நெருங்கி வரும் நிவர் புயல்… இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்! | Personal Cyclone Preparedness and Safety Procedures | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Personal-Cyclone-Preparedness-and-Safety-Procedures

வேகமாக நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது நிவர் புயல். டெல்டாவை குறி வைக்கும் என முதலில் கணிக்கப்பட்ட நிவர் தற்போது காரைக்கால் – மாமல்லபுரம் இடையே நாளை மறுநாள் (புதன்கிழமை) பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிவர் புயலால் கடலோர மாவட்டங்களுக்கு கடுமையான மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. மீட்புப்படையினர் தயார்படுத்தப்படுகின்றனர்.

image

தண்ணீர் தேங்கினால் உடனடியாக அகற்றும் வகையில் மின் மோட்டார்களும் தயார் படுத்தப்படுகின்றன. இதற்கிடையே பேரிடர் மீட்புப்படையினர் கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். அரசு ஒருபுறம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், மக்களும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வதே ஆகச்சிறந்தது.

பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

 • புயல்கள் பெரும்பாலும் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்தக்கூடும். இது போன்ற நேரங்களில் சாதுர்யமாக செயல்பட வேண்டியது அவசியம்.
 • குடிக்க உகந்த நல்ல நீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
 • புயல் வருவதற்கு முன்பு, வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகளை பழுது பார்த்து வைத்திருக்க வேண்டும்.
 • வீட்டின் அருகில் உள்ள காய்ந்த மரங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும். அதிக கிளைகள் கொண்ட மரங்களை சீரமைத்துக்கொள்ளலாம்
 • கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். உறுதியான பாதுகாப்பான இடங்களில் மட்டுமே கால்நடைகளை கட்ட வேண்டும். ஒருவேளை புயல் கடக்கும் நேரத்தில் கால்நடைகளுக்கு பாதிப்பு என்றாலும் நாம் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

 image

 • அவசர காலம் மற்றும் அன்றாடம் தேவைப்படும் மருந்து பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும். அதேபோல் குழந்தைகளுக்கு தேவையான பால் பொருட்கள், மருந்து பொருட்கள், பயன்பாட்டு பொருட்களையும் முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
 • உறுதியான கயிறுகள், காற்றை சமாளித்து எரியும் அரிக்கேன் விளக்குகள் வைத்திருக்க வேண்டும். மேலும் பாட்டரியில் இயங்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், பேரிச்சை, திராட்சை போன்ற உலர்ந்த பழ வகைகள், வறுத்த வேர்க்கடலை மற்றும் கொண்டைக் கடலை, மெழுகு வர்த்தி, தீப்பெட்டி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
 • அடையாள ஆவணங்களான ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகங்கள், கல்விச் சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை நீர் படாத வகையில் பிளாஸ்டிக் உரைகளைக் கொண்டு பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும்.

 image

 • புயல் கரையை கடக்கும்போது, குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். புயலுக்கு முன்னதாகவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்.
 • பேட்டரி மூலம் இயங்கும் ரேடியோ மூலம் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களை கேட்டு தெரிந்துக்கொண்டு, அதன்படி செயல்படலாம்

புயல் பாதிப்பு இல்லை என்றாலும் அதிக மழை பெய்யும் நேரத்தில் மின்சாரம் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் மிக மிக அவசியம்.

 • லைட்களை பொருத்துவதற்கு முன்பும், பின்பும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.
 • உடைந்த சுவிட்சுகள், பிளக்குகள் இருந்தால் உடனடியாக மாற்றிவிட வேண்டும்.
 • எர்த் பைப் என்பது மிகமுக்கியம். அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும்
 • சாலையில் உள்ள மின்கம்பங்களை தொடுவதை தவிர்க்க வேண்டும். மின்கம்பத்தில் கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும்

 image

 • குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் உள்ள மின் சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும். ஈரக்கையுடன் சுவிட்சுகளை தொடக்கூடாது
 • இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். அதேபோல் மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதையும் தவிர்க்க வேண்டும்.
 • சாலையில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தாலோ, ட்ரான்ஸ்பார்மர்களில் பாதிப்பு ஏற்பட்டாலோ உடனடியாக மின்சார வாரியத்துக்கு தகவல் அளிக்க வேண்டும்

வாகனங்களுக்கான பாதுகாப்பு:

புயல் வீச வாய்ப்புள்ள இடங்களில் வாகனங்களை சாலையில் மரங்களின் கீழ் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். பலமான கட்டடங்களின் கீழ் கார், பைக் போன்றவற்றை நிறுத்தலாம். அப்படி வாய்ப்பு இல்லாதவர்கள், மரங்கள், மின்கம்பங்கள் போன்றவற்றின் கீழ் நிறுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதேபோல் கடுமையாக தண்ணீர் தேங்கும் இடங்களிலும் வாகனத்தை நிறுத்த வேண்டாம்

image

குறிப்பாக உங்கள் வீடு பாதுகாப்பு இல்லாத நிலையில் இருந்தால் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட வேண்டும். புயல், மழையின் போது செல்போன் மூலம் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதோ, வீடியோ, புகைப்படம், பேஸ்புக் லைவ் என ஆர்வப்பட்டு வீட்டை விட்டு வெளியே செல்வதையோ கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

 Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *