“அஞ்சாத சிங்கம் என் காளை; சும்மா கெத்து காட்டும்” 174 முறை வாடிவாசல் கண்ட மதுரைப் பெண் ! | Anjatha Singam is my bull Vadivasal Renuka the veera Tamilachchi | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Anjatha-Singam-is-my-bull-Vadivasal-Renuka-the-veera-Tamilachchi

மதுரையில் தனது 7 வயது முதல் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வரும் ரேணுகா நேரடியாக வாடிவாசல் சென்று தனது காளையை அவிழ்த்து வருகிறார். 174 முறை வாடிவாசல் கண்டுள்ள இவரது காளை இதுவரையிலும் காளையர் கையில் சிக்கியதில்லை.

பெண்களால் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளை, ஆண்கள்தான் வாடிவாசலுக்கு அழைத்துச் செல்வர். ஆனால் நத்தம் இடையபட்டியை சேர்ந்த ரேணுகா காளையை வளர்ப்பதோடு வாடிவாசலுக்கும் சென்று அவிழ்த்து விடுகிறார். இதுவரை இவரது காளை, காளையரின் கையில் அகப்பட்டது இல்லை. ரேணுகாவை, இடையபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கச் சென்றோம். அப்போது, “அஞ்சாத சிங்கம் என் காளை சும்மா பஞ்சா பறக்கவிடும் ஆளை” என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் பாடல் வரிகளை முணுமுணுத்தபடி கையில் வைக்கோலுடன் வந்த ரேணுகாவிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம்…

image

என்னோட சின்ன வயசுல பசங்க காளைய அங்கிட்டும் இங்கிட்டும் இழுத்துக்கிட்டு போறத பார்த்து எனக்கும் காளை வளர்க்க ஆசை வந்துச்சு, உடனே எங்க அப்பாகிட்ட ஒரு காளை மாடு வளர்க்கலாம்னு சொன்னேன். ‘ஏம்மா பசங்க, அங்க இங்கன்னு மாட்ட இழுத்துக்கிட்டு திரிவானுக பொட்டபுள்ள நீ எப்படி காளைய பேசாம போ ஆத்தான்னு சொல்லிட்டாக’ எனக்கு மனசு ரொம்ப கஷ்டமான போச்சு.

அதுக்கப்புறம் ஒருநாள் எங்க குலதெய்வம் ஏன்னோட கனவுல வந்து, ஒரு காளைய வளர்க்க சொன்னதோடு அந்த காளை இருக்குற இடத்தையும் சொல்லுச்சு. அத அப்பாகிட்ட போய் சொன்னேன். என்னம்மா, குலதெய்வம் சொன்னதா சொல்ற சரி வா போய் பாக்கலாம்னு அந்த இடத்துக்கு கூட்டிட்டு போனாரு. குலதெய்வம் சொன்ன மாதிரியே அந்த இடத்துல ஒரு கன்றுக்குட்டி நின்னுச்சு. 1500 ரூபாய்க்கி விலைபேசி ஓட்டிட்டு வந்து வளர்த்தோம் என்றவர், சார் ஒரு நிமுசம் இருங்க மாட்டுக்கு கழனித்தண்ணிய வெச்சுட்டு வந்தர்றேன்னு போனவர் மீண்டும் வந்து தொடர்ந்தார்.

image

“என்னோட காளைய காலைலேயும், சாயங்காலமும் நான்தான் மேய்ப்பேன். வெள்ளையம்மா ரொம்ப பாசமான மாடு சாதுவா இருக்கும். ஆனா களத்துல இறங்கிட்டா சிங்கமா சீறும். ஒரு பய புடிக்க முடியாது. ஆனா என்ன பாத்துட்டா போதும் ஒரே ஜாலியாயிரும் என் மடியில தலையவச்சு அப்படியே படுத்துக்கும்.

எனக்கு ஏழு வயசு இருக்கும் அப்பதான் முதன் முதலா சாந்தம்பாடியில நடந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு போயி என்னோட காளைய வாடிவாசல் வரை வந்து நானே அவுத்து விட்டேன். ஏம்மாடு பிடிபடாம ஓடிவந்துருச்சு அன்னைல இருந்து அந்த மாடு இறக்குற வரைக்கும் மொத்தம் 146 வாடிவாசல பாத்திருக்கேன் எந்த வாடிவாசல்லேயும் என்னோட மாடு யார் கைலேயும் மாட்டுனதே இல்ல.

நீங்க வரும்போது நான் பாடிக்கிட்டு வந்தேனே, அந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துல வர்ற வெள்ளையம்மா தான் எங்க குலதெய்வம். அந்த பேரையே என் காளைக்கும் வெச்சிருக்கேன். எங்க ஊர்ல நடக்குற ஜல்லிக்கட்டு போட்டியில உங்க மாட்ட அவுத்து உடுங்கன்னு வெத்தல பாக்கு வெச்சு அழைப்பாங்க. நாங்களும் போறதுக்கு முன்னாடி குலதெய்வத்தோட உத்தரவை கேப்போம்.

image

உத்தரவு கொடுத்தாதான் வாடிவாசல்ல மாட்ட அவுப்போம் இல்லாட்டி இல்ல. 146 வாடிவாசல் கண்ட என்னோட காளை வெள்யைம்மா வயது முதிர்ச்சியால எழு வருசத்துக்கு முன்னாடி இறந்திருச்சு. அதுக்கப்புறமா இந்த காளைய 8500 ரூபாய்க்கு வாங்கினேன். இத வாங்குறப்பவே சொன்னாங்க, இது ரொம்ப மூர்க்கமான காளை இத வளக்குறது ரொம்ப கஷ்டம்னு. இதுவும் இப்ப 28 வாடிவாசலுக்கு போயிருக்கு ஆனா யார் கைலேயும் சிக்கல” என்றவர் காளையை நோக்கி, ‘ஏய் ஏய் இந்த மாடு சும்மா நிக்கிதான்னு பாரு. நேத்துதான் 300 ரூபாய் கொடுத்து கொம்ப சீவுனேன் அதுக்குள்ள மரத்துல குத்தி மலுங்க வெச்சிருச்சு. பேசாம நில்லு’ என்றவர் தொடர்ந்து.

“ஜல்லிக்கட்டு போட்டிக்கு போறப்ப மாட்ட தனிஆளாதான் வண்டில ஏத்திக்கிட்டு போவேன். வண்டில நான் ஏறிட்டா போதும் மாடும் அடம்பிடிக்காம ஏறிரும். இந்த காளைக்கு அலங்காநல்லூர்தான் முதல் வாடிவாசல். அதனால ஏன்னோட காளைய புடிச்சா ஐந்தாயிரம் ரூபா பரிசுன்னு அறிவிச்சு அவிழ்த்து விட்டேன். யார் பிடியிலும் சிக்காம பஞ்சா பறந்து வந்துருச்சு பிடிபடாத மாட்டுக்கான பரிசா எனக்கு ஸ்டாலின் ஐயா ஒரு பவுன் மோதிரம் போட்டாங்க. தங்ககாசு, வெள்ளிகாசு, பித்தளை அண்டா, பட்டுச்சேல வேஷ்டிசட்ட செல்போன் அது இதுன்னு மொத்தம் அறுபதாயிரத்துக்கும் மேலான பரிசை என்னோட காளை ஜெயிச்சிருக்கு.

எங்க குலதெய்வம் வெள்ளையம்மா வாடிவாசலுக்கு வர்றப்ப கழுத்து கால்ல சலங்கை கட்டியிருக்கும். ஆனா ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பாதுகாப்பு கருதி சலங்கையை அவுக்க சொன்னாங்க நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். இதை கவனிச்ச கமிட்டிகாரவுங்க சார் இந்த பொண்ணு சின்ன வயசுல இருந்து காளைய அவுத்துட்டு இருக்கு பொண்ணுமாடு யார் கைலேயும் பிடிபடாது அவுத்து விடுங்கன்னு சொன்னாங்க. அதே போல யார் கைலேயும் சிக்காம வந்துருச்சு. என்னோட காளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்குப் பிறகு ரொம்ப பேமஸ் ஆயிருச்சு.

இந்த கொரோனா காலத்துல இந்த வருசம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்குமா நடக்காதா என்று கவலையோடு இருந்தேன். ஆனால் அரசாங்கம் நடத்துறதுக்கு அனுமதி கொடுத்திருக்காங்க அதனால ரொம்ப சந்தோஷமா இருக்கேன். கொரோனா வந்ததால் அப்பாவுக்கு வருமானம் இல்லாம இருந்துச்சு. அந்த காலத்துல காளைய வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டு ஒருவகையா வளர்த்து விட்டேன். இப்ப வாடிவசாலுக்கு தயார் செய்து கொஞ்சுக்கிட்டு இருக்கேன்.

இதுவரைக்கும் அலங்காநல்லூர்ல மாட்டை அவுக்க டோக்கன் கிடைக்கல நானும் கேட்டுக்கிட்டு இருக்கேன். டோக்கன் கிடைத்தால் நிச்சயமாக மாட்டை அவுப்பேன். இந்த வருசம் பொன்னமராவதி, மணப்பாறை கல்லுப்பட்டி, ஆவாரம்பட்டில கூப்புட்டு இருக்காங்க. சாமி உத்தரவு கொடுத்தா போவோம். இதுவரையிலும் வெள்ளையம்மா 28 தடவ வாடிவாசலை பார்த்திருக்கு, மொத்தம் 174 முறை ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அவிழ்த்திருக்கிறேன்.

19 வருசமா யார் கைலேயும் மாட்டாத என்னோட காளை இந்த வருசமும் யார் பிடியிலும் சிக்காது” என்றார் நம்பிக்கையுடன். வறுமையிலும் காளையை வளர்த்து பாரம்பரியத்தை காக்கும் ரேணுகா மூன்று முறை ஜல்லிக்கட்டு வீர தமிழச்சி விருது பெற்றுள்ளார். இனிவரும் காலங்களில் மேலும் பல விருதுகளை பெற வாழ்த்தி விடைபெற்றோம்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *