தீவிர இந்துத்துவா, பாஜக ‘ஆதரவு’… சிவசேனாவுக்கு எதிராக ‘ராஜ் தாக்கரே 2.0’ வியூகங்கள்! | Hindutva, Marathi pride and how Raj Thackeray plans to fuel MNS comeback in Maharashtra | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Hindutva--Marathi-pride-and-how-Raj-Thackeray-plans-to-fuel-MNS-comeback-in-Maharashtra

மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா (எம்.என்.எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிராவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான தனது கட்சியின் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். ‘மினி சட்டமன்ற தேர்தல்’ என கருதப்படும் இந்த தேர்தலில் ‘இந்துத்துவா’ மற்றும் ‘மராத்தி பெருமை’ ஆகியவற்றை மையமாகக் கொண்டு தனது பிரசாரத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தனது கட்சி கொடியை காவி நிறத்துக்கு மாற்றிய பின்னர், மார்ச் மாதத்தில் அயோத்திக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் தனது இந்துத்துவா நிலைப்பாட்டை அவர் மீண்டும் ஆழமாக வெளிக்காட்டவுள்ளார்.

மராட்டிய மொழியின் பெருமையை முன்னிலைப்படுத்த நவ நிர்மான் சேனா முடிவெடுத்துள்ளது. அதையொட்டி நிகழ்ச்சிகளை நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளது. மும்பை பெருநகர பகுதியில் நவி மும்பை, வசாய்-விரார், கல்யாண் தோம்பிவ்லி, மற்றும் ஔரங்காபாத் மற்றும் கொல்கப்பூர் ஆகிய பகுதிகளுக்கான மாநகராட்சி தேர்தல்கள் இந்த தாண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

image

கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் ராம ஜென்ம பூமி கோயிலுக்கு வருகை தருவது மற்றும் கட்சியின் பிரசார விவரங்கள் உள்ளிட்டவை கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பையில் நடந்த மூத்த தலைவர்கள் கூட்டத்தில் திட்டமிடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ராஜ் தாக்கரேவின் மகன் அமித் தாக்கரே மற்றும் மருமகள் மிதாலி தாக்கரே ஆகியோரும் கலந்துகொண்டனர். அமித் தாக்கரே கடந்த ஆண்டு கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

“ராஜ்தாக்ரே மார்ச் 1 முதல் மார்ச் 9 வரை கட்சியின் மூத்த தலைவர்களுடன், ஸ்ரீ ராமின் தரிசனத்திற்காக அயோத்திக்கு வருவார். மார்ச் 9-க்குப் பிறகு ஒரு மாதத்திற்கு மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்” என்று அக்கட்சியைச் சேர்ந்த பாலா நந்த்கோங்கர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மார்ச் 9 நவ நிர்மான் சேனா கட்சிக்கு முக்கியமான நாள். காரணம், கடந்த 2006-ம் ஆண்டு இதே நாளில்தான் கட்சி தொடங்கப்பட்டது. சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே தனது மகன் உத்தவ் தாக்கரேவை அரசியல் வாரிசாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனாவிலிருந்து வெளியேறி, நவ நிர்மான் சேனா கட்சியை தொடங்கினார் ராஜ் தாக்கரே.

“மண்ணின் மைந்தன்” மற்றும் “மராத்தி பெருமை” சித்தாந்தங்களை சிவசேனாவை விட மிகவும் தீவிரமாக வெளிப்படுத்தியதால், ராஜ் தாக்கரேவின் கட்சி விரைவாகவே வெற்றியை ருசித்தது. ஒரு கட்டத்தில் மும்பையின் தாதர் மற்றும் மஹிமின் கோட்டைகளை கைப்பற்றி தனதாக்கிக்கொண்டது.

image

இருப்பினும், 2014 முதல் கட்சி மந்த நிலையில் உள்ளது. அம்மாநில சட்டப்பேரவையில் ஒரு எம்.எல்.ஏ-வையும், மும்பை மாநகராட்சியில் ஒரேயொரு உறுப்பினரை மட்டுமே கொண்டுள்ளது.

”கட்சி தொடங்கிய நாளான மார்ச் 9-ம் தேதியிலிருந்து மகராஷ்டிரா சுற்றுப்பயணத்ததை தொடங்குவதற்கு முன்னதாக ராம பெருமானின் ஆசிர்வாதத்தை பெறுவதற்காக அயோத்திக்கு வருகை தரவுள்ளார். ராமர் கோயிலுக்கு பூமி பூஜை போட்ட நாளிலிருந்தே அயோத்திக்கு வரவேண்டும் என்று ராஜ் தாக்கரே விரும்பினார். அவரது இந்த பயணமானது நீண்டகாலமாக திட்டமிட்டப்பட்ட ஒன்று” என கட்சியின் செய்தித் தொடர்பாளர் சந்தீப் தேஷ்பாண்டே ‘தி பிரின்ட்’ செய்தித் தளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

ராமஜென்ம பூமி தொடர்பான வெற்றியை பெற்றதற்கும், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்கும் பிரதமர் மோடிக்கு அவர் ஏற்கெனவே நன்றி தெரிவித்திருந்தார்.

மகாராஷ்டிரா விகாஸ் அகாதி (Maharashtra Vikas Aghadi) என்ற பெயரில் அம்மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிஸ் கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு பிறகுதான் இந்துத்துவா கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதில் ராஜ் தாக்கரே கட்சி தீவிரமானது.

சிவசேனாவை பொறுத்தவரையில் இந்துத்துவா சித்தாந்தத்தின் வேர்களை கொண்ட கட்சி. மற்ற இரண்டு கூட்டணி கட்சிகளும் மதச்சார்பற்ற கொள்கைகளை கொண்டது. இந்தக் கூட்டணிதான் ராஜ் தாக்கரேவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

”தேசியவாத காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸூடன் சிவசேனா கூட்டணி அறிவித்த பிறகு, மாநிலத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப இந்துத்துவா கொள்ககையை தீவிரமாக பின்பற்றி வருகிறது நவ நிர்மன் சேனா. சிவசேனாவின் கூட்டணி அறிவிப்பால் அதன் முக்கிய வாக்காளர்கள் நிறைய பேர் அதிருப்தி அடைந்துள்ளனர்” என்று அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜகவுடன் அதிகாரபூர்வமாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைந்து செயல்பட வேண்டும் என்று ராஜ் தாக்கரே விரும்புவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“மும்பை மாநகராட்சியை சிவசேனாவிடம் இருந்து கைப்பற்ற பாஜக தனது முழு பலத்தையும் செலுத்தும். சிவசேனாவின் வாக்கு வங்கியைத் தட்டி பாஜகவுக்கு உதவ நாங்கள் மிகவும் பொருத்தமானவர்கள். ஆனால், இதுவரை கட்சிக்குள் இதுகுறித்து முறையான விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை” என்று அக்கட்சியை பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பாஜகவுக்கு நவ நிர்மான் சேனா உதவ தயாராக உள்ளது என்பது தெளிவாகிறது.

அதுமட்டுமில்லாமல் வலதுசாரி சித்தாந்தத்தைக் கொண்ட சாவர்க்கரின் புகைப்படம் நவ நிர்மான் சேனா கட்சி கூட்டத்தின் மேடையில் வைக்கப்பட்டிருந்ததன் மூலமும், கட்சியின் கொடி காவி நிறமாக மாற்றப்பட்டதின் மூலமும் பாஜகவுக்கு தாங்கள் ஆதரவாளர்கள் என்ற கருத்தை தெரிவித்துள்ளார் ராஜ் தாக்கரே.

வருகின்ற பிப்ரவரி 27-ம் தேதி மராத்தி மொழி நாள் கொண்டாடப்பட உள்ளது. அன்றைக்கு மராத்தி கையொப்ப நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் பொதுமக்களை நேரடியாக அணுகி, அவர்களின் கையோப்பம் சேகரிக்க முடிவெடுக்க்கப்பட்டுள்ளது. அன்று மும்பை மற்றும் தானே பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ராஜ் தாக்கரே கலந்துகொள்ள உள்ளார்.

ஒவ்வொரு வார்டிலும் மராத்தி மொழியில் கல்வி வழங்கும் ஆசிரியர்களை வாழ்த்துவதோடு, மராத்தி புத்தக வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நாடக பிரமுகர்களை அங்கீகரிப்பதற்கும் இந்தக் கட்imageசி திட்டமிட்டுள்ளது.

இது தவிர, பிப்ரவரி 9 முதல் ஏப்ரல் 12 வரை உறுப்பினர் பதிவு இயக்கத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்டவர்கள் “மகாராஷ்டிரா சைனிக்” (மகாராஷ்டிரா வீரர்கள்) என்று அழைக்கப்படுவார்கள், இது அவர்களின் அடையாள அட்டைகளில் குறிப்பிடப்படும். இதேபோல், நவ நிர்மான் சேனா கட்சியின் தலைவர்கள் இனிமேல் “ராஜ்தூத்” (ராஜ் தூதர்கள்) என்று அழைக்கப்படுவார்கள். அதன்படி அடையாள பேட்ஜ் வழங்கப்படவுள்ளது.

கடந்த சில மாதங்களாக, எம்.என்.எஸ் அதன் அசல் வாக்காளர்களை வென்றெடுப்பதற்கும், சிவசேனாவின் உறுதியான “மண்ணின் மகன்கள்” மற்றும் “காங்கிரஸ் எதிர்ப்பு” வாக்குகளை அறுவடை செய்யும் நோக்கிலும் மொழி பெருமைக்கும் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

டிசம்பர் மாதத்தில், இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ‘அமேசான்’ அலுவலகங்களில் மராத்தியை விருப்ப மொழியாக வழங்க தவறியதால் அந்த செயலியை அன்இன்ஸ்டால் செய்து எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், கடந்த ஆண்டு அக்டோபரில், எழுத்தாளர் ஷோபா தேஷ்பாண்டேவுடன் மராத்தியில் பேச மறுத்ததற்காக ஒரு சில கட்சி நிர்வாகிகள் தென் மும்பையின் கொலாபாவில் ஒரு நகைக்கடைக்காரரை அடித்ததாக கூறப்படுகிறது. அதே மாதத்தில், ஐபிஎல் போட்டி வர்ணனைகளை மராத்தியில் வழங்குமாறு கேட்டு டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு கட்சியின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

– மலையரசு

தகவல் உறுதுணை: The PrintSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *