கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல் | Full information about covaxin vaccine | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Full-information-about-covaxin-vaccine

தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட ஆய்வில் இருப்பதால் தடுப்பூசியினால் நேரும் பக்கவிளைவுகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் பொறுப்பேற்கும்.

தற்போது இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசி தொடர்பான முழுமையான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் அரசு பொதுநல மருத்துவர் . ஃபரூக் அப்துல்லா.

‘’கொரோனா வைரஸை முற்றிலும் செயலிழக்கச் செய்து அந்த செயலிழந்த வைரஸ்களை தடுப்பூசியாக செலுத்தும்போது வைரஸ்க்கு எதிரான எதிர்ப்பு சக்தியை நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் உண்டாக்கும்.

இவ்வகை வாக்சின்களை INACTIVATED WHOLE VIRION VACCINE என்று அழைக்கிறோம். இந்த தடுப்பூசிக்கு இந்திய அரசு புதிய மருந்துகள் மற்றும் மருந்துகளுக்கான பரிசோதனைகள் விதி (2019)  மருந்து மற்றும் அழகு சாதனப்பொருட்கள்( NEW DRUGS & CLINICAL TRIALS RULE) under DRUGS & COSMETICS ACT 1940 சட்டத்தின்படி மூன்றாம் கட்ட பரிசோதனை செய்து கொள்ள அவசர கால முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

image

இந்த தடுப்பூசியின் Preclinical studies எனப்படும் மனிதர்களிடையே சோதனை செய்யப்படும் முன் விலங்குகளிடையே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் சிற்றெலி, பெரிய எலி, முயல் , குரங்கு போன்றவையும் அடங்கும். விலங்குகளிடையே பாதுகாப்பு தன்மையும்  நோய் எதிர்ப்பு சக்தியையும் தூண்டுவது உறுதி செய்யப்பட்டது.

பிறகு முதல் கட்ட பரிசோதனையில்  375 ஆரோக்கியமான நபர்கள் உட்படுத்தப்பட்டார்கள். இவர்களில் அனைவருக்கும் பரிசோதனை ஆரம்பத்தில் கொரோனாவுக்கு எதிரான ஆண்ட்டிபாடிகள் ரத்தத்தில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து மூன்று அளவுகளிலும் சேர்மானத்திலும் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டது

முதல் தடுப்பூசிக்கும் இரண்டாவது தடுப்பூசிக்கும் இடையே 28 நாட்கள் இடைவெளி விடப்பட்டது. இரண்டாவது தடுப்பூசி கொடுத்து இரண்டு வாரங்கள் கழித்து சோதிக்கப்பட்டதில் முதல் குழவினருள் 87.9% பேருக்கு கொரோனாவுக்கு எதிரான ஆண்ட்டிபாடிகள் உருவாகியிருந்தது. இரண்டாவது குழுவினருள் 91.9% பேருக்கும், மூன்றாவது குழுவினருக்குள் 82.8% பேருக்கும் ஆண்ட்டிபாடிகள் உருவாகியிருந்தன.

பக்கவிளைவுகளைப் பொருத்தமட்டில் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட இடத்தில் வலி ஏற்பட்டுள்ளது.  இன்னும் பலருக்கு  தலைவலி, உடல் சோர்வு, காய்ச்சல், உடல் வலி, வயிற்று வலி, குமட்டல், வாந்தி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. வெகு சிலருக்கு  தலைசுற்றல், நடுக்கம்,  வியர்த்தல், சளி/இருமல்,  ஊசி போட்ட இடத்தில் வீக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளன . இந்த முதல்கட்ட பரிசோதனையில் பங்கு பெற்ற யாருக்கும் சீரியசான பக்க விளைவுகள் ஏற்படவில்லை.

அதற்குப்பிறகு இரண்டாம் கட்ட பரிசோதனை( PHASE II CLINICAL TRIAL)  தொடங்கியது. அதில் 380 ஆரோக்கியமான நபர்கள் பங்குபெற்றார்கள். அவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து  முதல் குழுவினருக்கு 3 மைக்ரோ கிராம் வைரியான்கள் தடுப்பூசியும், இரண்டாவது குழுவினருக்கு 6 மைக்ரோகிராம் வைரியான்கள் கொண்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டன.  தடுப்பூசி வழங்கப்படும் முன் இந்த 380 பேரின் ரத்தத்திலும் கொரோனாவுக்கு எதிரான ஆண்ட்டிபாடிகள் உருவாகவில்லை.

image

முதல் மற்றும் இரண்டாவது தவணைக்கு இடையே 28 நாட்கள் இடைவெளி விடப்பட்டன. பிறகு சோதனை செய்யப்பட்டதில் முதல் குழுவினருள் 88% பேருக்கு கொரோனாவுக்கு எதிரான ஆண்ட்டிபாடிகள் உருவாகியிருந்தன. இரண்டாவது குழுவினருள் 96.6% பேருக்கு ஆண்ட்டிபாடிகள் உருவாகியிருந்தன.  இந்த பரிசோதனையிலும் முதல்கட்ட பரிசோதனையில் விளைந்த அதே பக்க விளைவுகள் மட்டுமே ஏற்பட்டன. சீரியசான பக்கவிளைவுகள் ஏற்படவில்லை.

எனவே மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு தடுப்பூசியின் திறன் 6 மைக்ரோ கிராம் என்று முடிவு செய்யப்பட்டு மூன்றாம் கட்ட பரிசோதனையில் 25,800 பேர் பங்குபெற்று ஆய்வு தொடர்ந்து நடந்து வருகின்றது.

இதுவரை இந்த தடுப்பூசியின் முதல் தவணையைப் பெற்ற 25,800 பேரில் விரும்பத்தகாத சீரியசான பக்கவிளைவுகள் ஏற்படவில்லை. மூன்றாம் கட்ட ஆய்வு நவம்பர் மாதம் தொட்டு நடந்து வருகின்றது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வின் முடிவுகளில் பாதுகாப்பு தன்மை சிறப்பாக இருப்பதாலும் நோய் எதிர்ப்பு சக்தியை நல்லமுறையில் தூண்டுவதாலும் இந்த தடுப்பூசிக்கு மூன்றாம் கட்ட ஆய்வு செய்து கொள்ள அவசரகால முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி பெற விரும்புபவர்களிடம் முறையாக ஒப்புதல் வாங்கப்பட்டு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும்

தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட ஆய்வில் இருப்பதால் தடுப்பூசியினால் நேரும் பக்கவிளைவுகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் பொறுப்பேற்கும்.

யாருக்கெல்லாம் இந்த தடுப்பூசி போடக்கூடாது?

* ஏற்கனவே தடுப்பூசிகள் பெற்று அதற்கு ஒவ்வாமை ஏற்பட்டவர்கள்

* கர்ப்பிணிகள்/ பாலூட்டும் அன்னைகள்

* கடும் காய்ச்சல் மற்றும் தொற்று ஏற்பட்டிருப்பவர்கள்

* 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்

image

இந்த தடுப்பூசி தொழில்நுட்பத்தின் சாதகங்கள் யாது?

இந்த தடுப்பூசிகளில் செயலிழக்கச்செய்த முழுதான வைரஸ்கள் அப்படியே உபயோகிக்கப்படுவதால்  இதன் மூலம் வைரஸின் பெரும்பான்மை பகுதிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இது வைரஸில் ஏற்படும் சிறு சிறு அங்க மாற்றங்களுக்கு எதிராகவும் செயல்படும்.

இந்த தொழில்நுட்பத்தை உபயோகித்து நாம் பல்வேறு தடுப்பூசிகளை உருவாக்கி பாதுகாப்பு மற்றும் திறனில் வெற்றி கண்ட அனுபவம் இருக்கிறது. இந்த தடுப்பூசி க்ளூரோகுயின் மற்றும் ஸ்டீராய்டு மருத்துகள் எடுப்பவர்கள் இடையே குறைவான அளவு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கண்ட குளோரோகுயின் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை ரியூமடாய்ட் ஆர்த்தரைடிஸ் மக்கள் எடுத்து வருவர். எனவே அவர்கள் தங்களது மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஸ்டீராய்டு மருந்துகளை சோரியாசிஸ், லூபஸ் போன்ற ஆட்டோ இம்யூன் வியாதிகள் உள்ள மக்கள் மாற்று உறுப்பு தானம் பெற்றவர்கள் போன்றோர் எடுத்து வருவார்கள். அவர்களும் தங்களது மருத்துவர்களை அணுகிட வேண்டும்.

கோவேக்சின் இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் கண்டறிந்துள்ளது.  ஒரு குப்பி ரூபாய் 295 என நிர்ணயம் செய்துள்ளது.  விரைவில் மூன்றாம் கட்ட ஆய்வின் இடைக்கால முடிவுகள் வெளியிடப்படும் சூழ்நிலையில் இந்திய மக்களுக்கு பாதுகாப்பும் பயனும் தரும் தடுப்பூசியாக இது இருக்கும் என்றே நம்புகிறேன்’’ என்கிறார் அவர்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *