சுதந்திர இந்தியாவில் தூக்கு மேடை நோக்கி ஒரு பெண்: ஷப்னம் அலி யார், செய்த குற்றம் என்ன? | Shabnam Ali first woman to be hanged post Independence in India at Uttar Pradesh | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Shabnam-Ali-first-woman-to-be-hanged-post-Independence-in-India-at-Uttar-Pradesh

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவரை தூக்கிலிடுவதற்கான தூக்கு மேடை தயார் நிலையில் உள்ளது. இந்திய தேசம் சுதந்திர பெற்ற பிறகு முதல்முறையாக பெண் குற்றவாளி ஒருவர் தூக்கிலடப்படவுள்ளார். 38 வயதான ஷப்னம் அலிக்கு தான் அந்த தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. ஏழு பேரை ஈவு இரக்கமின்றி கொலை செய்த குற்றத்திற்காக இந்த மரண தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. 

image

யார் இந்த ஷப்னம் அலி?

உத்தர பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தின் ஹசன்பூர் நகரிலுள்ள பவன்கேடி கிராமத்தை சேர்ந்தவர் தான் இந்த ஷப்னம் அலி. இரட்டை எம்.ஏ முடித்தவர். அவருக்கு ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சலீம் என்பவருடன் காதல் வந்துள்ளது. இந்த காதல் விவகாரம் ஷப்னத்தின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. அதோடு அவர்கள் ‘அந்த பையன் வேண்டாம்’ எனவும் காதலுக்கு மறுப்பு சொல்லியுள்ளனர்.

காதல், ஷப்னத்தின் கண்ணை மறைத்துள்ளது. 13 ஆண்டுகளுக்கு முந்தைய அன்றிரவு (14 – 15 ஏப்ரல், 2008) காதலனுடன் இணைந்து அந்தக் கொடூரமான சதி திட்டத்தை தீட்டியுள்ளார். திட்டத்தின்படி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பாலில் மயக்கமருந்து கலந்து கொடுத்துள்ளார். அவர்கள் அனைவரும் மயங்கிய பிறகு காதலன் சலீமுடன் இணைந்து கோடாரியால் தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரின் கழுத்தை வெட்டிக் கொலை செய்துள்ளார். 

அம்மா, அப்பா, இரண்டு அண்ணன்கள், அண்ணி, பிறந்து பத்து மாதமான அண்ணனின் குழந்தை மற்றும் ரத்த வழி உறவினர் என ஏழு பேர் கொலை செய்யப்பட்டனர்.  

இந்தத் தகவல் காட்டுத்தீயாக பரவியது. விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் “திருடர்கள் இந்த வேலையை செய்ததாகவும். நான் பாத்ரூமுக்குள் சென்று மறைந்து கொண்டேன்” எனவும் ஷப்னம் சொல்லியுள்ளார். போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இந்தக் கொலையை ஷப்னம், தனது காதலனுடன் இணைந்து செய்தது தெரிந்தது. உடனடியாக இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

image

தொடர்ந்து இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கடந்த 2010-இல் குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம். அதையடுத்து சுமார் 11 ஆண்டு காலம் அந்தத் தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், ஜனாதிபதியிடம் கருணை மனு என முறையிட்டுக் கொண்டிருந்தார் ஷப்னம். கடந்த ஆண்டு அவரது மனு நிராகரிக்கப்பட்டது. கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. 

இந்த நிலையில்தான் நாட்டிலேயே பெண் குற்றவாளி ஒருவருக்காக மதுரா மாவட்ட சிறைச்சாலையில் தூக்கு மேடை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. “தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. இருந்தாலும் சிறைச்சாலையில் அதற்கான பணிகள் தயார் நிலையில் உள்ளன” என உறுதி செய்துள்ளார் ஷப்னத்தின் வழக்கறிஞர். 

“தண்டனையை நிறைவேற்றுமாறு எங்களுக்கு உத்தரவு வரவில்லை. ஆனால் அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ‘ஹேங் மேன்’ பவன் ஜல்லாத் தூக்கு மேடையை பார்வையிட்டார். சில கோளாறுகள் அதில் இருப்பதாக சொல்லியுள்ளார். அதனை சரி செய்து வருகிறோம். பிஹார் பக்சர் மத்திய சிறைச்சாலையிலிருந்து இரண்டு தூக்கு கயிறை ஆர்டர் செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார் மதுரா மாவட்ட சிறைச்சாலையின் முதுநிலை கண்காணிப்பாளர் ஷைலேந்திர மைத்ரேயா. 

image

58 வயதான பவன் ஜல்லாத், ஷப்னத்திற்கு தண்டனையை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு தலைமுறைகளாக இந்தியாவில் இவரது குடும்பம் தூக்குத் தண்டனை கைதிகளுக்கான தண்டனையை நிறைவேற்றி வருகின்றனர். பவன், நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட்டவர். 

ஷப்னத்தின் காதலர் சலீமின் கருணை மனு நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்டபோது ஷப்னம் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு சிறைச்சாலையிலேயே ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அவரது மகனுக்கு 12 வயதாகிறது. அந்த சிறுவனும் தாயின் குற்றத்தை மன்னிக்குமாறு குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதகியுள்ளார்.

இருப்பினும் 150 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரா சிறைச்சாலையில் ஆங்கிலேயர்கள் கட்டிய தூக்குமேடை இப்போது தயார் நிலையில் உள்ளது. ஷப்னத்தின் குடும்பத்தினர், அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். 

தகவல் உறுதுணை: Times of IndiaSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *