இணைப்பு முதல் ஓய்வு வரை… சசிகலாவுக்கு முன்னே 6 ‘வாய்ப்புகள்’ – அடுத்து என்ன? | six chances ahead of Sasikala: What is the next action? | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


six-chances-ahead-of-Sasikala--What-is-the-next-action-

நான்கு ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு தமிழகம் திரும்பும் சசிகலாவின் முன்பு ஆறு தெளிவான வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆறு வாய்ப்புகளில் அவர் எதனை தேர்ந்தெடுப்பார் என்பதுதான் தற்போதைய அரசியலின்  பரபரப்பான விவாதமாக உள்ளது.

சசிகலா நேற்று (ஜன.27) சிறை தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் அவர், இன்னும் சில நாட்களில் தடபுடலான வரவேற்புடன் தமிழகம் வருகிறார். நான்கு ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு தமிழகம் திரும்பும் சசிகலாவின் முன்னே ஆறு தெளிவான வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆறு வாய்ப்புகள் பற்றிதான் தற்போது சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள், அதிமுக-அமமுக தொண்டர்களின் பேச்சுக்கள் பரபரப்பாக வட்டமடிக்கின்றன.

வாய்ப்பு-1: அதிமுகவில் மீண்டும் இணையலாம்: சசிகலாவுக்கு முன்னே உள்ள மிக வெளிப்படையான வாய்ப்பு, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு அவர் அதிமுகவில் மீண்டும் இணைவதுதான். ஒருவேளை அவர் அதிமுகவில் இணைந்தால் கட்சியின் தலைமை பதவிக்கு அவரை நியமிக்கவேண்டும் என்று சசிகலா தரப்பால் கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்கமாட்டார் என்கின்றனர் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

image

வாய்ப்பு -2: அதிமுக மற்றும் அமமுக கூட்டணி: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் உருவாக்கிய கட்சியான அமமுகவுடன், அதிமுக கூட்டணியை உருவாக்குவது சசிகலாவின் அடுத்த விருப்பமாக இருக்கலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. சசிகலா அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகளை முதல்வர் பழனிசாமி நிராகரித்த பின்னர், இந்த யோசனையை பல அதிமுக மூத்த தலைவர்கள் ஆதரிக்கிறார்கள்.

இரு தரப்பினரும் இதனை ஏற்றுக்கொள்வதற்கு காரணங்கள் உள்ளன. ஏனெனில், இந்தத் திட்டம் அமமுக உயிர்ப்பித்திருக்க வழிவகுக்கும்; இறுதியில் இரு கட்சியையும் மீண்டும் சேர்க்கவும் வழிவகுக்கும் என்று அமமுகவினர் நம்புகிறார்கள். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஒரு வலுவான கூட்டணியுடன் இருக்கும் சூழலில், அதிமுகவும்-அமமுகவும் இணைந்தால் மட்டுமே திமுகவுக்கு வலுவான போட்டியை ஏற்படுத்த முடியும் என்று அதிமுகவினர் நம்புகிறார்கள். மேலும், சுமார் 70 – 100 தொகுதிகளில் அதிமுகவின் தோல்விக்கு காரணமாக அமமுக இருக்கக்கூடும் என்று பல்வேறு சர்வேக்கள் சொல்கிறது. இதனால் அதிமுகவினரும் இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ளலாம் என அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

image

வாய்ப்பு-3: சட்டமன்ற தேர்தலை தனித்தே சந்திப்பது: வரும் சட்டமன்ற தேர்தல் என்பது திமுக-அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குக்குமே அக்னி பரீட்சைதான். முக்கியமாக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே முதல்வர் வேட்பாளராக தேர்தல் அரசியலுக்கு புதியவர்கள். ஆனால் சசிகலா அதிமுக சார்பாக பல கூட்டணிகளை உருவாக்கியவர். பல கூட்டணிகளை உடைத்தவர் என்பதால் அவர்கள் இருவரையும் விட தேர்தல் அரசியலில் வெற்றிகரமான அனுபவசாலி சசிகலாதான். அதனால் தனது வியூகங்கள் மற்றும் பிரசார யுத்திகள் மூலமாக இந்த தேர்தலை நம்பிக்கையுடன் சந்திக்க சசிகலா முடிவு செய்யலாம்.

ஏற்கெனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமமுக 70-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் நல்ல பலத்துடன் உள்ளது. அதில் 20 முதல் 30 தொகுதிகளில் முழுநம்பிக்கையுடன் வேலை செய்தால், அத்தொகுதிகளை அமமுக வெற்றி கைப்பற்றும் என்று அமமுகவினர் தெரிவிக்கிறார்கள். குறைந்தது இரட்டை இலக்க எண்ணிக்கையில் அமமுகவினரை 2021 சட்டமன்றத்தில் அமரவைத்தால், அதன்பின்னர் வேறு வாய்ப்பே இன்றி அதிமுகவினர் தன்பின்னால் அணிவகுப்பார்கள் என சசிகலா நம்புகிறார். அதிமுக 2021இல் தோல்வியடைந்தால், இபிஎஸ்-ஓபிஎஸ் அதன்பின்னர் காணாமல் போய்விடுவார்கள் என்று சசிகலா ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

image

வாய்ப்பு-4: இந்த தேர்தலில் அமைதியாக இருப்பது: 2021 தேர்தலில் அதிமுகவுடன், பாஜக கூட்டணி வைத்துள்ளது. இந்த தேர்தலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாஜக உறுப்பினர்கள் வெல்ல வேண்டும், அதிமுக ஆட்சியமைக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுகவின் ஓட்டுகளை அதிகம் பிரிப்பது அமமுகதான். அதனால் அமமுக மற்றும் சசிகலா இந்த தேர்தலில் அமைதியாக இருந்தால்தான் மேற்கொண்டு எந்த வழக்குகளையும் பதிய மாட்டோம் என்ற நிபந்தனையுடன்தான் சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்ற பேச்சும் இருக்கிறது. ஒருவேளை அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக சசிகலா செயல்பட்டால், அவர் ஏதேனும் வழக்கில் கைது செய்யப்படலாம். எனவே, சசிகலாவுக்கு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் சில அதிமுக பிரமுகர்கள் தெரிவிக்கிறார்கள்.

வாய்ப்பு -5: அமமுக தலைமையில் மூன்றாவது அணி: சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, வரும் தேர்தலில் அதிமுகவை தோற்கடிக்க அமமுக மூன்றாவது முன்னணியை உருவாக்கலாம். 2019 மக்களவைத் தேர்தலில், தினகரனின் அமமுக சுமார் 5 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது அதிமுகவின் மொத்த வாக்குகளில் 15-20 சதவீதமாகும். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அரசாங்க எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க மூன்றாவது அணியை சசிகலா உருவாக்கினார். அதனால் அதிமுக வெற்றிபெற்றது. அதுபோல இந்த முறை அதிமுகவில் இருக்கும் துரோகிகளை தோற்கடிக்க அமமுக தலைமையில் மூன்றாவது அணியை சசிகலா உருவாக்குவார் என்று சசிகலா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

image

அமமுக அமைக்கும் மூன்றாவது அணியில் பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும் அதிமுக-திமுக கூட்டணியில் ஏற்படும் சச்சரவுகள் காரணமாக மேலும் சில கட்சிகள் இந்த அணியில் இணையலாம் என்றும் எதிர்பார்க்கிறார்கள். வரும் தேர்தலில் அதிமுக தோற்கடிக்கப்பட்டால் முழு கட்சியும் இறுதியில் சசிகலாவின் கட்டுப்பாட்டிற்கு வரும். பழனிசாமியோ, பன்னீர்செல்வமோ கட்சியில் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. அரசாங்கம் இருப்பதால் அவர்களுடன் அமைச்சர்களும், எம்.எல்..க்களும் இருக்கிறார்கள். ஆட்சி போனால் எல்லோரும் சசிகலாவின் பின்னால் அணிவகுப்பார்கள்என்று சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு வட்டாரம் தெரிவிக்கிறது.

வாய்ப்பு-6: அரசியலில் இருந்து விலகலாம்: ரஜினிகாந்த் போலவே உடல்நிலையை காரணமாக சொல்லி சசிகலாவும் அரசியலில் இருந்து விலகலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். ரஜினிகாந்துக்கு அரசியல் அனுபவம் இல்லை. ஆனால் சசிகலா 30 ஆண்டுகளாக அரசியலிலேயே ஊறிப்போனவர். அதனால் உடல்நிலையை காரணமாக வைத்தெல்லாம் அவர் விலகமாட்டார். சிறைக்கு செல்வதற்கு முன்பு சசிகலா, ஜெயலலிதா சமாதியில் மூன்று முறை சத்தியம் செய்து சபதம் எடுத்தார். அவர் அந்த சபதத்தை நிறைவேற்றாமல் ஓயமாட்டார் என்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள்.

– வீரமணி சுந்தரசோழன்Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *