‘மூக்குத்தி அம்மன்’ திரை விமர்சனம் – எடுபடாத அரைகுறை அரசியல்! | Mookuthi Amman movie review | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Mookuthi-Amman-movie-review

தீபாவளி ரிலீஸாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது ‘மூக்குத்தி அம்மன்’. நயன்தாராவின் நடிப்பில், ஆர்.ஜே பாலாஜி – என்.ஜே சரவணன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் எப்படி இருக்கிறது? – இதோ ஒரு சிறப்புத் திரைப்பார்வை…

சமூகக் கருத்துக்களை சினிமா என்கிற மீடியம் மூலமாக சொல்வது நமக்கு புதிதில்லை. சொல்லப்போனால், வசனம் மூலமாக ஒருவித பிரச்சார தொனியில் அதை மிகப்பெரிய அளவில் சொல்ல ஆரம்பித்து வைத்ததே நாம்தான். நம் தமிழ்ச் சமூகத்தில் அரசியலும், சினிமாவும் ஒன்றோடு ஒன்றாக கலந்திருப்பதற்கான விதையே அங்கே விழுந்ததுதான்.

ஆனால், சினிமாவில் பிரச்சார தொனி இருப்பது காலப்போக்கில் அழிந்துபோன ஒரு விஷயம். ஏனென்றால் சினிமா ஒரு விஷுவல் மீடியம். ‘பராசக்தி’யின் இறுதிக்காட்சியில் சிவாஜி இருபது நிமிடங்களுக்கு மேலாக பேசிய வசனங்களை கேட்டு சிலிர்த்த மக்கள் திராவிட கட்சியின் மீது அபிமானம் கொண்டார்கள். மக்களை திரையை நோக்கி இழுக்கும் ஒரு சாதனமாக மட்டும் இல்லாமல், அந்த மக்கள் அலையை ஓட்டாக மாற்றும் மாயாஜாலமும் நிகழ்ந்தது. மேலும், மேடை நாடகங்களில் இருந்து அப்போதுதான் சினிமா பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அதனால், இந்த நீண்ட வசனங்கள் தனி கிளர்ச்சியையே உண்டாக்கியது.

image

இதுவே 2000-க்குப் பிறகு கதாநாயகன் இறுதிக்காட்சிகளில் இப்படி மூச்சுவிடாமல் வசனம் பேசினால், வெறும் சிரிப்பு சத்தமே பதிலாக கிடைத்தது. ‘சிட்டிசன்’ படத்தில் அஜீத் பேசுவதும், ‘நெஞ்சினிலே’ படத்தில் விஜய் பேசுவதும் இதற்கு சிறந்த உதாரணங்கள். படம் முழுக்க காட்சியின் மூலம் ஓர் இயக்குநர் சொல்லாததையா இறுதியில் கால்மணி நேர வசனத்தில் சொல்லிவிடப்போகிறார் என்கிற பெரும் கேள்வி இங்கே எழுந்துள்ளது. அது நியாயமான கேள்வியும்கூட. எதுவாக இருந்தாலும் காட்சியின் மூலமாக புரியவைத்தல் தரும் தாக்கத்திற்கு ஈடு இணையே கிடையாது. பக்கம் பக்கமாக பேசுவதால் ஏற்படும் களைப்பு மொத்தப் படத்தின் மீதான நம்பிக்கையையே குலைத்துவிடும் என்பது மிகையில்லை.

‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் மிகப்பெரிய பிரச்னையே இதுதான். மூன்றே ஷாட்களில் விளக்கவேண்டிய காட்சியை பத்து தனித்தனி காட்சிகளாக எடுத்திருப்பது, நான்கே நான்கு வசனங்களில் புரியவைக்க வேண்டிய விஷயத்தை நாற்பது பக்க வசனங்களில் சொல்வது என தேவையற்ற அந்த இழுவை நம்மை சோர்வாக்குவதை தடுக்க இயலவில்லை.

அதேபோல். ஆர்ஜே பாலாஜி இருப்பதாலேயே காட்சிகள் எல்லாவற்றையும் நகைச்சுவையாக சொல்லியே ஆகவேண்டும் என்று நினைத்து வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட காமெடி வசனங்களால், மிகவும் சீரியஸாக அணுகவேண்டிய காட்சியிலும்கூட ‘சிரிப்பு’தான் வருகிறது.

image

மிகவும் எளிமையான கதை. ஆனால், கதை எதை நோக்கி நகர்கிறது என்பதை கண்டறிவதற்குள் இடைவேளையே வந்துவிடுகிறது. ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மூன்று தங்கைகளுக்கு அண்ணனான ஆர்.ஜே பாலாஜிக்கு ‘மூக்குத்தி அம்மன்’ என்கிற அவர்களின் தந்தை வழி குலதெய்வம் காட்சியளிக்கிறார். அதேநேரத்தில், நாகர்கோவிலின் 11 ஆயிரம் ஏக்கர் வன நிலத்தை திருடி அங்கே ஆஸ்ரமம் அமைக்க ஒரு சாமியார் விரும்புகிறார். பாலாஜியின் உதவியோடு அம்மன் அந்த சதித்திட்டத்தை முறியடிப்பதே கதை.

ஒருவரிக் கதையாக கேட்பதற்கு நன்றாக இருந்தாலும்கூட, திரைக்கதை குழப்பங்கள் காரணமாக வெகு சாதாரண உணர்வையே படம் தருகிறது. எந்த பெரிய திருப்பமோ அல்லது அதிர்ச்சியோ பார்ப்பவர்களுக்கு இறுதிவரை ஏற்படவே இல்லாததால் எளிதில் படம் சலிப்படைந்து விடுகிறது.

அம்மனாக நயன்தாரா வருகிறார். எனக்குத் தெரிந்து ஒரு வாரமோ அல்லது பத்து நாளோ கால்ஷீட் கொடுத்திருப்பார்போல. அதற்குள் என்னவெல்லாம் எடுக்கவேண்டுமோ எல்லாம் எடுத்துவிட்டார்கள். அம்மன் மேக்கப்பிற்கே அரைநாள் ஆகி இருக்கும் தினமும். அதுபோக எடுத்த காட்சிகள்தான் படத்தில் இருக்கின்றன. படம் தொடங்கி அரைமணி நேரம் கழித்துதான் அம்மன் வருகிறார். பின்னர் பத்து நிமிடம் தொடர்ச்சியாக வருபவர், அடுத்த அரைமணி நேரம் காணாமல் போய்விடுகிறார்.

மனிதனுடைய நோக்கம்தான் தீர்மானம் இல்லாததாக இருக்கும். இங்கே அம்மனுடைய நோக்கமே அப்படித்தான் இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே அம்மன் கதாபாத்திரத்தில் அத்தனை குழப்பம். “கடவுள் இல்லைன்னு சொன்னா நான் கொடுத்ததெல்லாம் இருக்கும். இருக்குனு நம்பிட்டா எதுவும் இருக்காது” என்று அம்மன் சொல்வது என்ன வகையான லாஜிக் என்று இறுதிவரை யோசித்தும் பிடிபடவில்லை.

image

ஒரு படம் சுவாரஸ்யமாக மாறுவதற்கு மிக முக்கிய காரணம். வலிமையான வில்லன் கதாபாத்திரம். இந்தப் படத்தில் பகவதி பாபாவாக அஜய் கோஷ் வருகிறார். அவர்தான் வில்லன் என்கிறார்கள். எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் அவர் வில்லனாக படத்தில் நடித்திருக்கிறார் என்பதை நம்ப இயலவில்லை. அவரே அவரை கலாய்த்துக் கொள்வதுபோல் காட்சிகள் இருந்தால் எப்படி அய்யா படம் பார்க்கிறவனுக்கு வில்லன் என்கிற நினைப்பு வரும்?

இதில் முக்கியமான ஒரு விஷயம் பகவதி பாபா கதாபாத்திரம் ஜக்கி வாசுதேவ் என்கிற கார்ப்பரேட் சாமியாரை மையமாக வைத்து எழுதப்பட்டது. குறைந்தபட்சம் அதையாவது முழுமையாக செய்திருக்கலாம். ஆனால், இடையில் நித்யானந்தாவை கிண்டல் செய்கிறேன் என்று அதற்கேற்றாற்போல் காட்சிகள் அமைத்து, உண்மையில் அந்த சாமியாரை நாம் எப்படி அடையாளம் காண்பது என்பதையே மறக்கடித்து விடுகிறார்கள்.

மேலும், ஸ்பூஃப் செய்வது என்பது எல்லாருக்கும் வந்துவிடாது. அது ஒரு தனிக் கலை. ஒரு விஷயத்தை ஸ்பூஃப் செய்தால். அதற்கு சம்பந்தப்பட்டவரே சிரிக்க வேண்டும். அதுதான் உண்மையான வெற்றி. ஆனால், இங்கே சாமியார்களை கேலி செய்கையில், அதில் ஒரிஜினாலிட்டியும் இல்லை, ஸ்பூஃப் தன்மையும் இல்லை. தேமே என்று காட்சிகள் நகர்கின்றன.

படம் ஆன்மிகத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் கார்ப்பரேட் சாமியார்களை கடுமையாக சாட ஆசைப்பட்டு எடுக்கப்பட்டிருந்தாலும்கூட, சில வசனங்கள் சொல்லவரும் செய்தி குழப்பத்தையே தருகின்றன.

image

உதாரணமாக. “நான் நோன்புக்கஞ்சியை குடிப்பேன்… புனித அப்பத்தை புசிப்பேன்… ஆனால் ஒருபோதும் ஆடிமாதம் ஊற்றும் கூழை குடிக்கவே மாட்டேன்…” என்று திராவிடர் கழகத்தை சேர்ந்த ஒருவர் பேசுவதுபோல் ஒரு வசனமும், அதைத்தொடர்ந்து மூக்குத்தி அம்மன், “கடவுளே இல்லைன்னு சொல்றான் பாரு அவனை நம்பு… ஆனா இதுமாதிரி ஒரு கடவுளை ஏத்துக்கிட்டு இன்னொரு கடவுள் இல்லைன்னு சொல்றான் பாரு… அவனை நம்பாதே…” என்று வசனம் பேசுகிறார். உண்மையில் இயக்குநர்கள் என்னதான் சொல்ல வருகிறார்?

திராவிட கழகம், கடவுளின் பெயரால் நடக்கும் மூடநம்பிக்கையை ஒழிக்க இங்கே என்னவிதமான முன்னெடுப்புகளை எல்லாம் நிகழ்த்தியுள்ளது என்பதை நாம் அறிவோம். தான் சார்ந்த மதத்தை சார்ந்த கடவுள்களின் பெயரால் நடக்கும் அநியாயத்தை சரிசெய்த பின்னரே இன்னொரு மதத்தை தட்டிக்கேட்கும் உரிமையை நான் பெறுகிறேன் என்பது அவர்களின் நோக்கமும்கூட. இதையும்கூட பல மேடைகளில் அவர்கள் கூறியுள்ளனர். இஃப்தார் கஞ்சி குடிப்பது எல்லாம் ஓட்டு அரசியல் வேலைகள். கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்று பெரியார் சொன்னது இந்துக் கடவுளை நம்புபவனை மட்டுமல்ல; உலகக் கடவுள் எல்லாரையும்தான். உண்மையில் இந்தக் காட்சியின் மூலம் படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியல் அரைவேக்காட்டுத்தனமானது. அதனாலேயே ஒதுக்கப்படவேண்டியதும்கூட.

ஊர்வசி ஒரு திறமையான நடிகை. அவர் தனது பணியை செவ்வனே செய்துள்ளார். பாலாஜி இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது. திடீரென பணக்காரனாக அவர் மாறும் இடத்தில் அவருடைய நடிப்பு அபாரம். ஆனால், மற்ற காட்சிகளில் அவ்வளவாக சோபிக்கவில்லை. வில்லன் அஜய் கோஷின் உடல்மொழி சலிப்பையே உண்டாக்குகிறது.

image

கிரிஷ்.ஜி-யின் இசையில் அந்த அம்மன் பாடல் கேட்கும்படியாக இருக்கிறது. சொல்லப்போனால் நீண்ட நாட்கள் கழித்து திரையில் அப்படி ஒரு பாடல் ஒலிப்பதை கேட்கவே நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், பின்னணி இசையில் அநியாய வாத்திய சத்தம். ‘படையப்பா’வில் வரும் ரம்யா கிருஷ்ணனுக்கு வரும் பின்னணி இசையை சற்றே மாற்றி அம்மனுக்கு போட்டிருக்கிறார்கள்போல.

எல்.கே.ஜி படத்தில் ஒருவித ஆச்சர்யம் தந்தார் ஆர்ஜே பாலாஜி. நகைச்சுவையும் அதில் நன்றாக எடுபட்டது. ஆனால், மூக்குத்தி அம்மனில் அது எடுபடாமல் போனதும், பேச வந்த அரசியல் தெளிவற்று இருப்பதும் படத்தோடு ஒன்றவிடாமல் செய்கிறது. சொல்லவந்தது நல்ல விஷயமாகவே இருந்தாலும்கூட, அதை சொல்லும் விதம் ஏற்புடையதாக இல்லாமல் போனால் என்ன நிகழும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி.

– பால கணேசன்Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *