தயாராகும் கடும் சட்டங்கள்… பாஜகவின் அடுத்த அஜெண்டா ‘லவ் ஜிஹாத்’? | Law against Love Jihad in BJP ruled states pushed to create debates | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ‘லவ் ஜிஹாத்’-க்கு எதிராக சட்டம் இயற்றப்படவுள்ளது. இந்தச் சட்டமியற்றும் நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு தரப்பிடமிருந்தும் கடும் விமர்சனம் எழுந்துள்ளன.
மத்தியப் பிரதேச மாநில அரசு லவ்ஜிஹாத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவரும் முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. “இந்தச் சட்டம் மூலமாக லவ் ஜிஹாத் எனும் பெயரில் கட்டாயத் திருமணம் செய்யும் குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் கடுமையான சிறைத் தண்டனை மற்றும் பிணையில் வெளிவரமுடியாத சிறை என்னும் வகையில் சட்டம் இயற்றப்படும்” என மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்காக மதம் மாறுவது செல்லாது என்று சில வாரங்களுக்கு முன்பு அலகாபாத் நீதிமன்றம் கூறியிருந்தது. அதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் இதுதொடர்பான சட்டத்திற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இதைப்போலவே உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் கர்நாடகம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களும் லவ் ஜிஹாத்திற்கு எதிரான சட்டத்தை இயற்றும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. ஆனால், இந்தச் சட்டங்களுக்கு எதிராக பல தரப்பிலிருந்தும் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.
லவ் ஜிஹாத்திற்கு எதிரான சட்டம் பற்றி பேசிய ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் “திருமணம் என்பது தனிநபர் சுதந்திரம் சார்ந்தது. அதனைத் தடுக்க சட்டம் இயற்றுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது, எந்த நீதிமன்றமும் இதை ஏற்காது. காதலில் ஜிஹாத்திற்கு இடமில்லை. லவ்ஜிஹாத் என்பது நாட்டைப் பிளவுபடுத்தவும், சமூக நல்லிணக்கத்தை சிதைக்கவும் பாஜக உருவாக்கிய வார்த்தை” எனக் கடுமையாக சாடியுள்ளார்.
இந்தச் சட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் யஸ்வந்த் சின்ஹா “லவ் ஜிஹாத்திற்கு எதிராக மட்டுமல்லாமல் அன்பு, மொழி, சகோதரத்துவம் மற்றும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த அனைவருக்கும் இடையிலான அனைத்து வகையான உறவுகளுக்கும் எதிராக சட்டங்கள் இருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் தனித்தனியான இடங்களில் வாழவேண்டும். இது எங்கள் புதிய இந்தியா” என்று கூறியுள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்புவும் இந்தச் சட்டத்திற்கு எதிரான கருத்தைக் கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது. லவ் ஜிஹாத் விவகாரம் வலுவடைந்து வரும் நிலையில், அந்த வார்த்தையைக் குறிப்பிடாமல் அவர் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “திருமணம் என்பது காதல் பற்றியது. திருமணம் என்பது நம்பிக்கையைப் பற்றியது. திருமணம் என்பது ஒற்றுமையை பற்றியது. திருமணம் என்பது அக்கறையை பற்றியது. திருமணம் என்பது ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பதைப் பற்றியது. திருமணம் என்பது உங்கள் முதல் நரை முடியைக் காட்டுவது, முதலாவது சுருக்கத்தைப் பகிர்வது. திருமணம் என்பது மரியாதைக்குரியது, எதுவாக இருந்தாலும்” என்று குஷ்பு கூறியுள்ளார்.
பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், “எப்போது காதலிப்பது ஒரு குற்றமாக மாறியது? இது உண்மை என்றால் நாம் நாம் அனைவரும் பழமையான நாகரீக முதிர்ச்சியற்ற நிலைக்கு திரும்பிச் செல்கிறோம். காதல் வெல்லவைக்கும்; அது அனைத்து பிறழ்வுகளையும் குணப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.
அலகாபாத் உயர் நீதிமன்றம் ‘திருமணத்திற்காக மட்டுமே மத மாற்றம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி, `லவ் ஜிஹாத்’-திற்கு எதிராக கடுமையான சட்டம் என்று பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் அடுத்தடுத்து அறிவித்து வருகின்றனர். குறிப்பாக, லவ் ஜிஹாத் வழக்குகளைத் தடுக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றும் என்று ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு அதிதீவிரம் காட்டி வருகிறது.
இதன் எதிரொலியாக, லவ் ஜிஹாத்திற்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றும் பாஜக ஆளும் மாநில அரசுகளின் அணுகுமுறையை விமர்சித்தும் சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகளிடையே குரல்கள் எழும்பத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, இந்திய அளவில் பாஜகவின் இந்த அணுகுமுறை என்பது பாஜக கையிலெடுத்துத் தீவிரம் காட்டவுள்ள அடுத்த முக்கிய அஜெண்டாவாக எதிர்க்கட்சியினரால் பார்க்கப்படுகிறது.