தொடர் மழையால் 1 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிப்பு: சோகத்தில் டெல்டா விவசாயிகள் | 1L acres of crops damaged in TN due to heavy rain | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


1L-acres-of-crops-damaged-in-TN-due-to-heavy-rain

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை எதிரொலி திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்தாண்டு 3 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. எனினும் நிவர், புரெவி புயல்கள் காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் காப்பாற்றப்பட்ட பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகி வந்தன. ஆனால், கடந்த மூன்று நாட்களாக அங்கு பெய்த தொடர் மழையால் குடவாசல், நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரிலான பயிர்களை மழைநீர் மூழ்கடித்தது. அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக 60 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருகின்றன. இதனால் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அறந்தாங்கி அருகேயுள்ள நாகுடியில் கண்மாயிகளில் உடைப்பு ஏற்பட்டதால் குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் புகுந்தது. இதனால் இரவில் மக்கள் அவதியடைந்து அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பொங்கல் பண்டிகையொட்டி அறுவடை செய்யப்படவிருந்த 10 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், பயிர்க் கடனை தள்ளுபடி செய்யக்கோரியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்ததை நடத்தி விவசாய பிரதிநிதிகள் சிலர் கோரிக்கை தொடர்பாக கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *