பத்திரிகையாளர்கள் மீது பாயும் ‘சட்ட’ நடவடிக்கைகள்: பாஜக ஆளும் மாநிலங்களில் என்ன நடக்கிறது? | 73 of the 154 cases against journalists documented in 10 years are reported from BJP ruled states | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


73-of-the-154-cases-against-journalists-documented-in-10-years-are-reported-from-BJP-ruled-states

2010 தொடங்கி 2020 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் கைது, விசாரணை மற்றும் தடுப்புக் காவல் நடவடிக்கைகளுக்கு ஆளான பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 154. இந்த சம்பவங்களில் 40% அளவிலான நடவடிக்கைகள் 2020-ஆம் ஆண்டில் மட்டும் பதிவாகியுள்ளது என்பது ஓர் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கீதா சேஷு எனப்படும் சுயாதீன பத்திரிகையாளரால் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், ‘Behind Bars: Arrest and Detention of Journalists in India 2010-20’ என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளன. சம்மன், தடுப்புக் காவல், கைது, விசாரணை என கடந்த தசாப்தத்தில் இந்தியப் பத்திரிகையாளர்கள் அனுபவித்த துன்பத்தை வெளிக்கொணரும் விதமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் 9 பேர் நாடு கடத்தல், கைது, விசாரணை மற்றும் இந்தியாவுக்குள் நுழைய தடை ஆகிய நடவடிக்கைகளை எதிர்கொண்டனர் என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவதைத் தவிர, ‘பயங்கரவாதம்’ தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் தேசத்துரோகமும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

image

‘தற்போது, மூன்று ஊடகவியலாளர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குகளில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் குற்றவியல் அவதூறு வழக்குகளும் ஏராளமாக உள்ளன. கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த அவமதிப்பு குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. நாட்டில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பையும் கருத்துச் சுதந்திரத்தையும் அளவிடும் குறியீடுகளில் இந்தியா குறைந்து வருகிறது. மேலும் இணைய முடக்கம் அதிகம் உள்ள நாடு இந்தியாவாகும்’ என்று அடுக்கிறது அந்த ஆய்வு.

2020-இல் மட்டும் குறைந்தது 64 இணைய முடக்கம் நடந்துள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டில், அரசியலமைப்பின் 370-வது பிரிவை ரத்து செய்தபோது காஷ்மீரில் மிக நீண்ட இணைய முடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்கள் மீது உடல் ரீதியான தாக்குதல்கள்!

இந்த ஆய்வின் மூலம் வெளிக்கொணரப்படும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பத்திரிகையாளர்களின் உடல்ரீதியான தாக்குதல் அதிகரித்துள்ளது என்பதே. 2014-19 காலகட்டத்தில் குறைந்தது 198 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2019-இல் மட்டும் 36 தாக்குதல்கள் நடந்துள்ளன. ஊடகவியலாளர்களின் இறப்பு விகிதம் அதைவிட மோசமாக உள்ளது. 2010 முதல் 30-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் தாக்குதல்களால் இறந்த நிலையில், இதில் மூன்று சம்பவங்களில் மட்டுமே குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதல் சம்பவங்களில் முறையான நடவடிக்கை எடுக்கப்படாததையும் இந்த ஆய்வு அடிக்கோடிட்டு காட்டுகிறது. ஆகஸ்ட் 11-ம் தேதி டெல்லியில் தேசிய தலைநகரில் ‘கேரவன்’ பத்திரிகையாளர்கள் ஷாஹித் தந்திரே, பிரப்ஜித் சிங் மற்றும் ஒரு பெண் பத்திரிகையாளர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில், முறையான புகார்கள் அளித்த போதிலும், போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யத் தவறிவிட்டனர். பிற வழக்குகள், தண்டனையற்ற நிலையில் மோசமாக விசாரிக்கப்படுகின்றன. சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளிடையே தொடர்பு, நிர்வாகம், வர்த்தகம், அரசியல் நலன்கள் போன்றவை பத்திரிகையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியைத் தடுக்கிறது என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் ஊடகவியலாளர்கள் நிலை?

கடந்த தசாப்தத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக பதியப்பட்ட 154 வழக்குகளில் 73 வழக்குகள் பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து பதிவாகியுள்ளன. மேலும், 30 வழக்குகள் பாஜக மற்றும் அதன் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) ஆளும் மாநிலங்களிலிருந்து பதிவாகியுள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள வழக்குகளில், உத்தரப் பிரதேசம் 29 வழக்குகளுடன் முன்னணியில் உள்ளது. மற்ற நிகழ்வுகள் ஜனாதிபதி ஆட்சி அல்லது ஆளுநர் ஆட்சியின் கீழ், அல்லது நேரடியாக யூனியன் அரசாங்க நிர்வாகத்தின் கீழ் பதியப்பட்டுள்ளன என்று அந்த ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.

தசாப்தத்தின் முதல் 4 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியில் இருந்தது. இதில் 2010 முதல் 2014 மே வரை பத்திரிகையாளர்கள் மீது இதுபோன்ற 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், 56 பத்திரிகையாளர்கள் ஜாமீன் பெறுவதற்கு முன்பு நீண்ட நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக, 2020-ல், அயோத்தி ராமர் கோயில் தொடர்பான ட்வீட்டை வெளியிட்டதற்காக பிரசாந்த் கனோஜியா என்ற பத்திரிகையாளர் 80 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏன் இந்தத் தாக்குதல்?

பத்திரிகையாளர்கள் பலரும் ஏதாவது ஒரு வகையில் தவறு செய்தவர்களை தங்கள் எழுத்து மூலம் வெளிக்கொண்டு வந்ததால் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் அல்லது வழக்குகளை சந்தித்துள்ளனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது. நேஹா தீட்சித், 2016-இல் அசாமில் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த இளம் சிறுமிகளை கடத்தல் குறித்து ‘அவுட்லுக்’-கில் ஒரு கட்டுரை எழுதினார். அவருக்கு சங்க பரிவார் அமைப்புகள் மூலம் கடும் எதிர்வினை கிளம்பி நிறைய வழக்குகள் தொடுக்கப்பட்டது. இதேபோல் பத்திரிகையாளர் அஸ்வானி சைனி என்பவர் லாக்டவுனின்போது அரசு நிர்வாகத்தின் தோல்வி மற்றும் தொற்றுநோய் தொடர்பான பிற செய்திகள் குறித்த வீடியோ வெளியிட்டதற்காக அவர் மீது 5 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. மேலும் ஊடகவியலாளர்கள் அபிலாஷ் பதச்சேரி, அனந்து ராஜகோபால் ஆகியோர் கேரளாவில் வடயம்பாடி ‘சாதிச் சுவர்’ விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர்.

image

“ஆளும் அரசியல் கட்சிக்கு நெருக்கமாக இருப்பதாகக் கருதப்படும் ஊடகவியலாளர்களுக்கு ஜாமீன் உள்ளிட்ட விவகாரங்களில் முன்னுரிமை போன்ற சலுகைகளும், அதேநேரம், ஆளும் அரசுக்கு எதிராக விமர்சனக் குரல்கள் எழுப்பும் ஊடகவியலாளர்கள் கடுமையான துன்புறுத்தல் மற்றும் நீண்டகால சிறைவாசத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தண்டனையுடன், இது மாதிரியான நிகழ்வுகள் மக்களுக்குச் செல்லும் தகவல்களின் ஓட்டத்தை கட்டுப்படுத்துகின்றன, மேலும் இந்தியாவில் ஊடக சுதந்திரத்தில் கைவைக்கும் வேலையாக இதை கருத வேண்டும்” என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மூன்றாம் இடம்!

கடந்த பத்தாண்டுகளில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர்கள் மீது 29 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் (17), ஜம்மு-காஷ்மீர் (16), தமிழ்நாடு (15), டெல்லி (10) ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.

– மலையரசு

தகவல் உறுதுணை: The News MinuteSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *