சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த அமைச்சர்கள் எதிர்ப்பது ஏன்? – ஓர் அலசல் | Why TN Ministers opposing VK Sasikala to use ADMK Party Flag | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Why-TN-Ministers-opposing-VK-Sasikala-to-use-ADMK-Party-Flag

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலத்தை முடித்துக் கொண்டு சசிகலா சென்னை திரும்புகிறார். அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு தமிழக அமைச்சர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியதோடு அது தொடர்பாக போலீசில் புகாரும் கொடுத்துள்ளனர்.

சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த அமைச்சர்கள் எதிர்ப்பது ஏன்?

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளராகவும் ஜெயலலிதா இருந்தார். 2016-இல் அவரது மறைவிற்கு பிறகு கட்சி பொறுப்புகள் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கைகளுக்கு சென்றது. 2016 டிசம்பர் 29-இல் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வானார். தொடர்ந்து பிப்ரவரி 5, 2017 வாக்கில் அவர் அதிமுகவின் சட்டப்பேரவை தலைவராக அதிமுக எம்.எல்.ஏக்களால் ஏகமனதாக தேர்வாகி இருந்தார். அதோடு தமிழக முதலமைச்சராகவும் பொறுப்பேற்க ஆளுநரிடம் சசிகலா முறையிட்டிருந்தார். அதற்கு வசதியாக அப்போது தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அந்த பொறுப்பிலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.இருப்பினும் ஆளுநர் அதில் காலம் தாழ்த்தி வந்தார். அந்த சூழலில்தான் சசிகலாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை உறுதியானது. அதையடுத்து ஆட்சி பொறுப்பை இப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தார் சசிகலா. பின்னர் அவர் பெங்களூரு சிறைச்சாலைக்கு சென்றார். 

image

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியின் அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி என பிளவுப்பட்டிருந்த அதிமுக ஒன்றிணைந்தது. 2017 ஆகஸ்டில் சசிகலா அதிமுக கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். அதோடு அவரது பொதுச்செயலாளர் பதவியும் அதிமுகவில் கலைக்கப்பட்டது. அதை எதிர்த்து சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தீர்ப்பு சசிகலா தரப்புக்கு பாதகமாக வந்தது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதிமுக ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கே சொந்தம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து சசிகலாவின் உறவினர் தினகரன் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. இதனிடையே சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சசிகலா, மீண்டும் அதிமுக கொடியை தனது காரில் பயன்படுத்தினார். இதற்கு அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலா அதிமுகவில் இல்லை என்றும் அதையும் மீறி அவர் இனி அதிமுக கொடியை பயன்படுத்தினால் காவல்துறை தனது கடமையை செய்யும் எனவும் அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் சிறைத் தண்டனை காலம் முடிந்து இன்று தமிழகம் திரும்பும் சசிகலா, மீண்டும் அதிமுக கொடியை தனது காரில் பொருத்தியுள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ஆட்சி அதிகாரத்தை சசிகலா கைப்பற்றி விடுவாரோ என்ற அச்சத்தில்தான் அமைச்சர்கள் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் சில அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்லியுள்ளனர். 

image

எப்படியும் தமிழக அரசியலில் சசிகலாவின் வருகை அதிர்வலைகளை ஏற்படும் எனவே சொல்லப்படுகிறது. Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *