மழையும் இருவாட்சி பறவையும் ! அப்படி என்ன தொடர்பு? | How far Hornbill related to rains | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


How-far-Hornbill-related-to-rains

பறவைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பறவைகளை உற்று நோக்கினால் நாம் எப்படிப்பட்ட சூழலியலில் வாழ்கிறோம் என புரிந்துவிடும். ஒவ்வொரு பறவையும் அதன் நடவடிக்கையும், சூழலியல் பாதிப்புகளுக்கு மனிதர்களுக்கு கொடுக்கும் எச்சரிக்கை மணிதான் பறவைகள். சூழலியல் சுட்டிக்காட்டிகளில் மிக முக்கியமானது இருவாட்சி என தமிழிலும், Horn Bill என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பறவை இனம்தான்.

image

மழைக்காடுகளில் இருவாட்சி பறவை இல்லையென்றால், மழை இல்லை என எடுத்துக்கொள்ளலாம். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதால், இருவாட்சி பறவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக பறவை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மிகவும் உயரமான மரங்களில் வசிக்கும் இருவாட்சி பறவைகள், மரங்கள் அழிக்கப்படுவதின் காரணமாக தன் இனத்தை பெருக்கிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றன.  இருவாட்சி பறவை இனம் அழிந்தால் மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் பத்து வகை மரங்கள் அழிந்து விடும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

image

இதற்குக் காரணம் இருவாட்சி உட்கொண்டு வெளியேற்றும் எச்சத்தில் உள்ள தாவர விதைகள் உயிர்ப்புத்தன்மைமிக்கதாக உள்ளதுதான். இப்படித்தான் காட்டில் அந்த மரங்கள் செழித்துப் பெருகுகின்றன. மழைக் காடுகள் இல்லையென்றால் இருவாட்சி பறவைகளும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.உலகம் முழுவதும் 54 வகை இருவாட்சி பறவைகள் இருக்கின்றன. இந்தியாவில் 9 வகை இருவாட்சிகள் உள்ளன. தென்னிந்தியாவில் 4 வகை இருவாட்சிகள் காணப்படுகின்றன. கேரள மாநிலத்தில் இருவாட்சிகளை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் நான்கு வகை இருவாட்சிப் பறவைகள் உள்ளன.

image

அவை, பெரும் பாத இருவாட்சி, மலபார் இருவாட்சி, சாம்பல் நிற இருவாட்சி, மலபார் பாத இருவாட்சி. இவை மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுபவை. இதில் அந்தமான் தீவுகளில் காணப்படும் நார்கொண்டான் இருவாட்சி, மிகவும் அரிதான இருவாட்சி பறவையாக கண்டறியப்படுகிறது. இருவாட்சிப் பறவையின் இனப்பெருக்க காலம் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையாகும்.

அதிசயக் கூடுகள் !

இருவாட்சி பறவைகள் இணையோடு வாழக்கூடியவை. இனப்பெருக்க காலத்தில் இரண்டு பறவைகளும் சேர்ந்து மிகவும் உயரமான மரங்களில் கூட்டைத் தேர்வு செய்யும். கூடு என்பது மரங்களில் உள்ள பொந்துகள்தான். பெண் பறவை பொந்துக்குள் சென்று அமர்ந்தவுடன் ஆண் பறவை தனது எச்சில் மற்றும் ஆற்று படுகைகளில் இருந்து சேகரிக்கும் ஈரமான மண்ணைக் கொண்டு கூட்டை மூடிவிடும். பெண் பறவைக்கு உணவு கொடுக்க ஒரு சிறிய துவாரத்தை மட்டும் விட்டுவிடும். இந்த இருவாட்சி பறவை கடைசி வரை ஒரே துணையுடன் வாழும் பழக்கம் கொண்டது.

image

பெண் பறவை தனது இறக்கைமுழுவதையும் உதிர்த்து ஒரு மெத்தை போன்ற தளத்தை அமைத்து அதன் மேல் ஒன்று முதல் 3 முட்டைகள் வரை இடும். சுமார் 7 வாரம் கழித்து முட்டைகள் பொரிந்துவிடும். குஞ்சுகள் பிறந்தவுடன் பெண் பறவை கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும். அதுநாள் வரை ஆண் பறவை சிறிய துவாரம் வழியே பெண் பறவைக்குப் பழக்கொட்டைகள், பூச்சிகளை உணவாக கொண்டுவந்து ஊட்டும். குஞ்சுகள் பொரிந்தபின்னர் ஆண் மற்றும் பெண் பறவைகள் இணைந்து குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும்.

image

இது குறித்து சூழலியல் ஆர்வலரும் எழுத்தாளருமான சு.தியோடர் பாஸ்கரன் கூறியது: இருவாட்சி பறவை மழைக்காடுகளில் வசிக்கும். அங்கு இருக்கும் மரங்களின் உயர்ந்த பொந்துகளில் அவை கூடு கட்டும். அந்தக் காடுகளில் உள்ள பழங்களை உணவாக்கிக் கொள்ளும். இப்போது மழைக் காடுகள் அழிக்கப்பட்டதால், அவை அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இந்தக் காடுகளுக்கு இருவாட்சி பறவைகள் ஓர் குறியீடு. இருவாட்சி பறவைகள் அழிந்தால் மழைக் காடுகள் அழிந்தது என அர்த்தம். மேலும் தென் இந்திய நதிகள் எல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருக்கும் மழைக் காடுகளில் இருந்துதான் உருவாகிறது. இந்தக் காடுகளை காப்பாற்றினால்தான் இருவாட்சி பறவைகளைக் காப்பாற்ற முடியும். நாம் ஏற்கெனவே பெரும்பான்மையான மழைக்காடுகளை அழித்துவிட்டோம். தேயிலை, காபி, அணைக்கட்டுகள், சாலை வசதிகளை ஏற்படுத்துவதற்கு மழைக் காடுகளை அழித்துவிட்டோம். ஒரு பறவைக்காக வளர்ச்சியை ஏற்படுத்தாமல் இருக்க முடியாது என கூறுபவர்களுக்கு ஒன்று புரியவில்லை. இருவாட்சி பறவைகளை காப்பாற்றுவதன் பிரதான நோக்கம் மழைக் காடுகளை பாதுகாப்பதேயாகும் என்றார் தியோடர் பாஸ்கரன்.

படங்கள்: Nature Conservation FoundationSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *