இடதுசாரி ஆதிக்கம், காங். ‘தவறு’, பாஜக ஆறுதல் பரிசு…- கேரள உள்ளாட்சி முடிவு சொல்வதென்ன?! | Left wing dominance Cong Wrong BJP consolation prize What will the Kerala local body say | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Left-wing-dominance-Cong-Wrong-BJP-consolation-prize-What-will-the-Kerala-local-body-say

941 கிராம ஊராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள், 14 மாவட்ட ஊராட்சிகள், 86 நகராட்சிகள், 6 மாநகராட்சிகளுக்குப் பிரதிநிதிகளுக்கான கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்.டி.எஃப் (LDF- இடதுசாரி ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் வெற்றிபெற்றது.

image

6 மாநகராட்சிகளில் 5-ல் இடதுசாரி ஜனநாயக முன்னணியும், ஒன்றில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் (UDF) – ஐக்கிய ஜனநாயக முன்னணியும் வென்றுள்ளன. 85 நகராட்சிகளில் 35 இடங்களில் இடதுசாரி ஜனநாயக முன்னணியும், 45 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், 2 இடங்களில் பாஜக கூட்டணியும் வென்றுள்ளன. 941 கிராம ஊராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 516 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 375 இடங்களிலும், பாஜக கூட்டணி 23 இடங்களிலும் வென்றன. இதேபோல், மொத்தமுள்ள 152 ஊராட்சி ஒன்றியங்களில் இடதுசாரி கூட்டணி 108 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. 14 மாவட்ட ஊராட்சிகளில் 10 இடங்களில் இடதுசாரி கூட்டணியும், 4 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் வென்றன.

கடந்த தேர்தலுடன் ஒப்பீடு…

2015-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கூட்டணி 549 கிராம ஊராட்சிகள், 90 ஊராட்சி ஒன்றியங்கள், 44 நகராட்சிகள் மற்றும் 4 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. ஆனால், 2015-ல் இருந்த சூழ்நிலை வேறு. இப்போது இருக்கும் சூழ்நிலை வேறு. இதனால்தான் இந்த முறை உள்ளாட்சித் தேர்தல் வழக்கம்போல் இல்லாமல் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றன. குறிப்பாக அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என அனைவருக்குமே இந்தத் தேர்தல் சோதனைக் களமாக அமைந்தது.

இடதுசாரி கூட்டணி!

தங்கக் கடத்தல் விவகாரம், இதில் முதல்வரின் முதன்மைச் செயலாளர் கைது செய்யப்பட்டது, சிபிஎம் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் போதைப்பொருள் வழக்கில் சிக்கியது, வீட்டுத்திட்டத்தில் முறைகேடுகள் மற்றும் கேரள போலீஸ் சட்டத்தில் கடுமையான திருத்தங்கள், மாவோயிஸ்ட் என்கவுன்டர் தொடர்பான எதிர்ப்பு என பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் ஆளும் இடதுசாரி கூட்டணி இந்தத் தேர்தலை சந்தித்தது. எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னைகளை முன்வைத்து கடுமையான பிரசாரங்களை முன்வைத்தன. குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் ஆகியோர் தங்கக் கடத்தல் வழக்கை குறிப்பிட்டு வீதிக்கு வீதி பினராயி விஜயன் அரசை கடுமையாக விமர்சித்தனர்.

இதனால் இடதுசாரி கூட்டணி ஒருவித பதற்றத்துடனே இந்தத் தேர்தலை சந்தித்தது. கொடியேரி கட்சிப் பணியில் விடுப்பில் சென்றிருப்பதால் முதல்வர் பினராயி விஜயன் கட்சி மற்றும் அரசின் ஒற்றை முகமாக இருந்து இந்தத் தேர்தலை சந்தித்தார். தனது தலைமையிலான நான்கரை ஆண்டு ஆட்சியை தீர்மானிக்கும் வகையில், இந்தத் தேர்தல் அமைந்ததால் பினராயி விஜயன் எதிர்க்கட்சிகளுக்கு ஈடுகொடுத்து பணியாற்றினார். எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை மையப்படுத்த, பினராயி தனது அரசின் சாதனைகளை மையப்படுத்தினார். கேரளாவில் பினராயி அரசு சந்தித்ததுபோல பேரிடர்களை மற்ற எந்த அரசும் சந்திக்கவில்லை. 2018ல் நிகழ்ந்த பேரழிவு வெள்ளம், அதற்கடுத்த ஆண்டு நிலச்சரிவு, கொரோனா பெருந்தொற்று என பல பேரிடர்களை கேரளா சந்தித்தாலும் அதிலிருந்து மக்களை மீட்க உதவியதை தேர்தலில் பிரசாரமாக முன்னெடுத்தது ஆளும் சிபிஎம் அரசு.

சுகாதாரம் மற்றும் கல்வியில் பெரிய மாற்றங்களை செய்தது என தங்கள் ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டது. இதன் பயனாக தான் தற்போது அமைந்துள்ள தேர்தல் முடிவுகள். தேர்தல் வெற்றி குறித்து பேசிய பினராயி, “மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் கேரள அரசைச் சிதைக்க முயன்றவர்கள் தோல்வி அடைந்துள்ளார்கள். அவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள். கேரள மக்கள் எப்போதும் மதச்சார்பற்ற தன்மைக்குத்தான் ஆதரவு கொடுப்பார்கள். கேரள மக்களின் இதயங்களில் மதச்சார்பற்ற தன்மை உள்ளது. அவர்கள் இடசதுசாரிகளை நம்புகிறார்கள்.

இடதுசாரி அரசு தொடர வேண்டும் என மக்கள் விரும்புவதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. இடதுசாரி கூட்டணி அரசு கடந்த 4 ஆண்டுகளாகச் செய்த வளர்ச்சிப் பணிகளுக்கு மக்கள் கொடுத்த பரிசு இந்த வெற்றி. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வளர்ச்சிப் பணிகளை எங்கள் அரசு செய்துள்ளது. அனைத்துத் தரப்பு மக்களையும் வளர்ச்சிப் பணிகள் சென்று சேர்ந்துள்ளன. மற்ற எந்த ஆட்சியிலும் இல்லாதவாறு எங்கள் அரசு இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தது. ஒக்கி புயல், பெரு வெள்ளம், நிபா வைரஸ், கொரோனா எனப் பல சவால்களை, பேரிடர்களைச் சந்தித்தோம். அதில் நாங்கள் செய்த பணிகளை மக்கள் புரிந்துகொண்டு தேர்தலில் வாக்களித்துள்ளனர்” என்றவர் காங்கிரஸ் தொடர்பாகவும் பேசினார்.

“காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் கேரளத்தில் இடமில்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. பாஜகவுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சி தவறான பிரசாரங்களை முன்னெடுத்தது. அவர்களுடன் ரகசியமாக கூட்டணி அமைத்து, தீவிர வர்க்கீய அமைப்பான ‘வெல்ஃபேர் பார்ட்டி’யை வெளிப்படையாக ஆதரித்து காங்கிரஸ் தேர்தல் களம் கண்டது. வர்க்கியத்தை எதிர்ப்பதும், அதேநேரத்தில் முஸ்லிம் தீவிரவாத அமைப்பு சார்ந்த கட்சியுடன் கைகோப்பதையும் தனது நிலைப்பாடாக கொண்டது காங்கிரஸ் கூட்டணி. இதை இஸ்லாமிய சமூகம் கூட அங்கீகரிக்கவில்லை” எனக் கூறினார்.

image

காங்கிரஸ் கூட்டணி:

பினராயி கூறியது போல் காங்கிரஸ் செய்த தவறுகளும் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு கூடுதல் வெற்றியை சேர்த்தது. முதல் தவறு கூட்டணி. 2015ல் இடதுசாரி கூட்டணி உடன் பல இடங்களை வென்ற ஜமாத்-இ-இஸ்லாமி வெல்ஃபேர் பார்ட்டியுடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ். இந்த ஜமாத்-இ-இஸ்லாமி வெல்ஃபேர் பார்ட்டி ஒரு தீவிர வர்க்கீய அமைப்பு. கேரளாவில் உள்ள இஸ்லாமிய மக்கள் பெரும்பாலானோர் சமீபகாலமாக இந்த வெல்ஃபேர் பார்ட்டியை நேரடியாக எதிர்த்து வருகின்றனர். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு நெருக்கமான பல முஸ்லிம் மதத் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பே வெல்ஃபேர் பார்ட்டி உடன் கூட்டணி வைக்கவேண்டாம் என காங்கிரஸ் தலைவர்களை வெளிப்படையாக எச்சரித்தது. ஆனால், அதை காதில் வாங்கவில்லை காங்கிரஸ்.

அடுத்த தவறு கேரள காங்கிரஸ் உடனான மோதல்: சமீபத்தில் கே.எம்.மணியின் மறைவுக்குப் பிறகு கேரள காங்கிரஸ் இரண்டாக உடைந்துள்ளது. அவரின் மகன் ஜோஸ் கே.மாணி ஒருபுறம், ஜோசப் மறுபுறம் என கட்சி பிரிந்து சின்னமும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. கேரள கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு கொண்ட இந்தக் கட்சியின் பிரிவால் ஏற்பட போகும் சேதத்தை கணிக்க காங்கிரஸ் கூட்டணி தவறிவிட்டது. இதனால் மத்திய கேரளாவில் இவர்களுக்கு ஆதரவான கிறிஸ்தவர்கள், இடதுசாரி கூட்டணியை ஆதரித்தனர்.

மூன்றாவது தவறு உட்கட்சி பூசல். பல இடங்களில், காங்கிரஸ் உட்கட்சி பூசலால் தவித்தது. தேர்தல் சீட் தொடர்பான சர்ச்சைகள் காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் எதிராக வேட்பாளர்களை களமிறக்கினர். இது இடதுசாரி கூட்டணிக்கு கூடுதல் பலத்தைச் சேர்த்து.

image

ஆறுதல் பரிசு பெற்ற பாஜக!

இந்த ஆண்டு பிப்ரவரியில் பொறுப்பேற்ற மாநிலத் தலைவர் கே.சுரேந்திரனின் கீழ் பாஜக எதிர்கொண்ட முதல் தேர்தல் இதுவாகும். பீகார் சட்டமன்றத் தேர்தல்களிலும், ஹைதராபாத் நகராட்சித் தேர்தல்களிலும் அதன் செயல்திறனால் ஈர்க்கப்பட்ட பாஜக, 2015-ல் கிடைத்த 13.28 சதவீதத்திலிருந்து தனது வாக்குப் பங்கை மேம்படுத்தவும், சில முக்கியமான உள்ளாட்சி அமைப்புகளின் ஆதிக்கம் செலுத்தவும் ஆர்வமாக இந்தத் தேர்தலை சந்தித்தது. வழக்கம்போல இந்து மதம் சார்ந்த பிரசாரங்களையும், பினராயி அரசின் மீதான குற்றச்சாட்டுகளையும், மற்ற மாநிலங்களில் தங்கள் கட்சி செய்து வரும் ஆட்சியை முன்வைத்தும் பாஜக தேர்தலை எதிர்கொண்டது.

எதிர்பார்த்தது வேறு என்றாலும், கடந்த முறையைவிட இந்த முறை பாஜக சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை இந்தத் தேர்தல் பதிவு செய்துள்ளது. அதிலும், சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பண்டலம் நகராட்சி மன்றத்தை பாஜக வென்றுளள்து. பண்டலம் நகராட்சியில் 33 வார்டுகளில் 17 வார்டுகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வென்றுள்ளது. இங்கு 2015-ல் வெறும் ஏழு இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. .

கேரளாவின் பதனம்திட்டா மாவட்டத்தில் உள்ள இந்த நகரம் புகழ்பெற்ற சபரிமலை கோயிலின் தாயகமாக இருப்பதால் இந்த வெற்றி பாஜகவுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதுபோக கூடுதலாக, பாலக்காடு நகராட்சியில் பெரும்பான்மையுடன் பாஜக அதிகாரத்தை கையில் எடுத்துள்ளது. பாலக்காட்டில் 52 இடங்களில் 28 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2015ல் இங்கு 24 இடங்கள் வென்றிருந்தது. இது பாஜகவுக்கு கிடைத்த ஆறுதல் பரிசாகவே பார்க்கப்படுகிறது.

பாஜகவும் அதன் நட்பு கட்சிகளும் பல இடங்களில் காங்கிரஸுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளைப் பிரித்துள்ளது. பாஜகவைப் பொறுத்தவரை, அக்கட்சி அதிகம் எதிர்பார்த்த திருவனந்தபுரத்தில் ஏமாற்றம் ஏற்பட்டபோதிலும், மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் சில லாபங்களை ஈட்டியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், மாநிலத்தின் மாற்று அரசியல் சக்தியாக காங்கிரஸை பலவீனப்படுத்துவதற்கான அதன் நீண்டகால குறிக்கோளுக்கு மற்றொரு அடியை எடுத்து வைத்துள்ளது.

image

தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?!

அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்தத் தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. இந்த முடிவுகள் நிச்சயமாக அதில் எதிரொலிக்கும். கடந்த மூன்று தசாப்தங்களாக, அதாவது 1980-க்குப் பிறகு எந்தவொரு கட்சியும் கூட்டணியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக்கு வரவில்லை. அதனை உடைக்க இடதுசாரி கூட்டணி ஆர்வமாக இருக்கிறது. அதன் எதிரொலியாகவே இந்தத் தேர்தல் முடிவுகளை பார்க்கத் தொடங்கியுள்ளது.

அதேபோல் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்துவரும் காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலம் என்றால் அது கேரளாதான். இதனால் இந்த முறை கேரளாவில் ஆட்சியை பிடிக்கவேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் இருக்கிறது. அப்படி வெற்றிபெற வேண்டும் என்றால் கட்சியில் நிலவும் பிரச்னைகள், கேரளா காங்கிரஸ் இல்லாதது போன்றவற்றை சமாளிக்க வேண்டும் என்பதை இந்தத் தேர்தலில் பாடமாக கற்றுக்கொண்டுள்ளது. இந்த பிரச்னைகளை சரிசெய்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு உணர்த்தியிருக்கிறது.

image

ஒட்டுமொத்தமாக, கேரள உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணியின் ஆதிக்கத்தையும், காங்கிரஸ் கூட்டணியின் கவனிக்கத்தக்க வெற்றிகளையும் பெற்றுள்ளன. ஆனாலும் சில முக்கிய நகராட்சி நகரங்களில் பாஜகவின் வெற்றி ஆறு மாதங்கள் கழித்து நடக்கவிருக்கும், கேரள சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கோணப் போட்டிக்குத் தயாராக இருக்கும் என்பதற்கான வலுவான சமிக்ஞையாக மாறியுள்ளது.

– மலையரசுSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *