“தனிமைப்படுத்தலால் குறைந்தது கொரோனா!” – சுகாதாரத் துறைச் செயலர் #ThulirkkumNambikkai | Health secretary Radhakrishnan talks about Covid cases in TN | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Health-secretary-Radhakrishnan-talks-about-Covid-cases-in-TN

“முறையான சோதனை செய்து, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தியதால்தான் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது” என்று சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழகம் கொரோனாவில் இருந்து மீண்டும் வரும் நிலையில், ‘துளிர்க்கும் நம்பிக்கை’ என்ற தலைப்பில் புதிய தலைமுறை மற்றும் பேஸ்புக் நிறுவனம் இணைந்து சிறப்பு நிகழ்ச்சி நடத்தியது. நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நெறியாள்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணனிடம் கொரோனாவின் தொடக்கநிலையில், பாதிப்பு அதிகாமாக இருந்ததாக தோன்றியது. தற்போது நாம் எந்த நிலையில் உள்ளோம் என்பது பற்றி கேட்கப்பட்டது.

அப்போது பேசிய அவர், ’’கொரோனா நோய்த்தொற்று உலகளவில் நம் அனைவரின் கண்ணோட்டத்தையும் மாற்றியிருக்கிறது. தமிழகத்தை பார்த்தோமென்றால் முதலில் ஒரு லேப் மற்றும் 10 படுக்கைகள் என ஆரம்பித்து தற்போது 228 லேப்கள் ஒருநாளைக்கு ஏறக்குறைய 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு சோதனைகள் செய்யப்படுகின்றன. தமிழக முதல்வரும் பொது சுகாதார நிபுணர்கள் குழுவின் ஆலோசனைப்படி, தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடத்த வழி அமைத்துக்கொடுத்தார். அதன் அடிப்படையில்தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் கூறினோம்.

எல்லா மாநிலங்களிலும் கோவிட் டெஸ்ட் சென்டர்கள் உள்ளன. வட மாநிலங்களில் ஆன்டிஜென் சோதனைகள்தான் பெரிதும் நடத்தப்படுகின்றன. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை முழுவதுமே ஆர்டி பிசிஆர் சோதனைகள்தான் நடத்தப்படுகிறது. அதையும் தாண்டி சிடி ஸ்கேன் எடுப்பதற்கும், உலக சுகாதார நிறுவனம், உலக மற்றும் மத்திய சுகாதார வல்லுநர்களின் ஆலோசனையை செயல்படுத்தவும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. எனவே முறையான சோதனை செய்து, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தியதால்தான் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

image

சென்னையைப் பொறுத்தவரை சுகாதாரச் செயலருடன் ஆலோசித்து, குழுக்கள் அமைத்து, பாதிப்புகளை தெருவாரியாக பிரித்து, சோதனையை அதிகரித்து, தனிமைப்படுத்தியதால்தான் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அதேபோல் ‘மக்களின் குழு எதிர்ப்பாற்றல்’ (Herd Immunity) சற்று அதிகரித்துள்ளதாகத்தான் தெரிகிறது. தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் பொதுவெளிகளில் இன்றும் மாஸ்க் அணிந்துகொண்டுதான் செல்கிறார்கள். அதனால் முன்புபோல தொற்று உடனே பரவுவது சற்று குறைந்திருக்கிறது. ஆனால் அறிவியல்படி, நாம் இன்னும் பாதுகாப்பாக இருக்கவேண்டிய கட்டாயத்தில்தான் உள்ளோம்’’ என்று கூறினார்.

அடுத்து, தடுப்பூசிகள் பற்றி ஏதேனும் திட்டம் இருக்கிறதா? எப்போது நமக்கு கிடைக்கும் என்று தெரிய வாய்ப்பிருக்கிறதா? எனக் கேட்கப்பட்டது.

இந்திய அளவில் தடுப்பூசி சோதனை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் டிபிஎச் மற்றும் இரண்டு கல்லூரிகள் தலைமையில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சோதனைகள் நடந்துகொண்டிருக்கிறது. சோதனை வெற்றியடைந்தவுடன், முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள், காவலர்கள் என முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று முதல்வர் ஏற்கெனவே அறிவித்தபடி, அனைவருக்கும் போடப்படும்’’ என்று கூறினார். Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *