டெல்லி போராட்டத்துக்கு எதிராக வியூகம்: 3 சட்டங்களுக்கு ‘ஆதரவு’ திரட்டும் மத்திய அரசு! | Strategy against Delhi struggle Central government mobilizes support for 3 laws | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Strategy-against-Delhi-struggle-Central-government-mobilizes-support-for-3-laws

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் நாளுக்குநாள் வலுவடைந்துள்ள நிலையில், மறுபுறம் வேளாண் சட்டங்களுக்கு பல மாநிலங்களிலிருந்து விவசாயிகள் சங்கங்களின் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

image

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், டெல்லியில் முக்கிய நுழைவு வாயில்களை கைப்பற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். 20 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், கடந்த 8-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். அதேபோல இரண்டு தினங்களுக்கு முன்பு டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி மையங்களையும் அவர்கள் கைப்பற்றினர்.

இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் போராட்டம் முக்கியமாக நடைபெற்றுவரும் இடங்களான சிங்கு எல்லை, காஜிப்பூர் எல்லை, நொய்டா எல்லை என பல பகுதிகளில் நேற்று காலையிலிருந்தே உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பில் டெல்லியில் இந்தப் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடித்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

விவசாயிகளுக்கான மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், போராடிவரும் விவசாயிகளின் பரிந்துரைகளை ஏற்கவும் தயாராக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதையே, மத்திய அமைச்சர்கள் பலரும் கூறத் தொடங்கியிருக்கிறார். வேளாண் சட்டங்களில் உரிய திருத்தங்களைச் செய்ய முன்வந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒற்றைக் கோரிக்கையாக இருக்கிறது.

image

இதன் எதிரொலியாக, போராடும் விவசாயிகளைத் தவிர, நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளின் ஆதரவைப் பெறுவதன் மூலம், வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் விவசாயிகளும் மாநிலங்களும்தான் அதிகம் என்று நிறுவுவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளை டெல்லிக்கே அழைத்து சந்தித்து நேரடி ஆதரவைப் பெற்று வருகிறது மத்திய அரசு.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவினர் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை திங்கள்கிழமை டெல்லியில் சந்தித்துப் பேசிய செய்தியை ‘ஹைலைட்’ செய்திருக்கிறது மத்திய அரசு.

“தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் பிகாரைச் சேர்ந்த விவசாயத் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை இடைத்தரகர்களின் தலையீட்டிலிருந்து வேளாண் சட்டங்கள் பாதுகாக்கும் என்பதில் அவர்கள் திருப்தி அடைந்துள்ளனர்.‌ வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் குழுக்களுக்கு வெளியே விவசாயிகள் சுதந்திரமாக தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய இந்த சட்டம் வழிவகை செய்வதை உறுதி செய்யும் என்று அவர்கள் கருதினர். மேலும், விளைபொருட்களை வாங்குவோரிடம் நேரடியாக ஒப்பந்தத்தில் ஈடுபடுவதன் வாயிலாக முன்கூட்டியே நிர்ணயித்த விலையில் பொருட்களை விற்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், தரமான விதைகள் மற்றும் இதர பொருட்களைப் பெறவும், வேளாண் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்கவும் விவசாய சீர்திருத்தங்கள் உதவிகரமாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்” என்கிறது மத்திய அரசு.

image

அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் கீழ் இயங்கும் 7,000-க்கும் அதிகமான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களும் வேளாண் சட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள் என்று இந்தக் குழுவின் பிரதிநிதிகள் வேளாண் அமைச்சரிடம் உறுதி அளித்தனர் என்றும், சீர்திருத்தத்தை அமல்படுத்திய மத்திய அரசுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அடிபணிய கூடாது என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர் என்றும் அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

மேலும், இந்தச் சட்டங்களின் பயன்கள் குறித்து விளம்பரங்கள், பயிற்சிகளின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் நோக்கமும் கொள்கையும் தெளிவாக இருப்பதாகவும், விவசாயிகளுக்கு ஏதுவான இந்த சீர்திருத்தங்களின் மூலம் ஏற்கெனவே பலர் பயனடைந்து வருவதாகவும், இதன் மூலம் அவர்களின் வருவாய் அதிகரிக்கும் என்றும் அவர்களிடம் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெளிவுபடுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், தொடர்ந்து பல்வேறு சங்கங்களை டெல்லியில் வரவழைத்து, வேளாண் சட்டங்களுக்கு நேரடி ஆதரவைப் பெறுவதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *