தவறியும் வாய்திறக்காத அமித் ஷா… சீக்ரெட் சர்வே ‘ஷாக்’- மேற்கு வங்கத்தில் NRC நிலை என்ன?! | secret survey of amit shah What is the status of NRC in West Bengal | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


secret-survey-of-amit-shah-What-is-the-status-of-NRC-in-West-Bengal

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமித் ஷா, தப்பித் தவறி கூட என்.ஆர்.சி, சிஏஏ, என்.பி.ஆர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 

மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு நாள் சூறாவளி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்தப் பயணத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தார். “ஊழல், குற்றங்கள் ஆகியவற்றில்தான் தற்போது மேற்கு வங்கம் முதலிடத்தில் இருக்கிறது. அரசு நடத்துபவர்கள் இதைப் பற்றி கவலை இல்லாமல் வன்முறையை கையில் எடுத்திருக்கிறார்கள்” என்று சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கியவர், தப்பித் தவறி கூட தங்கள் பாஜக அரசு கொண்டுவந்த என்.ஆர்.சி, சிஏஏ, என்.பி.ஆர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால், செய்தியாளர்கள் அவரை விடுவதாக இல்லை.

மேற்கு வங்க மாநில மக்கள் பலரின் அச்சமாக இருக்கும் இந்த என்.ஆர்.சி, சிஏஏ, என்.பி.ஆர் பற்றி அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு , “கோவிட் தடுப்பூசி செயல்முறை தொடங்கியவுடன் அரசு சி.ஏ.ஏ.வை மேற்கு வங்கத்தில் செயல்படுத்தும். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சி.ஏ.ஏ செயல்படுத்தப்படுவது தாமதமானது. விதிகள் விரைவில் வடிவமைக்கப்படும்” என்று தெரிவித்தார். சி.ஏ.ஏ செயல்படுத்தப்படும் என்று அமித் ஷா தெரிவித்தாலும், மேற்கு வங்கத்தில் குடிமக்களுக்கான தேசிய பதிவேட்டை (என்.ஆர்.சி) கைவிட்டுள்ளது பாஜக.

இது தொடர்பாக ‘தி பிரன்ட்’ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, “என்.ஆர்.சி இப்போது கட்சியின் முன்னுரிமை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி நாங்கள் அதை செய்தோம். மேற்கு வங்கத்தில் இதுபோன்ற நீதித்துறை நிர்ப்பந்தம் இல்லை. எனவே, என்.ஆர்.சி பற்றி கட்சியிலோ அல்லது அரசிலோ எந்த விவாதமும் இல்லை.

வங்கதேசத்தில் இருந்து துன்புறுத்தப்பட்ட அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவோம், மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகளாக எந்தவொரு உரிமையும் இல்லாமல் வசித்து வருகிறார்கள். இது ஒரு தேர்தல் திட்டம் அல்ல, இது மக்களுக்கு எங்கள் வாக்குறுதியாகும். இதை நாங்கள் நிறைவேற்றுவோம். சி.ஏ.ஏ-வுக்கான முதல் கட்ட பணிகள் ஜனவரியில் தொடங்கும்” என்று அவர் தெரித்தார்.

இதேபோல் பேசியுள்ள மற்றொரு பாஜக தலைவர் திலீப் கோஷ், அசாமில் என்.ஆர்.சி காரணமாக நடந்த சிக்கல்களை பற்றி பேசினார். “அசாமில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான இந்துக்கள் என்.ஆர்.சி-யிலிருந்து வெளியேற்றப்பட்டதை நாங்கள் கண்டோம். இது உண்மையில் ஒரு கடினமான பயிற்சியாகும், இப்போது மேற்கு வங்கத்தில் இதுபோன்ற தவறுகளைச் செய்ய எங்களால் முடியாது. இது எங்கள் தேர்தல் வாய்ப்புகளை பாதிக்கலாம்.

அது மட்டுமில்லாமல் வங்கதேசம் உடனான எங்கள் உறவைப் பாதிக்கும் ஒரு முடிவை எங்கள் அரசால் எடுக்க முடியாது. அசாமில் உள்ள என்.ஆர்.சி மற்றும் வெளிநாட்டவர்களை அடையாளம் கண்டு, நாடு கடத்துவதற்கான முடிவைத் தொடர்ந்து, நாங்கள் வங்கதேசத்துடன் ஒரு கடினமான கட்டத்தை சந்தித்தோம். கிழக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் சீனா தொடர்பான பிரச்னைகள் காரணமாக வங்கதேசத்தை எதிர்க்க முடியாது. எனவே, அரசும் கட்சியும் இப்போதைக்கு அதை நிறுத்த முடிவு செய்தன” என்பது திலீப் கோஷ் பதிலாக இருந்தது.

இதே கருத்தைதான் மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி அமல்படுத்துவது தொடர்பாக அமித் ஷா பேசாமல் இருந்ததற்கான காரணம் எனக் கூறும் அரசியல் நோக்கர்கள், இது மட்டுமே பாஜக என்.ஆர்.சி-யை கைவிட்டதன் சரியான தாக்கம் கிடையாது என சந்தேகம் கிளப்புகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே இதை என்.ஆர்.சி-யை ஒரு தேர்தல் பிரச்னையாக மாற்றியுள்ளார். பொதுகூட்டங்களில், மக்களை பிளவுபடுத்த முற்படுவதாக பாஜகவை விமர்சித்து வருகிறார். இந்தச் சூழ்நிலையில் தேர்தல் வேறு வருகிறது. இதையெல்லாம் கணக்கில்கொண்டுதான் அமித் ஷா என்.ஆர்.சி தொடர்பாக வாய் திறக்காமல் இருக்கிறார் என்கிறார்கள்.

image

இது தொடர்பாக ‘தி பிரின்ட்’டிடம் பேசியுள்ள அரசியல் ஆய்வாளர் பிஸ்வநாத் சக்ரவர்த்தி, “அசாமில் உள்ள பாஜக இன்னும் என்ஆர்சியின் பின்விளைவுகளைக் கையாண்டு வருகிறது. இங்கே மம்தா பானர்ஜி ஏற்கெனவே என்.ஆர்.சி.யை தேர்தல் பிரச்னையாக மாற்றியுள்ளார். அதனால் பாஜகவினர் எதை விரும்புகிறார்கள், என்ன திட்டமிடுகிறார்கள் என்பது முக்கியமல்ல. இரண்டாவதாக, மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி.யைக் கொண்டுவருவது என்பது வங்கதேசத்துடனான உறவை பாதிக்கும். பாஜக மூத்த தலைவர்கள், பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், மேற்கு வங்கத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். அதன்பிறகே இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார். ஆம், சமீபத்தில் இந்த ஆய்வு பாஜக சார்பில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பாஜக பாதகமாக முடிவுகள் வரவே இப்போது என்.ஆர்.சி அமல்படுத்த போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

ஆனால், மம்தா பாஜகவை விடுவதாக இல்லை. பேரணி, கூட்டம் என எங்கு சென்றாலும் பாஜகவுடன் என்ஆர்சியை தொடர்புபடுத்தி பேசி வருகிறார். இதனால், ஏக கடுப்பில் இருக்கும் பாஜக, அவருக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள விஜயவர்கியா, “நாங்கள் 51 சதவீத மக்களுக்காக அரசியல் செய்கிறோம், அவர்களை எங்கள் சாத்தியமான வாக்காளர்களாக நாங்கள் கருதுகிறோம். எங்களிடம் இந்துக்கள், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் மற்றும் பலர் உள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் சித்தரிக்க விரும்புவதுபோல் நாங்கள் யாரையும் தனிமைப்படுத்தப் போவதில்லை. எனவே, எங்களுக்கு இப்போது ஒரு என்.ஆர்.சி தேவையில்லை. இது மத்திய அரசின் அறிவிப்பு, கட்சி அதை ஆதரிக்கிறது. என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் குறித்து முதல்வர் மம்தா மக்களிடம் பொய் சொல்கிறார். அவர் தேவையில்லாமல் என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் பற்றி பொய்களை பரப்புகிறார். அரசியலமைப்பு பதவியை வகிக்கும் ஓர் அரசியல்வாதி இத்தகைய பொய்களை பரப்புவதை நாங்கள் பார்த்ததில்லை” என கடுமையாக சாடியுள்ளார்.

– மலையரசுSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *