அன்று துப்புரவு பணி…அதே அலுவலகத்தில் இன்று பஞ்சாயத்து தலைவரான கேரள பெண் | Kerala woman who worked as part time sweeper at panchayat office is now its president | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர துப்புரவாளராக இருந்து தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேரளா பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தெற்கு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது பத்தனம்புரம் பஞ்சாயத்து. பள்ளிப்படிப்பை பாதியில் விட்டாச்சு. பஞ்சாயத்து அலுவகலகத்தில் பகுதிநேர வேலை. நாற்காலிகளையும் கட்டடங்களையும் தூசி தட்டி சுத்தம் செய்ய வேண்டும். மாதம் 2 ஆயிரம்தான் சம்பளம். இப்படிதான் கடந்த 10 ஆண்டுகளாக நகர்ந்தது பட்டியலினத்தைச் சேர்ந்த ஆனந்தவள்ளி(46) என்ற துப்புரவாளரின் வாழ்க்கை.
ஆனால் அதே பஞ்சாயத்து அலுவலகத்தின் தலைவர் நாற்காலியில் அமர்ந்து, பேனா பிடித்து கையெழுத்திடுவார் என நினைத்து கூட பார்த்திருக்கமாட்டார் ஆனந்தவள்ளி. ஆம்… தற்போது அது அரங்கேறியுள்ளது. அண்மையில் முடிவடைந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்ட ஆனந்தவள்ளி பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் இருக்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவருடைய கண்ணீரை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதுகுறித்து அவர் கூறும்போது “எனது கணவர் பெயிண்டராக உள்ளார். மேலும் எனது குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள். எனது கட்சியால் மட்டுமே இதுபோன்ற செயல்களைச் செய்ய முடியும். நான் அதற்கு கடன்பட்டிருக்கிறேன். நான் 2011 ஆம் ஆண்டு பகுதி நேர துப்புரவாளராக பணியில் சேர்ந்தேன். ஆனால் இப்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனக்கு ரூ. 6000 சம்பளம். எனது பழைய வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.
நான் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன். ஆனால் எனது கட்சித் தலைவர்களும் நலம் விரும்பிகளும் புதிய பொறுப்பை ஏற்க என்னைத் தூண்டினர். தொகுதி பஞ்சாயத்தை ஒரு முன்மாதிரியாக மாற்ற நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். எனது பொறுப்பு இப்போது கணமானது. எனது தொகுதியில் உள்ள அனைவருக்கும் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற நான் கடுமையாக உழைப்பேன்” என்றார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண்ணாக ஆனந்தவள்ளி மட்டும் கிடையாது. இன்னும் பல பெண்கள் சாதனை புரிந்துள்ளனர். மேலும் நான்கு இளம் பெண்களுக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதை விரும்பும் 22 வயது சட்ட மாணவி சாருதி, கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒலவண்ண பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.
அதேபோல், 21 வயதான ரேஷ்மா மரியம் ஜாய், பத்தனம்திட்டாவில் உள்ள அருவபூலம் பஞ்சாயத்தின் தலைவராகவும், ராதிகா மகாதேவன் (23) பாலக்காட்டில் உள்ள மலம்புழா பஞ்சாயத்தின் தலைவராகவும், வயநாடு மாவட்டத்தில் போஜுதான பஞ்சாயத்துத் தலைவராக அனஸ் ஸ்டெபியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சுய உதவிக்குழுவைச் சேர்ந்த இல்லத்தரசி உறுப்பினர்கள் பலரும் உள்ளாட்சித் தேர்தலி வெற்றி பெற்றனர். வெற்றிபெற்ற 7,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இல்லத்தரசிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 21 வயது மாணவி ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் கார்ப்பரேஷனின் மேயராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.