நெய் முதல் நட்ஸ் வரை… குளிர்காலத்தில் செரிமானத்துக்கு உகந்த உணவுகள்! | Foods to improve your digestive system in Winter | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Foods-to-improve-your-digestive-system-in-Winter

குளிர்காலம் வந்தாலே பெரும்பாலும் நன்கு இழுத்து போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டே இருக்கத் தோணும். நேரத்திற்கு சூடான உணவு, சூடான காபி, டீ குடித்துக்கொண்டே இருக்கத் தோணும். ஆனால், குளிர் அதிகரிக்க அதிகரிக்க, உடல் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ள எண்ணும். இதனால் உடலின் மெட்டபாலிசம் குறையும். அதாவது உடலுழைப்பு குறையும். உடலுழைப்பு குறையும்போது சாப்பிடும் அனைத்து கலோரிகளும் உடலில் சேர்ந்து உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும் உடலுழைப்பு இல்லாதபோது தானாக செரிமான சக்தியும் குறைந்துவிடும்.

குளிரை சமாளிக்க சூடான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளும் நாம், அவை சரியாக செரிக்கிறதா என்பதை கவனிப்பதில்லை. நாம் சரியான உணவுகளை சரியான அளவில் எடுத்துக்கொள்ளும்போது தேவையில்லாத கலோரிகள் உடலில் சேர்வது தடுக்கப்படும்.

image

நெய்

சுத்தமான நெய் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாக்க உதவுவதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். மேலும் இதிலிருக்கும் கரையக்கூடிய வைட்டமின்கள், உடல் எடையைக் குறைக்க உதவும். குடலில் உருவாகும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமான சக்தியை தூண்டும். மேலும் உடலில் ஹார்மோனை சமநிலைப்படுத்துவதோடு, நல்ல கொழுப்பை கொண்டுள்ளதால், சருமத்தை பளபளப்பாக்கும். இது நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கும் சிறந்த உணவு.

image

காய்கறிகள், கீரைகள்

காய்கறிகள் எல்லா காலத்திலும் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால், குளிர்காலத்தில் கேரட், உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீட்ரூட், முள்ளங்கி போன்ற வேர்க் காய்கறிகள் சிறந்தது. இதுபோன்ற அதிக நார்ச்சத்துமிக்க காய்கறிகள் செரிமானத்தை எளிதாக்குவதோடு, ரத்தத்தின் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.

கடுகு கீரை, வெந்தயக் கீரை, பசலைக்கீரை போன்ற கீரைகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது செரிமான சக்தியை அதிகரிக்கும். மேலும் இதுபோன்ற நார்ச்சத்துமிக்க உணவுகள் ஒரு நிறைவைக் கொடுப்பதால், அடிக்கடி நொறுக்குத் தீனிகள் சாப்பிடத் தூண்டாது. இவற்றை பொரியல், சூப் மற்றும் வேகவைத்து அப்படியேகூட உண்ணலாம். பராத்தா, ரோல் மற்றும் மற்ற உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளலாம்.

image

மூலிகைகள், மசாலா பொருட்கள்

குளிர்காலத்தில் மசாலா மற்றும் மூலிகைப் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். இது குளிர்கால நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதோடு, செரிமான சக்தியை அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

குறிப்பாக கொரோனா காலத்தில், அதிக மூலிகை மற்றும் மசாலாப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளுமாறு மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். ஏலக்காய், ஜாதிக்காய், மஞ்சள், இஞ்சி, மிளகாய், பட்டை மற்றும் கிராம்பு போன்ற அனைத்துமே செரிமான சக்தியை தூண்டக்கூடியவைதான். மேலும் இவை அதிக உப்பு எடுத்துக்கொள்வதைத் தடுக்கும்.

image

நல்ல கொழுப்பு உணவுகள்

செரிமானம் சரியாக நடக்கவேண்டும் என்றால், தேவையான நல்ல கொழுப்பு உடலில் சேருவது அவசியம். இந்த உணவுகள் நிறைய சாப்பிட்டது போன்ற உணர்வைக் கொடுப்பதோடு, தேவையான் ஊட்டச்சத்தையும் உடலுக்கு வழங்குகிறது. ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவானது, அல்சர் போன்ற குடல்வீக்க நோய்களைத் தடுக்கும். சியா விதைகள், ஃப்ளாக்ஸ் விதைகள், நட்ஸ் மற்றும் கொழுப்பு மீன்களை சேர்த்துக்கொள்ளலாம்.

image

நட்ஸ்

உலர் பழங்கள் மற்றும் உலர் கொட்டைகள் எல்லா காலத்திலும் சிறந்தது என்றாலும், குறிப்பாக குளிர்காலத்திற்கு ஏற்றது. முந்திரி, பிஸ்தா, பேரீச்சை, பாதாம் மற்றும் வால்நட் போன்றவற்றை அளவாக சாப்பிடும்போது, உடலின் வெப்பத்தை அதிகரித்து, குளிர்காலத்தின் சோர்வைப் போக்கி, உடலுக்கு எனர்ஜியைக் கொடுக்கும்.

image

நீர்

குளிர்காலத்தில் அதிக தாகம் எடுக்காததால், நிறையப்பேர் தண்ணீர் குடிக்கவே மறந்துவிடுவார்கள். உடலின் எந்த இயக்கத்திற்கும் தண்ணீர் அவசியம் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஜில்லென தண்ணீரைக் குடிக்காமல் வெதுவெதுப்பாகக் குடித்தால், சளி போன்ற பிரச்னைகள் வராது. மேலும் சூடான நீராகாரங்களும் செரிமான மண்டலத்தைத் தூண்டி, ஜீரண சக்தியை அதிகரிக்கும். தக்காளி, முள்ளங்கி போன்ற நீர்க்காய்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

image

பானங்களில் கவனம் அவசியம்

குளிர்காலத்தில் காபி, டீ, ஹாட் சாக்லெட் போன்ற பானங்களை அதிகமாக குடிக்கத் தோணும். ஆனால், குடிக்கும்முன்பு அவற்றில் செறிந்திருக்கும் கலோரிகளை கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் இது செரிமான பிரச்னைக்கும் வழிவகுக்கும் என்பதை மறக்கவேண்டாம். குளிர்காலத்தில் அதிக ஊட்டச்சத்துமிக்க உணவுகளே செரிமான பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *