரை ஆதரித்தோம். சஷாங்க் மனோகர் தலைவரானபோது, டால்மியா அவரை ஆதரித்தார். சிந்தியா மற்றும் பவார் ஆகியோர் ஆகும் இதுவே நடந்தது. எனவே இதில் பாஜகவில் சேருவதற்கான கேள்வி எங்கே இருந்து வருகிறது?” என்று ஒரு நேர்காணலில் விளக்கம் கொடுத்தார்.

கங்குலி அரசியலில் நுழைவாரா, அதுவும் பாஜகவில் சேருவாரா என்பது நிச்சயமற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது. ஏனென்றால். இப்போது வரை, அரசியலில் நுழைய தனக்கு எந்த திட்டமும் இல்லை என்று சவுரவ் கங்குலி மறுத்தே வருகிறார். ஆனால், பாஜக தரப்பில் இருந்து அவருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. அதற்கேற்ப, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் டிசம்பர் 27 அன்று கங்குலியை நேரில் வரவழைத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் கங்குலி, “நான் ஒருபோதும் ராஜ் பவனுக்கு சென்றதில்லை. ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு ஆளுநர் தங்கர் பதவியேற்றார். ஆனால், அவர் ஒருபோதும் ஈடன் கார்டனுக்குச் சென்றதில்லை. எனவே, பேச விரும்பி ஆளுநர் அழைத்தால், நான் செல்ல வேண்டியிருந்தது.

நாங்கள் விளையாட்டுகளைப் பற்றி மட்டுமே பேசினோம், வேறு எந்த விவாதமும் இல்லை. அவர் ஈடன் கார்டனுக்குச் செல்ல விரும்புகிறார், அதை நாங்கள் ஏற்பாடு செய்வோம்” என்றார். ஆயினும், ஆளுநர் தங்கருடன் அவர் சந்தித்ததும், அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுடனான நெருக்கமான தன்மையும் கங்குலி பாஜகவில் சேரப்போவதாகவே உணர்த்தியது.

image

இந்தப் பின்னணியை குறிப்பிட்டுதான், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சவுகதா ராய், “கங்குலி ஒரு பெங்காலி ஐகான். தேர்தலை மம்தாவுக்கும் தாதாவுக்கும் இடையிலான சண்டையாக திட்டமிட முயற்சித்திருப்பதை நாங்கள் அறிவோம். ஆனால், சவுரவ் கங்குலி விவேகமானவர் என்று நாங்கள் நினைக்கிறோம். பாஜக முன்வைத்த பொறியில் சிக்கமாட்டார்” என்றார். இப்படி கங்குலியை சுற்றி அரசியல் விவாதங்கள் நடக்கவே, அவரது உடல் நலம் குன்றக் காரணமே அரசியல் தலைவர்கள்தான் என்று அஷோக் பட்டாச்சார்யா குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அசோரக் பட்டாச்சார்யாவின் குற்றச்சாட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இவர் சவுரவ் கங்குலியின் நீண்டகால குடும்ப நண்பர். கங்குலியுடன் நெருங்கிப் பழகும் ஒரு நபரும் கூட. இவரின் இந்தக் கருத்தை அடுத்து கங்குலி மீது பாஜக கூடுதல் அழுத்தம் கொடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், பட்டாச்சார்யாவின் கருத்துகளை வன்மையாக கண்டித்துள்ள மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், “சிலர் தங்கள் நோயுற்ற மனநிலையால் எல்லாவற்றிலும் அரசியலைப் பார்க்கிறார்கள். அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களைப் போலவே, சவுரவ் முழுமையாக குணமடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

– மலையரசுSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *