தனித்து விடப்படுகிறதா தேமுதிக : விஜயகாந்த் கட்சியின் வியூகம் என்ன? | DMDK being left alone: What is the strategy of the Vijayakanth party? | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


DMDK-being-left-alone--What-is-the-strategy-of-the-Vijayakanth-party-

2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் தேமுதிகதான் கிங்மேக்கர் கட்சியாக இருந்தது, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற மூன்று மாநிலகட்சிகள் திமுக, அதிமுக, தேமுதிக மட்டுமே. ஆனால் இந்த தேர்தலில் ’எங்களுடன் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்குங்கள்’ என்று வெளிப்படையாகவே கோரிக்கை வைக்கிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா.

தனித்து விடப்படுகிறதா தேமுதிக, விஜயகாந்தின் வியூகங்கள் என்ன?

2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் தவிர்க்க முடியாத மூன்றாவது கட்சியாக இருந்தது தேமுதிக. 2011இல் அதிமுகவோடு கூட்டணி வைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு, அதில் 29 இடங்களை வென்று சட்டமன்ற எதிர்க்கட்சியானது இக்கட்சி. 2016 இல் தேமுதிகவை தனது கூட்டணிக்குள் கொண்டுவர படாதபாடு பட்டது திமுக. ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கடைசிவரை டிமிக்கி கொடுத்த விஜயகாந்த், இறுதியாக மக்கள் நல கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக தேர்தலை சந்தித்தார். 2011 இல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஜெயலலிதாவை முதல்வராக்க உதவி செய்த விஜயகாந்த், 2016 இல் மக்கள் நலக்கூட்டணி மூலமாக வாக்குகளை பிரித்து தெரிந்தோ, தெரியாமலோ ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கினார்.

image

2006 இல் சந்தித்த முதல் தேர்தலிலேயே ஒரு இடம், 2011 இல் 29 இடம் – எதிர்க்கட்சி அந்தஸ்து என அசுர வேகத்தில் வளர்ந்த தேமுதிக, 2016 இல் ஒரு இடத்தில் கூட டெபாசிட் பெறாமல் அதள பாதாளத்தில் விழுந்தது. 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல்களிலும் தேமுதிகவின் வாக்குவங்கி கடுமையாக சரிந்தது. 10 சதவீத வாக்குகளுடன் அரசியலை துவங்கிய தேமுதிக தற்போது 2 சதவீத வாக்குகளுடன் களத்தில் நிற்கிறது.  

கடந்த இரு சட்டமன்ற தேர்தல்களில் தேமுதிகவின் அலுவலகத்தில் பல கட்சி தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்திருந்த காலம் மாறி, இந்த தேர்தலில் விரைவில் எங்களுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என வெளிப்படையாகவே கோரிக்கை வைக்கிறார் பிரேமலதா. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேமுதிக, தற்போது கடும் பதற்றத்தில் உள்ளதை பார்க்கமுடிகிறது. தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நாளொரு அதிரடி கருத்துகளை சொல்வது அரசியல் அரங்கில் பேசுபொருளாகி வருகிறது. தனித்து நின்றால் 234 தொகுதிகளில் தேமுதிகவே வெற்றிபெறும், 41 தொகுதிகள் கொடுத்தால்தான் கூட்டணிக்கு உடன்படுவோம், தேவை ஏற்பட்டால் மூன்றாவது அணியை உருவாக்குவோம், தேமுதிக ஆதரவுடன்தான் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்பது போன்ற கருத்துகளை பிரேமலதாவும், அவரது மகன் விஜய பிரபாகரனும் அவ்வப்போது மேடைகளில் தெரிவித்து வருகிறார்கள்.

image

திமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று ஏற்கனவே பிரேமலதா சொல்லிவிட்டார், திமுகவுக்கும் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவரும் ஐடியா சுத்தமாக இல்லை. அப்படியிருக்கையில் தேமுதிகவின் ஒரே வாய்ப்பு, அதிமுகதான். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலேயே எல்லா கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கிவிட்டு கடைசியாக தேமுதிகவுக்கு 4 சீட்களை கொடுத்தது அதிமுக, இதனால் கேட்ட எண்ணிக்கையில், கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற வருத்ததுடனே தேர்தலை சந்தித்தார்கள் அவர்கள், அந்த தேர்தலிலும் தேமுதிக பெற்ற வாக்கு சதவீதம் 2.19 தான்.

அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாஜக, பாமக அதிக தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள், இந்த சூழலில் தேமுதிக இல்லாமல் கூட தேர்தலை சந்திக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறது அதிமுக.  “கள நிலவரம், வாக்கு சதவீத கணக்குகள் அடிப்படையில் இல்லாமல் 41 தொகுதிகள் வேண்டும் என்ற அதிக எதிர்பார்ப்போடு தேமுதிக உள்ளது. அதிகபட்சமாக 10 முதல் 15 தொகுதிகள் மட்டுமே தேமுதிகவுக்கு ஒதுக்கலாம், விருப்பமிருந்தால் கூட்டணியில் இருக்கட்டும், இல்லையென்றால் போகட்டும் என்ற முடிவோடுதான் தேமுதிகவை ஊசலாட்டத்தில் விடுகிறது அதிமுக தலைமை. தேமுதிகவுக்கு அதிமுக-பாஜக கூட்டணியை விட்டால் வேறு வாய்ப்பில்லை. தேர்தல் அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்ள குறிப்பிட்ட தொகுதிகளில் அவர்கள் வெற்றிபெற வேண்டும். அதனால் அதிமுக கொடுக்கும் இடங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்” அதிமுகவின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

image

தேமுதிகவின் முன்னால் மூன்று வாய்ப்புகள்தான் உள்ளது ஒன்று கொடுக்கும் இடத்தை வாங்கிக்கொண்டு அதிமுக கூட்டணியில் இருப்பது. இரண்டாவது, அமமுக அல்லது மூன்றாவது அணி அமைக்கும் வேறு ஏதாவது கட்சியுடன் கூட்டணி வைப்பது. மூன்றாவது, தனித்து போட்டியிடுவது ஆகியவைதான். சசிகலா பற்றி பாசிட்டிவாக பிரேமலதா பேசி வருவது, ஒருவேளை அமமுகவுடன் கூட்டணி வைப்பதற்கான சமிக்சையோ என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

திமுக ஏற்கனவே இருந்த நாடாளுமன்ற கூட்டணி தொடரும் என தெரிவித்து தேர்தலுக்கு தயாராகிவிட்டது. அதிமுகவில் பாஜக, பாமக தலைவர்களுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது, தமிழ் மாநில காங்கிரஸும் சீட் எண்ணிக்கை முக்கியமில்லை அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம் என அறிவித்துவிட்டது. நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிட ஆவர்த்தனமாகிவிட்டன. இப்போதுவரை கூட்டணி தொடர்பான விசயத்தில் ஊசலாட்டத்தில் உள்ளது தேமுதிக மட்டும்தான், அதனை அக்கட்சியின் பொருளாளரின் வார்த்தைகளிலிருந்தே உணரலாம்.

தேமுதிக என்ன செய்யப்போகிறது, விஜயகாந்த் கட்சியின் வியூகங்கள் என்ன என்ற கேள்வியுடன் அக்கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இனிவரும் நாட்களில் கூட்டணி இறுதிவடிவம் பெறும் சூழலில் தேமுதிகவின் நிலை உறுதியாகும்.

 – வீரமணி சுந்தரசோழன்Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *