ஃப்ளாஷ்பேக் முதல் புதிய ‘மூவ்’ வரை… – ஸ்டாலினை அசைத்துப் பார்க்கிறாரா அழகிரி? | special article about m.k.azhagiri meeting in madurai | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


special-article-about-m-k-azhagiri-meeting-in-madurai

ஒரு காலத்தில் மதுரையை ஆட்டிப்படைத்த அந்த ஆறு எழுத்து வார்த்தைதான் மு.க.அழகிரி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆளே இருந்த இடம் தெரியாமல் இருந்தார். இப்போது மீண்டும் தன்னுடைய தம்பி ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் கவனம் பெற்று வருகிறார். எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினால் ஒருநாளும் முதல்வராக ஆக முடியாது என சாபம் விடுவதுபோல் பேசியுள்ளார் மு.க.அழகிரி. ஏன் இவ்வளவு கோபம்? அதன் பின்னணிதான் என்ன? பார்ப்போம்.

image

ஃபிளாஷ்பேக்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் பிறந்த மூத்த மகன்தான் மு.க.அழகிரி. மு.க. செல்வி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசி ஆகியோர் மு.க.அழகிரி உடன் பிறந்தவர்கள். 1980ஆம் ஆண்டு முரசொலி பத்திரிகையைக் கவனித்துக்கொள்வதற்காக, சென்னையில் இருந்து மதுரைக்கு கருணாநிதியால் அனுப்பப்பட்டவர்தான் மு.க.அழகிரி. இதை ஏற்றுக்கொண்ட அழகிரி தனது மனைவி மகள்கள், மகனுடன் மதுரையிலேயே தங்கி அரசியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.

image

நேரடி அரசியலில் ஈடுபடாமலேயே சில ஆண்டுகள் இருந்துவந்த நிலையில், 1993 ஆம் ஆண்டு வைகோ திமுகவை விட்டு வெளியேறியபோது தென்மண்டலத்தில் கட்சியைக் கட்டி காப்பாற்றினார். அதனால் கட்சியின் அவரது செல்வாக்கு உயர்ந்தது. ஆனால், அது நிலைக்கவில்லை. 2001ஆம் ஆண்டு கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனது பலத்தை காண்பிக்க திமுகவிற்கு எதிராக 10 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்று கெத்து காண்பித்தார் அழகிரி. அவரின் செல்வாக்கு திமுகவில் உயர ஆரம்பித்தது. அதையடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலிலும் தனது பங்களிப்பை திமுகவிற்கு வழங்கினார். 2004 நாடாளுமன்றத் தேர்தல், 2006 சட்டமன்றத்தேர்தலில் அழகிரி தென்மாவட்டங்களை தன் கையில் வைத்திருந்ததாக கூறப்பட்டது.

image

பின்னர், 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக மதுரையில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரான மறைந்த பி.மோகனை விட 1,40,985 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்றார் அழகிரி. இதையடுத்து மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக அங்கம் வகித்தார்.

இதையடுத்து தென் மண்டலத்தின் பெரிய மைல் கல் என்றால் அது அழகிரிதான் என்று நிரூபிக்கும் வகையில், மாற்றத்தை கொண்டுவந்தது திருமங்கலம் இடைத்தேர்தல்தான். திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை, சொன்னதைப்போலவே 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அதற்கு பரிசாக, தி.மு.க-வின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் ஆக்கப்பட்டார் அழகிரி. தொடர்ந்து தென்மாவட்டங்களில் 4 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் திமுக வெற்றிபெற, அதிகார மையமாக மாறினார் அழகிரி.

image

ஆனால், அதன்பின்னர் அவரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தென்மண்டலத்திலுள்ள 58 தொகுதிகளில் 12 தொகுதிகள் மட்டுமே திமுக கைப்பற்றியது. ஆனால் அழகிரி கொடுத்த வாக்கோ 45. அது பலிக்கவில்லை. அவ்வளவுதான், அழகிரியின் கோட்டை என்று சொல்லப்பட்ட மதுரையில் அவரது செல்வாக்கு சரியத் தொடங்கியது. அவரின் அரசியல் பயணமும் முடிவுக்கு வரும் நேரம் அதுதான் என்பதையும் அதை அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். தொடர்ந்து, கட்சிக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

image

அழகிரியின் மூவ்… இது ஒருபுறம் இருந்தாலும் எப்படியாவது கட்சியின் இணைந்துவிட வேண்டும் என்றே அழகிரி செயல்பட்டு வந்துள்ளார். ஆனால் ஸ்டாலின் வேண்டுமென்றே ஓரங்கட்டியதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கருணாநிதியின் மறைவிற்கு பிறகு கூட அழகிரியை கட்சியில் சேர்ப்பது குறித்து திமுக எவ்வித சமிக்ஞைகளும் காட்டவில்லை. அப்படி என்னதான் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் பிரச்னை என்ற கேள்வி எழுந்தபோது அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் சில தகவல்களை தெரிவித்துள்ளனர்.

image

அதாவது, அழகிரி தலைமைக்கு ஆசைப்படவில்லை. ஆனால் கருணாநிதி இருக்கும்போது ஸ்டாலின் தலைவராக ஆவதை மு.க அழகிரி விரும்பவில்லை. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது முதல்வராக ஆசைப்பட்டதாகவும், கருணாநிதியை ஆலோசகராகவும் இருக்க நிர்பந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இதை அழகிரி விரும்பாததால் முரண்பாடு ஏற்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியில் விலக்கி வைத்து இவ்வளவு நாட்கள் ஆகியும் அதற்கான சின்ன ஜாடையை கூட ஸ்டாலின் காட்டாதது அழகிரி வெறுமையின் உச்சிக்கே சென்றிருப்பார்.

இதனால் பொறுமை இழந்த அழகிரி ஒருகட்டத்தில் திருப்பி அடிக்க துணிந்துவிட்டார் என்பது போன்றே தோன்றுகிறது அவரது சமீபத்திய செயல்பாடுகள். ஆம், ரஜினி கட்சி தொடங்குவதாக கூறப்பட்டபோது அவரை சந்திப்பேன், புதுகட்சி தொடங்குவேன், ஆதரவாளர்களிடம் கேட்டு முடிவெடுப்பேன் என மு.க.அழகிரி கூறி வந்தார். ஏதோ போகிற போக்கில் சொல்லி விட்டு செல்கிறார் என்று நினைத்தால் திடீரென மதுரையில் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டினார் அழகிரி. அந்தக் கூட்டத்தில் கிட்டதட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். பல குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக முன்வைத்தார்.

image

“எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக்கினேன். மதுரை கோட்டை நமது கோட்டை. இதை யாராலும் மாற்ற முடியாது. திருமங்கலம் தேர்தலில் போது நான் திமுகவில் இருந்து விலகி இருந்தேன். அப்போது என்னுடைய மைத்துனர், தங்கை, கலாநிதிமாறன், தயாநிதிமாறன், ஸ்டாலின் உள்ளிட்ட எல்லோரும் வந்து என்னிடம் மன்றாடி கேட்டனர். திருமங்கலத்தில் நீங்கள்தான் வேலை செய்ய வேண்டும் என்றும் இது கருணாநிதியின் விரும்பம் என்றும் கூறினர். நான் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னிடம் மன்றாடி மன்றாடி பின்னர் ஒப்புக்கொண்டேன்.

image

சொன்ன மாதிரியே 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. கருணாநிதியை ஃபாலோ செய்துதான் திருமங்களத்தில் வேலை செய்தோம். உழைத்தோம்.வெற்றி பெற்றோம். திருமங்கலம் தேர்தல் என்றால் இந்தியாவே திரும்பி பார்க்கிறது. தென் மண்டலத்தில் அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்தார் கருணாநிதி. என்னுடைய வளர்ச்சியை தடுக்க முட்டுக்கட்டை போட்டார் இப்போதைய தலைவர். திருச்செந்தூரிலும் நாகர்கோவிலிலும் உதயசூரியன் சின்னம் வெற்றி பெற பாடுபட்டேன். இதெல்லாம் நான் கழகத்திற்கு செய்த துரோகமா?

நான் தென்மண்டல அமைப்பு செயலாளர் ஆனதும் கருணாநிதியிடம் கூறி ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி கொடுக்க சொன்னேன். அப்பாவிற்கு பிறகு நீதான் எல்லாம் என்று ஸ்டாலினிடம் சொன்னேன். நான் உனக்காக பாடுபடுவேன் என சொன்னேன். அவரது மனசாட்சிக்கு தெரியும். இதை அவர் மறுக்க முடியுமா? எனக்கு எந்த பதவியும் தேவையில்லை என்றேன். ஆனால் அவர் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என தெரியவில்லை. நான் அமைச்சரானது அவருக்கு பொறாமை வந்துவிட்டது. கருணாநிதி என்னை கூப்பிட்டு கேட்டார். ஸ்டாலின் துணை முதல்வர் பதவி கேட்கிறார் என்று. தாராளமாக கொடுங்கள் என்று சொன்னேன். நான் ஒரு தப்பும் செய்யவில்லை. என்னை ஏன் கட்சியில் இருந்து நீக்கினார்கள். தொண்டருக்காக வாதாடினேன்.

image

ஸ்டாலின் ஒருகாலமும் முதல்வராகவே முடியாது. நான் முதல்வராகவேண்டும் என நினைக்கவில்லை. கொஞ்சம் நாள் பொறுத்திரு என்று சொன்ன எனது அப்பாவின் வார்த்தைக்காக பொறுத்திருந்தேன். நான் என்ன முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது ஆதரவாளர்கள் எதையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்” எனப் பேசினார். இதுதான் திமுக வட்டாரத்தில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

மு.க.அழகிரியின் இந்த மூவ் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் கூறும்போது, “கருணாநிதி உழைத்து பாடுபட்ட கட்சி திமுக. அந்த கட்சி ஆட்சியமைக்க வரும் சமயத்தில் தடையாக இருப்பதை திமுகவினர் கண்டிப்பாக விரும்ப மாட்டார்கள். அழகிரியின் பிரச்னையை அவரது குடும்பத்துடன் பேசி தீர்வு காண வேண்டும் என்பதே இன்னும் பல தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. வரும் தேர்தலில் அழகிரியால் திமுகவிற்கு எவ்வித பாதிப்பும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை” என்றார். இதுகுறித்து பத்திரிகையாளர் இதயா கூறுகையில், “ஆளுமையை எதிர்த்து அழகிரியால் அரசியல் செய்ய முடியும். ஆனால் திமுகவை எதிர்த்து கட்சி தொடங்கி வெற்றிபெறுவது எவ்வளவு கடினம் என்பது அழகிரிக்கே தெரியும்” எனத் தெரிவித்தார். மு.க.அழகிரியின் எதிர்ப்பு திமுகவிற்கு எதிராக முடியுமா? அல்லது மற்ற கட்சிகளுக்கு சாதகமாக அமையுமா என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க, ‘என்னுடன் இவ்வளவு கூட்டம் இருக்கிறது, என்னை கட்சியில் சேர்த்துக்கொள்ள போகிறீர்களா அல்லது எதிர்ப்பை சந்திக்கப்போகிறீர்களா?’ என அழகிரி, ஸ்டாலினை அசைத்து பார்க்கிறாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *