‘பெங்கால் இளவரசர்’, ‘நம்பர் 2’… மம்தா மருமகன் அபிஷேக் சத்தமின்றி உருவெடுத்தது எப்படி? | Abhishek Banerjee: Why Mamata’s nephew, TMC’s Prince is targeted by BJP and Trinamool members | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Abhishek-Banerjee--Why-Mamata-s-nephew--TMC-s-Prince-is-targeted-by-BJP-and-Trinamool-members

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தின் தலைநகரில் நடந்த பேரணியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியை “பெங்கால் ராஜ்குமார்” (இளவரசர்) என்று குறிப்பிட்டார். சில வாரங்களுக்கு முன் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மேற்கு வங்கத்திற்கு வந்தபோது, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தினார். ஒன்று, முதல்வர் மம்தா பானர்ஜியின் சட்டமன்றத் தொகுதி பவானிபூர் என்றால், மற்றொன்று அபிஷேக் பானர்ஜியின் தொகுதியான டயமண்ட் ஹார்பர். பாஜக இப்போது சிறிது காலமாக அபிஷேக்கை குறிவைத்து வருவதாக சொல்லப்படுகிறது.

பிரதமர் மோடியிலிருந்து மாநிலத் தலைமை வரை மூத்த தலைவர்கள் மேற்கு வங்கம் வரும்போதெல்லாம் அவரைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, திரிணாமுல் கட்சியில் இருந்து வெளியேறுபவர்களும் தங்களின் வெளியேற்றத்துக்கு காரணமாக கைகாட்டுவது இந்த அபிஷேக்கைதான். அபிஷேக் சமீபத்திய காலங்களில் பெங்காலின் வாரிசாக வெளிப்படையாகவும், கட்சியில் தற்போதைய பிரச்னைகளுக்கு பொறுப்பாளராகவும் பெரும்பாலான அரசியல் விவாதங்களின் மையமாக பார்க்கப்படுகிறார்.

image

யார் இந்த அபிஷேக் பானர்ஜி?!

மம்தாவின் சகோதரர் அமித் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோரின் மகன்தான் இந்த அபிஷேக் பானர்ஜி. இப்போது 33 வயதாக இருக்கும் அபிஷேக் மம்தாவின் அரசியல் வாழ்க்கையின் நிழல்களில் வளர்ந்தவர். மூத்த வங்காள பத்திரிகையாளர்கள் மம்தாவின் காளிகாட் இல்லத்துக்குச் செல்லும்போதெல்லாம் 9-10 வயது இருக்கும் அபிஷேக் கிரிக்கெட் விளையாடுவதை சிலசமயங்களில் பார்த்ததாக நினைவுபடுத்துகிறார்கள். இதன்பின் தனது சிறுவயதில் அத்தை மம்தாவுடன் கட்சிக் மேடைகளில் அவ்வப்போது தென்படுவார் அவ்வளவுதான்.

டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பிளானிங் அண்ட் மேனேஜ்மென்ட் (ஐஐபிஎம்)-லிருந்து பிபிஏ மற்றும் எம்பிஏ பட்டங்கள் பெற்றிருக்கிறார் அபிஷேக் பானர்ஜி. 2009ல் எம்பிஏ முடித்த பிறகு அபிஷேக் பிஸினெஸில் ஈடுபட்டார். லீப்ஸ் & பவுண்ட்ஸ் இன்ஃப்ரா கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் லீப்ஸ் அண்ட் பவுண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை நடந்தி வந்தபோதுதான் அபிஷேக்கின் அரசியல் என்ட்ரி. கட்சிக்குள் வளர்ந்து வரும் பவர் சென்டர்களை உடைக்க திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் அட்வைஸின் பேரில் கட்சிக்குள் நுழைக்கப்பட்டார் அபிஷேக். (இதே முகுல் ராய் பின்னாளில் அபிஷேக்கால் ஓரம்கட்டப்பட்டார் என்பது தனிக்கதை).

அப்போது திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் அமைப்பு இருந்த நிலையில், அதன் தலைவராக தற்போது பாஜகவில் சேர்ந்த சுபேந்து அதிகாரி இருந்தார். ஆனால், அபிஷேக் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டபோது, `திரிணாமுல் யுவா’ என்று புதிதாக ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் தலைவராக அபிஷேக்கை நியமித்தார் மம்தா. சுபேந்து அதிகாரியின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலேயே அபிஷேக்கிற்கு இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டதாக அப்போதே பேசப்பட்டது.

image

ஒரு சில ஆண்டுகள் கட்சிப் பதவியில் இருந்த நிலையில், 2014ல் தேர்தல் அரசியலில் கால் பதித்தார் அபிஷேக், 2014ல் டயமண்ட் ஹார்பர் நாடாளுமன்றத் தொகுதி காலியாக, கட்சித் தலைமை அபிஷேக்கை பொதுத் தேர்தலில் போட்டியிட வைத்தது. இதற்கு கை மேல் பலனாக வெற்றியும் கிடைத்தது. அபிஷேக் முதன்முதலில் எம்பி ஆனபோது அவருக்கு வயது 26. அதே ஆண்டில், சுபேந்துவுக்கு பதிலாக அபிஷேக் திரிணாமுல் காங்கிரஸின் இளைஞர் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதில் இருந்து அபிஷேக்கின் எழுச்சி, செல்வாக்கு எங்கோ போய்விட்டது.

படிப்படியாக கட்சிக்குள் நுழைந்த அபிஷேக் இப்போது மம்தாவின் அனைத்துமாக, நம்பிக்கையாக மாறினார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே திரிணாமுலின் `நம்பர் 2′ என்கிற அளவில் பேசப்பட்டார். அந்தத் தேர்தலில் மம்தாவின் பிரசாரம், வேட்பாளர் தேர்வு என அனைத்தும் அபிஷேக்கின் கண் அசைவிலேயே நடந்தது. `நம்பர் 2′ என்கிற அந்தஸ்த்தால் அவரை திரிணாமுல் நிர்வாகிகளே `கொல்கத்தா இளவரசன்’, `அடுத்த முதல்வர்’ என்று புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் எதிர்பாராத வெற்றி மம்தாவுக்கு பயத்தை கொடுக்க ஆரம்பித்தது. அப்போது பாஜகவை எதிர்க்க, அழைத்து வரப்பட்டார் பிரபல தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர். பிரசாந்த்தை அழைத்து வரும் ஐடியாவை கொடுத்ததும் அபிஷேக்தான்.

image

இப்போது பிரசாந்த் – அபிஷேக்கும் நெருங்கிய நண்பர்களும்கூட. அபிஷேக் பிரசாந்த் இல்லாமல் எங்கும் செல்லமாட்டார் என்கிறார்கள் அவரின் சொந்தக் கட்சியினர். இவர்கள் இருவரும் சேர்ந்து கட்சியின் மூத்த தலைவர்களின் பதவிகளில், அதிகாரங்களில் கைவைக்க, பிரச்னையே ஆரம்பமானது. அனைத்து முக்கியமான கட்சி கூட்டங்களும் இவர்கள் இருவரின் மேற்பார்வையில் நடந்தது. அபிஷேக்கும் – மூத்த தலைவர்களுக்கும் இடையே ஈகோ வர ஒவ்வொருவராக கட்சியில் கழற ஆரம்பித்தார்கள். சமீபத்தில் பாஜக சென்ற சுபேந்து ஆதிகாரி, `”டோலாபாஜ் பைபோவை (ஊழல் மருமகனை) அகற்றுங்கள்” என்று பாஜக மேடையில் அமித் ஷா முன்னிலையில் பேசியதே இதற்கு சான்று.

இவர் மட்டுமல்ல, ஒரு எம்.பி. மற்றும் எட்டு எம்.எல்.ஏக்கள் உட்பட குறைந்தது 10 திரிணாமுல் தலைவர்கள் அபிஷேக்கின் தவறான நிர்வாகத்திற்கு எதிராக பேசியுள்ளனர். அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது உத்தரவின் பேரில் கொண்டு வரப்பட்ட பிரசாந்த் கிஷோர் மீது குற்றம்சாட்டினர்.

அபிஷேக் மீதான ஊழல் சர்ச்சை!

மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர்கள் அபிஷேக்கை ‘கோட்டிபொட்டி பைபோ’ (கோடீஸ்வரர் அல்லது பல மில்லியனர் மருமகன்) என குறிப்பிடுவது வழக்கம். அதற்கு காரணம் அபிஷேக் குவித்த செல்வம். அபிஷேக்கின் வாழ்க்கை முறை மற்றும் ஆளுமை ஆரம்பத்தில் இருந்தே மம்தாவின் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது. அத்தை மம்தா எளிமையான, கிட்டத்தட்ட கடினமான வாழ்க்கை முறையை வெளிப்படுத்துகையில், அபிஷேக்கோ ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார். தெற்கு கொல்கத்தாவில் உள்ள அவரது குடியிருப்பு ஒரு கோட்டைபோல் இருக்கும் என்கிறார்கள். முதல்வர் மம்தாவைப்போல கொல்கத்தா போலீஸ் கியோஸ்க், பாதுகாப்புப் படையினரின் படைப்பிரிவு மற்றும் ஓரிரு பைலட் கார்கள் எனப் பெரிய பாதுகாப்புக்கு மத்தியில் எஸ்யூவிகளில் சவாரி செய்கிறார். ஒவ்வொரு ஆண்டும் டயமண்ட் ஹார்பரில் ஒரு பெரிய விளையாட்டு போட்டியை நடத்துகிறார் அபிஷேக். இதற்கு சுமார் 15-20 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது.

அரசியலுக்கு வருவதற்கு முன், கொல்கத்தா – லீப்ஸ் அண்ட் பவுண்ட்ஸ் இன்ஃப்ரா கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், லீப்ஸ் & பவுண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் லீப்ஸ் அண்ட் பவுண்ட்ஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்களை நடத்தினார் அபிஷேக். இப்போது இந்த நிறுவனம் அவரின் தந்தை மற்றும் தாயின் பேரில் இருக்கிறது. இந்த நிறுவனம் மீதும் அபிஷேக் மீதும் எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. ஆனால், இதுவரை எந்த வழக்கும் அவர் மீது பதியப்படவில்லை. அதேநேரத்தில், அவரின் மனைவி ஒருமுறை அமலாக்கத்துறை வழக்கில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்கால் ராஜகுமாரன்!

அகிலேஷ் யாதவ் அல்லது தேஜாஷ்வி யாதவ் போன்றோர் போல் இல்லாமல், சத்தமில்லாமல் மேற்கு வங்கத்தின் அரசியல் வாரிசாக வளர்ந்து வருகிறார் அபிஷேக். அபிஷேக்கை மம்தாவின் அரசியல் வாரிசாக நிறுவுவது கட்சிக்குள் அதிகமாகவே நடக்கத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் தலைவர்களும் தொழிலாளர்களும் அபிஷேக்கை சந்திக்க காத்துக்கிடக்கின்றனர். கொல்கத்தாவில் எங்கு சென்றாலும் அவர் பின்னால் ஒரு பெருங்கூட்டமே செல்கிறது.

கட்சியின் `நம்பர் 2’வாக வலம் வருவதால்தான் திரிணாமுலின் முக்கிய அரசியல் எதிரியாக உருவெடுத்துள்ள பாரதிய ஜனதா கட்சி, அபிஷேக்கை குறிவைப்பதற்கான பிரசார மூலோபாயத்தை மேற்கொள்வதில் மும்முரமாக உள்ளது. பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மாநிலத் தலைவர் திலீப் கோஷ் மற்றும் திரிணாமுல்-மாறிய பாஜக தலைவர் முகுல் ராய் முதல் மாவட்ட அளவிலான தலைவர்கள் வரை – கிட்டத்தட்ட யாரும் ‘அபிஷேக்கை’ குறிப்பிடாமல் மேற்கு வங்கத்தில் உரை நிகழ்த்துவதில்லை. அவர்களைப்போல சொந்தக் கட்சியில் அதிருப்தி அடைந்த தலைவர்களும் அவரை ‘யுவராஜ்’ மற்றும் ‘ராஜ்குமார்’ (இளவரசர்), ‘பைபோ’ (மருமகன்), ‘அரசியல் வாரிசு’ மற்றும் ‘கட்சியை உடைப்பவர்’ என்று முத்திரை குத்துகிறார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா தனது குடும்ப உறுப்பினர்களான அவரது சகோதரர்கள் அல்லது பிற மருமகன்கள் மற்றும் மருமகள் உட்பட எவரையும் அரசியலில் சேர ஊக்குவித்ததில்லை. அப்படிப்பட்ட மம்தா ஏன் அபிஷேக்கை இவ்வளவு ஈடுபடுத்தினார் என்று புரியதாத புதிராக இருக்கிறது.

– மலையரசுSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *