“ஏதாவது ஒன்றை இந்த சமூகத்திற்கு திருப்பித் தரவேண்டும்” – ஏ.ஆர்.ரஹ்மான் | AR Rahman says its very important to give something back to the community | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
“எனக்கு நானே சவால்விட்டுக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால், மேஜிக் மறைந்துவிடும்; மூளை உணர்ச்சியற்றதாகிவிடும்” என்கிறார் ஆஸ்கர் நாயகனும், பிரபல இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான்.
1992-ஆம் ஆண்டு ‘ரோஜா’ படத்தின்மூலம் இசையமைப்பாளராக சினிமா துறைக்கு அறிமுகமானார். க்ளாசிக்கல் – அப்போதைய ட்ரெண்ட் இரண்டையும் இணைத்து இசைக்கு புது வடிவத்தைக் கொடுத்து, பாடல்களில் புதுமையைப் புகுத்தியவர். இந்திய திரையிசையை உலகுக்கு எடுத்துக்காட்டியவர். பாலிவுட்டின் இசை பாணியையே தனது ட்யூன்மூலம் மாற்றியவர். பல வருடங்கள் இசையுலகில் புதுமை படைத்துக்கொண்டிருக்கும் ரஹ்மான், கிராம்மி, ஆஸ்கர், பாஃப்தா (BAFTA), கோல்டன் க்ளோப் போன்ற உயரிய விருதுகளுக்கும் சொந்தக்காரர்.
‘பாஃப்தா (BAFTA) ப்ரேக்த்ரூ இந்தியா’ தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிலையில், ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியில், தனது பணி குறித்து கூறும்போது, “மனிதர்களாகிய நமக்கு சிறந்த விஷயங்கள்கூட ஒருகட்டத்தில் சலிப்பாகிவிடும். எனவே, ஏதாவது ஒன்றை புதிதாக செய்வதன்மூலமே அந்த சலிப்பை எதிர்த்துப் போராடமுடியும்.
ஒரு விஷயத்தை உங்கள் வலதுகையால் சிறப்பாக செய்கிறீர்கள் என்றால், அதை இடதுகையிலும் முயற்சி செய்யவேண்டும் என்று சொல்கிறது ஒரு பழைமையான பழமொழி. எனவே, உங்களுடைய வசதியான இடத்திலிருந்து வெளியே வந்து புதிய செயல்களில் இறங்கவேண்டும்.
நான், என்னுடைய நாற்காலியில் சென்று அமர்ந்தவுடன் மேஜிக் நடப்பதில்லை. எனக்கு நானே தொடர்ந்து சவால் விடுத்துக்கொள்வேன். ஏனென்றால், சிலநாட்கள் கழித்து மேஜிக் மறைந்துவிடும்; மூளை உணர்ச்சியற்றதாகிவிடும். ஒரு செயலை செய்து முடித்துவிட்டால், நாம் அங்கிருந்து நகர்ந்துவிடுவோம் என்று நான் நினைக்கிறேன்.
உதாரணத்திற்கு, ஒரே உணவை 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சலிப்புத் தட்டிவிடும். எனவே, வேறு உணவை சாப்பிடவேண்டும் என்று எண்ணுவோம். இதுதான் மனிதனின் இயல்பு. கலை, கதை, சினிமா என்று அனைத்திலும் இதுதான் நடக்கும். சலிப்பை தகர்க்க, நாம் தனித்து நிற்கவேண்டும்” என்றார் ரஹ்மான்.
‘பாஃப்தா (BAFTA) ப்ரேக்த்ரூ இந்தியா’ தூதராக ரஹ்மான் நியமிக்கப்படுவது, இந்தியத் திரைத்துறையின் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இது சார்ந்து தன் முன்நிற்கும் கடமைகள் குறித்து அவர் கூறும்போது, “இந்தியாவிலிருந்து கண்டெடுக்கப்பட்ட திறமைசாலி ஒருவர், உலகளவில் சிறந்தவராக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நான் ஆர்வமாக இருக்கிறேன். ஒரு தூதராக பாஃப்தாவுக்கு இந்தியாவில் அதிசிறந்த திறமையாளர்களை அடையாளம் காண வழிகாட்டவேண்டும். மேலும், பாஃப்தா குறித்து இந்தியாவில் அதிகம் எடுத்துக் கூறுவதும் என்னுடைய வேலை” என்று கூறினார்.
பாரத் பந்த்: விவசாயிகள் அழைப்புக்கு தமிழகத்தில் தாக்கம் எப்படி? – சிறப்புப் பார்வை
“நான் செய்யும் பெரும்பாலான விஷயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவது என்னவென்றால், புதிய திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதுதான். எத்தனை தடைகள் வந்தாலும் திறமை ஜொலிக்கும் என்பதுதான் நமக்கு இந்த தசாப்தம் கற்றுக்கொடுத்திருக்கிறது. திறமைசாலிகளைக் கண்டறியும் வேலையை இன்டர்நெட் தற்போது சுலபமாக்கிவிட்டது. இந்த சமூகத்திற்கும், என்னுடன் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒன்றை திருப்பித் தரவேண்டும், அதுதான் மிகமிக முக்கியமானது என்பதை 2008-இல் என்னுடைய பள்ளியை நான் தொடங்கியபோது உணர்ந்துகொண்டேன்” என்று அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார், மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்.