பீகார் to தமிழகம் Via மேற்கு வங்கம்… – கூட்டணியில் குளறுபடிகளைக் கூட்டும் பாஜக! | Bihar to Tamil Nadu Via West Bengal: BJP issues with NDA allies | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Bihar-to-Tamil-Nadu-Via-West-Bengal--BJP-issues-with-NDA-allies

தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார், மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் என பல மாநிலங்களில் விரிசல்களும் சர்ச்சைகளும் அரங்கேறிய சூழலில், தமிழகத்திலும் கூட்டணியில் குழப்பத்தையும் குளறுபடியையும் ஏற்படுத்தும் விதமாக பாஜக செயல்படுவதை கவனிக்க முடிகிறது. இதுகுறித்த சற்றே விரிவான பார்வை…

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் இப்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவர் தனது தீவிர பரப்புரையைத் தொடங்கிவிட்டார். ஆனால் “முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவே முடிவு செய்து அறிவிக்கும்” என்று பாஜக திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறது. இந்த விவகாரத்தில், அதிமுகவும் பாஜகவுக்கும் இடையிலான பனிப்போர் ஓய்ந்தபாடில்லை.

இதற்கு வித்திட்டவர் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன். அவர்தான் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை முதலில் கிளப்பிவிட, பாஜக மூத்த தலைவர்களும் அதையே பின்பற்றி பேசி வருகின்றனர். ஏற்கெனவே சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் பாஜகவுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளப் போவதில்லை என்று அதிமுக திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இந்த நிலையில்தான் பாஜக தலைவர்கள் முதல்வர் வேட்பாளர் சர்ச்சையை எழுப்பி வருகின்றனர்.

image

ஆனால், பாஜக தலைவர்களின் இந்தக் கூற்றை அதிமுக தலைவர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, இந்த விவகாரத்தில் பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். “அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தலைமையில்தான் கூட்டணி. எந்த தேசிய கட்சி இப்படி பேசி கூட்டணிக்கு வந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு தேவையில்லை.

ஜெயலலிதா, கருணாநிதி என்ற ஆளுமைகள் இல்லாத தமிழகத்தில் இடையில் புகுந்து பலன் பெறலாம் என சிலர் நினைக்கின்றனர். எந்த தேசிய கட்சிகளும் உள்ளே வரவிட முடியாமல் தமிழகத்தை காத்தது திராவிட இயக்கம். தற்போது சில சூழ்ச்சி செய்து உள்ளே வர பார்க்கின்றனர். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். இதில் யார் இடையூறாக வந்தாலும் ஒதிக்கிவைத்து விடுவோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தது. அப்போதும், யார் தலைமையில் கூட்டணி என்ற சிக்கல் எழுந்தது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில்தான் கூட்டணி என்று முதலில் பாஜக தரப்பில் பேசப்பட்டது. பின்னர், அதிமுக அதிருப்தியை வெளிப்படுத்தவே தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பது திட்டவட்டமானது. இப்போதும் இதேபோன்று சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழகத்தில் மட்டும்தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இப்படி சர்ச்சை என்றால், இல்லை. பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் நிறைய சலசலப்புகள் சமீபகாலமாக உருவாகி வருகின்றன.

பீகாரில் ஜே.டி.யு vs பாஜக

தமிழகத்தில் அதிமுக சந்தித்து வரும் நிலையைவிட பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மோசமான சூழ்நிலைகளை சந்தித்து வருகிறது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி அருணாச்சலில் 2019 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 15 இடங்களில் ஏழு இடங்களில் வென்றது. 41 இடங்களைப் பெற்ற பாஜகவுக்குப் பிறகு இரண்டாவது பெரிய கட்சியாகவும் ஜேடியு உருவெடுத்தது. இந்த நிலையில்தான் சமீபத்தில் இந்த 7 எம்.எல்.ஏக்களில் 6 பேர் ஆளும் பாஜகவுக்கு தாவினர். பீகாரில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் ஜே.டி.யு-வுக்கு இந்த செயல் கடும் அதிருப்தியை தந்தது.

பாஜக – ஜே.டி.யு சர்ச்சை ஒரு தொடர்கதை போன்றது. அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற்ற பீகார் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சியை (எல்.ஜே.பி) தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கழட்டிவிட ஜே.டி.யு, பாஜகவை கட்டாயப்படுத்தியது. இத்தனைக்கும் எல்.ஜே.பி தலைவர் சிராக் பாஸ்வான் மோடியின் தீவிர விசுவாசி. அப்படி இருந்தும் ஜே.டி.யு அழுத்தத்தின் காரணமாக எல்.ஜே.பியை கழட்டிவிட்டது. ஆனால் “பெயருக்குதான் சிராக் பாஸ்வானை கூட்டணியில் இருந்து நீக்கியது பாஜக. தேர்தலில் பாஸ்வானுக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் வகையில் பாஜகவின் செயல்பாடுகள் இருந்தன. எல்ஜேபி-க்கு பாஜகவின் மறைமுக ஆதரவுதான் எங்கள் கட்சி நிறைய இடங்களில் வெல்ல முடியாமல் போனதற்கு காரணம்” என்பது ஜே.டி.யு-வின் குற்றச்சாட்டு.

இந்த இரண்டு விஷயங்களிலும் முரண்பட்டு இருக்கும் ஜே.டி.யு, பாஜகவுக்கு பாடம் கற்பிக்க, ஒரு திட்டத்தை தீட்டியுள்ளது. மேற்கு வங்க தேர்தலில் தனித்து போட்டி என்பதே அது. மேற்கு வங்கத் தேர்தலில் 75 இடங்களில் தனித்துப் போட்டியிடுவதாக ஜே.டி.யு அறிவித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. ஜே.டி.யு-வின் இந்த அதிரடி, மம்தாவுக்கு பாதகமாக இருக்குமோ, இல்லையோ, நிச்சயம் பாஜகவுக்கு அது பாதகமாக இருக்கும்.

ராஜஸ்தானிலும் இதேபோன்றுதான் களநிலவரம். ராஜஸ்தானில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சி (ஆர்.எல்.பி) வேளாண் சட்டங்களை நீக்க கோரி கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. இதேபோல், அசாமில் அண்மையில் போடோலாந்து பிராந்திய கவுன்சில் (பி.டி.சி) தேர்தலில் பாஜக தனது கூட்டாளியான போடோ மக்கள் முன்னணியில் (பி.டி.எஃப்) இருந்து பிரிந்தது. அடுத்த ஆண்டு அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கு பி.டி.எஃப் மற்றும் பா.ஜ.க ஆகியவை கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

image

மேற்கு வங்கத்தில் கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி கடந்த அக்டோபர் மாதமே என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது. பாஜகவுடனான உறவுகளை முறித்துக் கொண்ட பின்னர், இந்தக் கட்சி மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தது. முன்னதாக, பஞ்சாபில் உள்ள சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) விவசாயி சட்டங்களை ஆதரித்தது, இதேபோன்று பாஜக உடனான உறவை முறித்துக்கொண்டது. இதனால் 2022-ல் நடக்கவுள்ள பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடும் நிலைமைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் அதிகாரப் பகிர்வு வேறுபாடுகள் தொடர்பாக சிவசேனா 2019-ல் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது. ஜார்க்கண்டில் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கமும் (ஏ.ஜே.எஸ்.யு) 2019 தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் உறவுகளை முறித்துக் கொண்டது. 2014 மக்களவைத் தேர்தலில் மையத்தில் பெரும்பான்மையை வென்றதில் இருந்து பாஜக பல மாநிலங்களில் கணிசமாக வளர்ச்சியை கண்டுள்ளது. பல இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை பாஜக தனது நட்பு கட்சிகளை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

– மலையரசுSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *