“கிராமப்புறங்களில் மூன்றில் 2 மருத்துவர்கள் முறையான பயிற்சி இல்லாதவர்கள்” – ஆய்வில் தகவல் | Study says 2 of 3 doctors in rural India have no formal medical degrees | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு மூன்று மருத்துவர்களில் குறைந்தது இரண்டு பேர் முறையான பயிற்சி பெறாதவர்களாக உள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் உள்ள சிபிஆர் என்ற ஆராய்ச்சி மையம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்தியாவிலுள்ள 19 மாநிலங்களில் 1519 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், 75% கிராமங்களில் குறைந்தது ஒரு சுகாதாரப் பணியாளரும், சராசரியாக ஒரு கிராமத்தில் மூன்று ஆரம்ப சுகாதார பணியாளர்களும் உள்ளனர். என்றாலும் அவர்களில் 86% பேர் தனியார் மருத்துவர்கள் மற்றும் 68% பேருக்கு முறையான மருத்துவ பயிற்சி இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் 2016 ஆம் ஆண்டின் அறிக்கையை இந்த ஆய்வு ஆதரிக்கிறது. அதில் இந்தியாவில் அலோபதி மருத்துவம் பயின்ற 57.3% பேருக்கு மருத்துவ தகுதி இல்லை என்றும், 31.4% பேர் மேல்நிலைப் பள்ளி வரை மட்டுமே கல்வி கற்றவர்கள் என்றும் கண்டறியப்பட்டது.
முறையான மருத்துவ அறிவு இல்லாமல் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் பயிற்சி பெற்ற மருத்துவர்களைக் காட்டிலும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் அதிகமான எண்ணிக்கை உள்ளது என்று சிபிஆர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஆரின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான யாமினி அய்யர் கூறுகையில் “திடீரென கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சுகாதார பாதுகாப்பு அமைப்பின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் இந்த ஆய்வின் மூலம் இந்தியாவிலுள்ள கிராமப்புறங்களில் சுகாதார அமைப்பு பணியாளர்கள் தரத்தை எவ்வாறு உயர்த்துவது என்பதை ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும், கிராமப்புற சுகாதார அமைப்பின் அடிப்படை அம்சங்களை ஒழுங்குபடுத்துதல், முறையான பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதையும் வெளிப்படுத்துகிறது” என்று கூறினார்.