நோயெதிர்ப்பு சக்தியை கூட்டும் மஞ்சள், ஆரஞ்சு, இஞ்சி கலவை ஜூஸ்! – எளிதாக தயாரிப்பது எப்படி? | Mixture of turmeric ginger and orange increase immunity level | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
மஞ்சள் – ஆரஞ்சு – இஞ்சி கலவை ஜூஸ் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்த ஆண்டு முடியப்போகிறது. ஆனால் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டும் நோக்கம், ஆண்டின் தொடக்கத்தில் இருந்தது போலவேதான் இப்போதும் இருக்கிறது. ’’நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டுவது எப்படி?’’ என்ற வாசகம்தான் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நிறையபேர் இயற்கை முறையில் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டிலுள்ள சில பொருட்களே நோயெதிர்ப்பு சக்தியை கூட்டும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
அந்த வகையில், இஞ்சி, மஞ்சள், நெல்லிக்காய் போன்றவை நோயெதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுப்பொருட்கள் என மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது. இஞ்சியிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயானது காய்ச்சலுக்கான அறிகுறிகளை தணிக்கக்கூடிய சக்திவாய்ந்தது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடன்டுகளும், அழற்சி எதிர்ப்புத் தன்மைகளும் நிறைந்துள்ளது. எனவேதான் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்னைகள் வரும்போது இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்தியாவின் தங்க மசாலா என்று அழைக்கப்படுகிற மஞ்சளிலும் அதிக நோயெதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மைகள் நிறைந்துள்ளன.
வைட்டமின் சி அதிகம் நிறைந்த நிறைந்த ஆரஞ்சு பழத்துடன், மஞ்சள் மற்றும் இஞ்சி சேரும்போது அதன் நோயெதிர்ப்பு சக்தி மேலும் கூடுகிறது. பொதுவாகவே சிட்ரஸ் பழங்களில் கால்சியம், பொட்டாசியம், ஃபோலேட், தைமின் மற்றும் நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது.
தினமும் ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் இஞ்சி கலந்த ஜூஸை குடித்துவந்தால் நோயெதிர்ப்பு சக்தி கூடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தேவையானப் பொருட்கள்:
தோலுரித்த ஆரஞ்சு – 2
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை – அரை
உப்பு – அரை டீஸ்பூன்
நசுக்கிய இஞ்சி – அரை இஞ்ச்
செய்முறை: தேவையானப் பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வடிகட்டாமல் குடிக்கவேண்டும். உங்கள் மருத்துவர்கள் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுக்கக்கூடாது என வலியுறுத்தி இருந்தால் இந்த ஜூஸை தவிர்ப்பது நல்லது. அதேசமயம் இந்த ஜூஸை அளவாகத்தான் குடிக்கவேண்டும்.