‘பொய்யான அதிகார மமதை, வெறுப்பு, கோழை’… – மஹுவா மொய்த்ராவின் வரலாற்று முழக்கம்! | Mahua Moitra Speech at Lok Sabha | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Mahua-Moitra-Speech-at-Lok-Sabha

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா வழக்கம்போல அவையில் அனல் பறக்கும் பேச்சால் கவனம் ஈர்த்தார். அவர் பேசியதின் தமிழாக்கம் இங்கே…

“அவைத்தலைவருக்கு வணக்கம். நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், நாடாளுமன்றம் வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில், மக்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி, மக்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்கவும், அவர்களின் எண்ணங்களுக்கு குரல் கொடுக்கவும் விரும்புகிறேன். என்னுடைய சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான் பேசும்போது இடைமறிக்கவோ, கூச்சலிடவோ மாட்டார்கள் என்றும், நீங்கள் (அவைத்தலைவர்) எனக்கு கொடுத்த நேரத்துக்கு என்னைப் பேச அனுமதிப்பீர்கள் என்றும், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இந்த மக்களவை தொலைக்காட்சி தனது ஒளிபரபப்பை நிறுத்தாது என்றும் நம்புகிறேன்.

இந்த அரசு மற்றும் அரசின் நடவடிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பிய, கருத்து தெரிவித்த நம் நாட்டின் சக குடிமக்கள் பலரும் இன்று நீதித்துறை மற்றும் காவல்துறையின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு சிறையில் இருந்து வருகின்றனர். ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்… இவர்கள்மீது இப்படி அடக்குமுறைகளை செலுத்துவதாலும், சிறையில் அடைப்பதாலும் இந்தக் குரல்களை ஒன்றும் செய்ய முடியாது, ஒடுக்க முடியாது என்பதை இந்த அரசு தெரிந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்க பத்திரிகையாளர் எல்மா டேவிஸ், ‘நாடு’ குறித்து தெரிவித்த கருத்தை, நம் நாடு 72-வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தத் தருணத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். “இந்தக் குடியரசு கோழைகளால் உருவாக்கப்பட்டதல்ல. கோழைகள் இதை பாதுகாக்க முடியாது” என்றார் எல்மா டேவிஸ். ஆம், இன்று நான் கோழைத்தனம், வீரம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து இங்கே பேச இருக்கிறேன்.

image

அதிகார மமதை, வெறுப்பு, மதவெறி, பொய் ஆகியவற்றால் மறைந்திருக்கும் கோழைகள், இந்த விஷயங்களை வீரம் என்று கருதுகிறார்கள். இந்த அரசும், தனது பிரசாரத்தில் பொய்களை பரப்புவதன் மூலம் கோழைத்தனத்தை வீரம் என்று காட்டுவதை தங்களது மிகப்பெரிய வெற்றியாக கருதி வருகிறது. அப்படி பல்வேறு தருணங்களில் பல்வேறு விவகாரங்களில் இந்த அரசு வெளிப்படுத்திய வீரத்தை இங்கே சுட்டிக்காட்ட நான் விழைகிறேன்.

யார் இந்தியன், யார் இந்தியன் இல்லை என்ற கேள்வியை உள்ளடக்கிய அம்சங்களை கொண்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்ததில் இந்த அரசு தனது வீரத்தை காட்டியுள்ளது. இதே அவையில்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

நமது அண்டை நாடுகளால் அடக்குமுறைகளுக்கு உள்ளான இந்துக்கள் மற்றும் பிற மதத்தினவரை பாதுகாக்க இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதே சட்டம், நம் இந்திய மண்ணில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

போன டிசம்பர் மாதத்துக்குள் இந்தச் சட்டத்தின் விதிகள் வகுக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் கூறியது. ஆனால், இன்னும் அந்த விதிகள் வகுக்கப்படவில்லை. காலக்கெடு மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு உண்மையிலேயே அண்டை நாடுகளால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கவலைப்படுமானால், விதிகள் வகுக்க காலக்கெடுவை நீட்டித்துக்கொண்டே போக காரணம் என்ன?

இந்த அரசில் தேசிய கீதத்தில் உள்ள ஒரு பகுதியை மட்டும்தான் தேசிய கீதமாக எடுத்துக்கொண்டுள்ளார்கள். இந்தப் பாடலை இந்த அரசு படிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அப்படி செய்தால் ஒருவேளை அது உங்களுக்கு மேற்கு வங்கத்தையும், ரவீந்திரநாத் தாகூரையும் புரிந்துகொள்ள உதவும்.

என்னுடைய சக உறுப்பினரும், காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவரும் இதை அடிக்கடி இங்கே சுட்டிக்காட்டியுள்ளார். ஆனாலும் நான் இதை திரும்ப திரும்ப இங்கே கூற காரணம், அது நல்லதை தரும் நினைப்பதால்தான். (வங்கத்தில் ரவீந்திரநாத் பாடலை பாடுகிறார்) ஒற்றுமை, மதநல்லிணக்கத்தை உயர்த்தி பிடிப்போம்.

ஒரு பொய்ப் புகாரைக் கொண்டு இந்த தேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும், மூத்த பத்திரிகையாளர் மீதும் தேசிய விரோத சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து இந்தியா என்ற மிகப்பெரிய ஜனநாயக தேசத்தை மறைமுக அதிகாரத்துவ அரசாக மாற்றியதில் இந்த அரசின் வீரம் காட்டப்பட்டுள்ளது.

மக்களிடம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றாலும், இல்லையென்றாலும், ஒவ்வொரு மாநில அரசையும் குறுக்கு வழியில் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர இந்த அரசின் வீரம் காட்டப்பட்டுள்ளது.

கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகளை பற்றி பேசும் நீங்களே, மாநில அரசுடன் இணைந்து செயல்படாமல், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், மாநில அரசுகளை மிரட்டி உங்களுக்கு பணியவைக்கிறீர்கள்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை ஆண்டது அல்லது ஒற்றைக் கட்சி ஆட்சிமுறையை திணித்தது. இந்த இரண்டில் எதை தற்போதைய ஆளும் அரசின் மிகப்பெரிய சாதனையாக சொல்லிக்கொள்ள விரும்புகிறது? நீங்களே உங்களைப் பார்த்து இதை கேட்டுக்கொள்ளுங்கள்.

கணக்கில்லா மரணம், உணவின்றி, பணமின்றி பல மைல் தூரம் நடை என மக்களை அலைக்கழிக்க வைத்த லாக்டவுன் குறித்து வெறும் நான்கு மணிநேர முன்பு முன்னறிவிப்பு செய்ததில் இந்த அரசு வீரத்தை காட்டியுள்ளது.

image

பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் (OECD) உள்ள நாடுகள் சமூக நலத்திட்டங்களை 20 சதவிகிதம் செலவு செய்கின்றன. ஆனால் இந்த அரசு சமூக நலத்திட்டங்களுக்கு செலவு செய்தது வெறும் 2 சதவிகிதம்தான். மத்திய வருவாய் பிரிவில் உள்ள நாடுகள் கூட 6 சதவிகிதம் சமூக நலத்திட்டங்களுக்கு செலவு செய்கின்றன.

வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 2020-ல் மிக மோசமான நிலையில் இருந்தது. 2020-ல் பொருளாதாரம் 7.7 சதவிகிதம் குறைந்துள்ளது. இதுவே இந்த ஆண்டு 11 சதவிகிதம் உயர இருக்கிறது. இப்படியே போனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில், 2019-ல் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவுடன் ஒப்பிடும்போது, பொருளாதாரம் அடிமட்டத்தை அடையும்.

அவை உறுப்பினர்களே, அடுத்த இரண்டு ஆண்டுகளில் நமக்கு எந்தவித வளர்ச்சியும் இருக்கப்போவதில்லை. ஆனால், ஏன் இந்த கொண்டாட்டம் என்பதுதான் எனக்கு புரியாத புதிராக இருக்கிறது.

சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் உள்ள தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவள் நான் என்கிற முறையில் இதை கண்கூடாக பார்த்துவருகிறேன். ஆனால் பெரிய நிறுவனங்கள் மேலும் வலுவடைந்துள்ளன. சிறு, குறு தொழில்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன. ஆனால், பணம் படைத்த குடிமக்கள் ஒரு சதவிகிதம் பேர் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளனர்.

ரூ.1.13 லட்சம் கோடி நேரடி பண பலனாக மக்களுக்கு வழங்கப்பட்டது என இந்த அரசு வீரத்துடன் கூறுகிறது. ஆனால், எந்த மத்திய தர வர்க்கம் இதனால் அதிகமாக பலன் அடைந்ததோ, அதே பணம் அவர்களிடமிருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் பறிக்கப்பட்டுவிட்டது. வளங்களை பகிர்ந்தளிக்கும் நாட்டில் நாம் வாழவில்லை. ஆனால் மக்களுக்கு வறுமையை பகிர்ந்தளிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம்.

பட்ஜெட்டுக்கு பிறகு உயர்வை பெற்றது பங்குச்சந்தை மட்டும்தான். அதாவது உயர்வை சந்தித்தது 6 கோடி பேர் மட்டுமே. 110 கோடி மக்களில் 4.6 சதவிகிதம் மட்டுமே வரி செலுத்தும் இந்த நாட்டில் எத்தனை பேர் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பார்கள்? பங்குச்சந்தை உயர்வதால் மக்கள் துள்ளிக் குதித்து மகிழப்போகிறார்களா? இல்லை.

18 வயதான சூழலியல் ஆர்வலர் மற்றும் ஓர் அமெரிக்க பாப் நட்சத்திரத்தின் சமூக ஊடக பதிவுகளுக்கு பதிலளிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ கட்டமைப்பு பயன்படுத்தியதில் இந்த அரசின் வீரம் காட்டப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 90 நாட்களாக டெல்லியின் எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகளின் குடும்பங்களின் உணவு, நீர் மற்றும் அடிப்படை சுகாதாரத் தேவைகளை நிறைவேற்ற இதுவரை ஓர் அமைச்சகம் கூட அரசாங்கத்தால் பொறுப்பாக நியமிக்கப்படவில்லை. ஆனால், முழு எதிர்க்கட்சியும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளும் எதிர்க்கும் வேளாண் சட்டங்களை கொண்டு வர அரசின் வீரம் காண்பிக்கப்பட்டுள்ளது.

இங்கே ஒரு விஷயத்தை இந்த அரசுக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி இருந்தபோது அகாலி தளத்துக்கு 3 வாக்குறுதிகளை கொடுத்தார். அந்த 3 வாக்குறுதிகளில் இரண்டு வெளிப்படையான அரசு கொள்முதல், விவசாய பொருட்களுக்கான நியாயமான விலையை உறுதி செய்வது. தற்போதைய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களில் இந்த இரண்டு வாக்குறுதிகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளன.

இந்தச் சட்டங்கள் ஒருமித்த கருத்து இல்லாமல் எழுதப்பட்டு, ஆய்வு இல்லாமல், திருத்தங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டு, முரட்டுத்தனமான அதிகாரத்தை பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டு, இந்த நாட்டின் குரலை வீழ்த்தியுள்ளன. இது அறநெறிக்கு பதிலாக முரட்டுத்தனத்தை வெளிப்படுத்துகிறது.

இப்படி விவசாயிகள், மாணவர்கள், ஷாஹீன் பாக் போராட்டத்தில் கலந்துகொண்ட வயதான பெண்கள் உட்பட ஒவ்வொருவரும் கோழைகள் அல்லது தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்துகிறார்கள். இதுதான் இந்த அரசின் வீரமா?

இன்று இந்தியாவின் சோகம் என்னவென்றால், அரசாங்கத்தின் பிற ஜனநாயக தூண்களான, ஊடகங்கள் மற்றும் நீதித்துறை ஆகியவை தோல்வியுற்றன.

இந்த நாட்டின் தலைமை நீதிபதி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, தனது சொந்த வழக்கின் விசாரணைக்கு தானே தலைமை தாங்கி, தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொண்டு, ஓய்வுபெற்ற மூன்று மாதங்களில் உயர் சபைக்கு பரிந்துரைக்கப்பட்டடு இசட்-பிளஸ் பாதுகாப்புப் பாதுகாப்புடன் சுற்றித் திரிவது, நீதித்துறை இனி புனிதமானது அல்ல என்பதை உணர்த்துகிறது” என்று ஆவேசமாக பேசினார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா.

– மலையரசுSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *